தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (17)

நான் வந்த பாதை! (17)

நான் வந்த பாதை! (17)


PUBLISHED ON : ஆக 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

ஏக் பூல் சார் காண்டே என்ற ஹிந்தி படத்தை, தமிழில் மொழி மாற்றம் செய்து எடுக்க விருப்பினேன். கதாநாயகிக்கு மூன்று தாய் மாமன்கள் இருப்பது போல் கதை அமைந்திருந்தது. மூன்று மாமன்மார்கள் வேடத்தில், கே.ஏ.தங்கவேலு, வி.கே.ராமசாமி, கே.சாரங்கபாணி போன்றவர்களையும், கதாநாயகனாக நானும், கதாநாயகியாக, சரோஜாதேவியும் நடிப்பது என, முடிவு செய்திருந்தேன்.

தன் திருமண விஷயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை, கதாநாயகனிடம் விளக்கிச் சொல்வாள், கதாநாயகி.

'மூன்று மாமன்மார்களும், தங்களின் உயிரை விட மேலாக தன்னை நேசித்து வருபவர்கள். அவர்களை எதிர்த்து நிற்க எனக்கு சக்தியில்லை. அதேசமயம், உங்களை தவிர வேறு எவனையும் கணவனாக ஏற்க என்னால் முடியாது. அதைவிட, என் உயிரையே இழந்து விடுவேன்' என, அழுது புலம்புவாள்.

'கவலைப்படாதே. உன் மூன்று மாமன்மார்களின் முடிவுகளையும் ஒன்றுபடுத்தி, அவர்களின் மனப்பூர்வமான ஒப்புதலையும் பெற்று, நம் இருவரின் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் பார்...' என, ஆறுதல் சொல்வான், கதாநாயகன்.

பிறகு, சிரமப்பட்டு மூன்று கலைகளையும் கற்று தேறி, ஒவ்வொரு மாமன்களிடமும் தன் பெயரை மாற்றிச் சொல்லி வைப்பான்.

மூன்று மாமன்களும், ஒவ்வொரு பெயரை சொல்லி, உனக்கு மாப்பிள்ளை இவன்தான் என்று கூறுவர். கதாநாயகி கண் கலங்குவாள்.

இறுதியில், அந்த மூன்று பேருமே நானே தான் என நிரூபித்துக் காட்டுவான், கதாநாயகன். இருவருக்கும் இனிதே திருமணம் நடக்கும்.

இதுதான் படத்தின் கதை.

இந்த கதையை கொண்ட ஹிந்தி படத்தை, கே.பாலச்சந்தருக்கு போட்டுக் காட்டி, 'நீங்களே வசனம் எழுதி, தமிழ் படமாக எடுத்து தரவேண்டும்...' என்று கூறினேன். அவரும், அப்படத்தை பார்த்து, ரசித்து, ஒத்துக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில் என்னை சந்தித்து, ஒரு விஷயத்தைக் கூறினார், கே.பாலச்சந்தர்.

'தஞ்சை சண்முக வடிவேலு என்பவர், உங்களை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டு, பொருத்தமாக ஒரு கதை வேண்டும் என்றார்.

'உங்களுக்கு தேவையான ஒரு கதையை ஏற்கனவே நான் தேர்ந்தெடுத்து, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி முடித்து வைத்துள்ளதாக அவரிடம் கொடுத்தேன். 'படம் எடுப்பதற்கு பண வசதியில்லை. ஆகவே, படத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று, என்னிடம் சொல்லி விட்டார்.

'எனவே, நான் நேற்று பார்த்த ஹிந்தி படத்துக்கு, தமிழில் வசனம் எழுதி படம் துவக்குவதென்றால் கொஞ்ச நாளாகும். இப்போது தயாராக இருக்கிற, முக்கனித் தோட்டம் என்ற படத்தை எடுப்பது என்று முடிவானால், நாளைக்கே கூட படப்பிடிப்பை துவங்கலாம்...' என்று, கதையை என்னிடம் சொன்னார், பாலசந்தர்.

அதற்கு ஒப்புக் கொண்டேன்.

எஸ்.எஸ்.ஆர்., பட கம்பெனி மூலமாகவே படமெடுப்பது என்று முடிவாயிற்று.

இரண்டொரு நாளில் படப்பிடிப்பை துவக்கினோம். அப்படத்தில் மூன்று கதாநாயகிகள். விஜயகுமாரி, ராஜஸ்ரீ, தேவிகா. கூடவே, அசோகனும் நடித்தார். நாகேஷ், மனோரமா ஜோடியும் உண்டு. நல்ல கதை தான். படம் ஏறத்தாழ, 10 ஆயிரம் அடிகளை நெருங்கி விட்டது.

இக்கதையை ஏற்கனவே திட்டமிட்டு தயாரிக்க இருந்த, தஞ்சை சண்முக வடிவேலு, ஏற்கனவே, இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு, 'அட்வான்ஸ்' கொடுத்து, பத்திரத்தில் அக்கிரிமென்டும் எழுதி வாங்கியுள்ளார். இவ்விஷயத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார், கே.பாலச்சந்தர்.

இப்போது, பணத்தை தயார் செய்து, படம் எடுப்பதற்காக சென்னை வந்தார், தஞ்சை சண்முக வடிவேலு. இங்கு வந்த பிறகு தான், அதே கதை, எஸ்.எஸ்.ஆர்., பிக்சர்சாரால் தயாரிக்கப்பட்டு முடிவடையும் கட்டத்தை நெருங்கி வருகிறது என்ற உறுதியான செய்தி அவருக்கு கிடைத்துள்ளது.

உடனே, தன்னிடமிருந்த தஸ்தாவேஜுகளை காட்டி, 'இனிமேல் இந்த படத்தை தொடரக் கூடாது. இது, சட்டத்தை மீறிய செயல்...' என, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று விட்டார். எனக்கும் ஒரு நகல் அனுப்பியிருந்தார். கடும் கோபத்துக்கு ஆளானேன்.

இதையடுத்து, என்னை வந்து இல்லத்தில் சந்தித்தார், இயக்குனர் கே.பாலசந்தர். அவரே பேசட்டும் என்று மவுனமாக இருந்தேன்.

'படத்தின் பெயரை மாற்றி விடுங்கள். என் பெயர் போட்டு எதிலும் விளம்பரப்படுத்தாதீர்கள். மீதி உள்ள காட்சிகள், அதற்கான வசனங்களை எழுதிக் கொடுத்து விடுகிறேன். மீதி படத்தை நீங்களோ அல்லது வேறு யாரையாவது இயக்கச் சொல்லி, படத்தை வெளியிடுங்கள்...' என்று, 'அரிய' யோசனைகளை சொன்னார்.

என்னைப் பொறுத்தவரையில், என் சொந்த வாழ்க்கையிலோ, அரசியலிலோ பொய், பித்தலாட்டங்களெல்லாம் பிடிக்காது. கோணல் வழி நான் அறியாதது என்பது, என்னை அறிந்தோருக்கு மிக தெளிவாக புரியும்.

கோபத்தை அடக்கி, 'இதுவரை எடுத்த படத்தையும், அது சம்பந்தப்பட்ட நெகட்டிவ்களையும் தீ வைத்து கொளுத்தி விடுகிறேன். இதனால், எனக்கு எத்தனை கோடி ரூபாய் நஷ்டம் என்பது உங்களுக்கு தெரியுமல்லவா...

'என்னால் இதை சமாளிக்க முடியும். வேறு யாராவது சாதாரண பட அதிபர்களாக இருந்தால், என்ன கதியாகி இருப்பர் என்பதை எண்ணிப் பாருங்கள். நீங்கள் இங்கிருந்து போகலாம்...' என, அனுப்பி வைத்தேன். அத்துடன் அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

குமுதம் படத்துக்காக, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, சாரதா கதையை, டி.ஆர்.சுந்தரத்திடம் கூறியிருக்கிறார், இயக்குனர், கோபாலகிருஷ்ணன். அதே கதையை என்னிடமும் ஏற்கனவே சொல்லியிருந்தார்.

கதை எனக்கு பிடித்திருந்தது. ஆனால், கதாநாயகன், கதாநாயகியரின் நடிப்புத் திறமையால் மட்டுமே வெற்றிபெறக் கூடிய கதை. 'நீங்களும், டி.ஆர்.சுந்தரத்திடம் இந்த கதையை பற்றி சொல்லுங்கள்...' என்றார்.

சரி என்று, டி.ஆர்.சுந்தரத்திடம் பேசினேன்.

'கதையா இது... கதாநாயகனுக்கு ஆண்மை போயிடுது. அவனே தன் மனைவியை வேற கல்யாணம் பண்ணிக்க சொல்றான். அது சரியா வராது...' என்று சொல்லி விட்டார், சுந்தரம்.



- தொடரும்.

- எஸ்.எஸ். ராஜேந்திரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us