PUBLISHED ON : ஆக 27, 2023

இப்படியும் உதவலாம்!
எங்கள் பகுதியில், ஏராளமான போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள் இருந்தனர். பொது இடங்களில் போஸ்டருக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, அவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து, வறுமையில் வாடினர்.
அவர்களின் நிலையறிந்து, உதவ முன் வந்தார், எங்கள் பகுதி ஓவியர் ஒருவர்.
அவரது ஓவியக்கூடத்தில், போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள் அனைவருக்கும், சுவர் ஓவியங்கள் வரைய கற்றுக் கொடுத்தார்.
சுவர் ஓவியங்கள் வரைவதன் நுணுக்கங்களை, அவரிடம் கற்றுக்கொண்டவர்கள், இப்போது பல இடங்களிலும் ஓவியங்கள் வரைந்து, வருமானம் ஈட்டுகின்றனர்.
முன்பு போஸ்டர் ஒட்டி, சுவரையும் சூழலையும் பாழ்படுத்தியதற்கான பிராயச்சித்தமாக, தங்கள் செலவில் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பேருந்து நிலைய சுற்றுச்சுவர்களில், இலவசமாகவே ஓவியங்கள் வரைந்து அசத்துகின்றனர்.
உதவ நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் உதவலாம் என்று, இவர்களுக்கு உதவிய அந்த ஓவியரை, அனைவருமே பாராட்டுகின்றனர்!
- -வெ.பாலமுருகன், திருச்சி.
சிறுமியின் பொறுப்புணர்வு!
ஊருக்கு செல்ல, பேருந்தில் அமர்ந்திருந்தபோது, 12 வயது சிறுமி ஒருத்தி, அரசு பள்ளி சீருடையுடன் அப்பேருந்தில் ஏறினாள். விளம்பர நோட்டீசை துண்டு துண்டாக கிழித்து, காலியான அதன் பின்புறத்தில் பெயரையும், மொபைல் எண்ணையும் எழுதி, அனைவருக்கும் தந்தாள்.
பிச்சை கேட்க வந்திருப்பதாக, அனைவரும் நினைத்தோம். அதில் சிலர், பள்ளி சீருடையோடு பிச்சையெடுக்க வந்திருக்கிறாளே என ஆதங்கப்பட்டனர்.
ஆனால், அனைவரிடமும் துண்டு சீட்டை கொடுத்த அச்சிறுமி, பேருந்தின் முன்புறம் நின்று, 'நான், அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறேன். என் தங்கை, 5வது படிக்கிறாள். கொத்தனாரா வேலை பார்த்த எங்க அப்பா, விபத்துல இடுப்பு எலும்பு முறிஞ்சு, அரசு காப்பீட்டுல ஆபரேஷன் செஞ்சு, ஓரளவுக்கு தேறி வர்றார்.
'ஆனா, அவரால முன்பு போல கடுமையா வேலை செய்ய முடியல. சின்ன சின்ன மராமத்து வேலைகளை மட்டும் தான் செய்ய முடியுது.
'அதுபோல சின்ன சின்ன வேலை செய்ய, உங்க வீட்டுக்கு ஆள் தேவைப்பட்டா, எங்க அப்பா நம்பருக்கு கூப்பிடுங்க. அப்பா கொத்தனாராகவும், அம்மா சித்தாள் வேலைக்கு வந்து, நீங்க திருப்தியடையற அளவுக்கு நல்லா செஞ்சு கொடுப்பாங்க...' என்றாள்.
தேவைப்படும்போது, நிச்சயம் அழைப்பதாக பலரும் அச்சிறுமியிடம் கூறினர். சிலர், அவளுக்கு பணம் தர முன் வந்தபோது, 'உழைக்காமல் கிடைக்கும் பணம் எனக்கு வேண்டாம்...' என, மறுத்தாள்.
யாசகத்தை விரும்பாத அவளின் சுய மரியாதையையும், குடும்பத்தாருக்கு உதவ எண்ணும் பொறுப்புணர்வையும் கண்டு அனைவரும் மெச்சினோம்!
எஸ். விஜயன், கடலுார்.
கோலம் போட்டு சம்பாதிக்கும் பெண்மணி!
எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர், இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார்.
அந்த பெண்மணி, மாக் கோலம், பொடி கோலம் மற்றும் ரங்கோலி கோலம் அனைத்தும் பிரமாதமாக போடுவார். கல்யாண மண்டபங்கள், கோவில் விழாக்கள், பொது விழாக்கள் மற்றும் வீட்டு விசேஷங்களின் போது, இவர் தான் கோலம் போட வருவார்.
கல்யாண மண்டபங்களில் கோலம் போட, இவ்வளவு பணம் என்று திருமண வீட்டாரிடம் ஒரு தொகையை வாங்கி, அவரிடம் கொடுத்து விடுவார், சமையல் கான்ட்ராக்டர்.
ஆண்டு முழுவதும், ஓய்வு இல்லாமல், விசேஷங்களுக்கு விதவிதமாக கோலம் போட்டு, சம்பாதித்து, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். தன் இரண்டு பெண்களுக்கும் விதவிதமாக கோலம் போட பழக்கியுள்ளார்.
கையில் தொழில் இருந்தால், எந்த காலத்திலும் அந்த கலையை வைத்தே சம்பாதிக்க முடியும் என்பதற்கு, அப்பெண்மணியே உதாரணம்!
- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
