PUBLISHED ON : ஆக 27, 2023

கே
'லென்ஸ் மாமா அருந்துவது, வெளிநாட்டு சரக்குகள் தான் என்றாலும், அதன் வாயில் நுழைய முடியாத பெயர்களையும், அது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் விலை விபரங்கள் பற்றியெல்லாம் அடிக்கடி குறிப்பிடுகிறீரே...
'நம்மூரில், குடிமகன்கள் பெருவாரியாக பயன்படுத்தும், பிராந்தி, விஸ்கி, ரம் ஆகியவற்றுக்கு உள்ள ஒற்றுமை - வேற்றுமையை சொல்லுங்களேன்...' என்று வில்லங்கமான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார், வாசகர் ஒருவர்.
லென்ஸ் மாமாவிடம் கேட்டு சொல்வதாக கூறி, விஷயத்தை மாமா காதிலும் போட்டேன். மாமா விலாவாரியாக சொன்னது இது:
பிராந்தி - பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது வகை.
விஸ்கி - தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது வகை.
ரம் - கரும்பு சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்டு, வாசனை ஏற்றும் மது வகை.
பிராந்தி என்பது, நடுத்தர மற்றும் எளிய மக்களின் பானம். பிராந்தி, பெரும்பாலும் திராட்சை பழத்திலிருந்தே தயாரிக்கப்படும்; வேறு சில பழங்களை பயன்படுத்தியும் தயாரிக்கப்படும்.
பாட்டிலில் பெரும்பாலும், வி.எஸ்.ஓ.பி., - வி.ஓ., - வி.எஸ்., - நெப்போலியன், எக்ஸ்.ஓ., - வெரைடல் மற்றும் ஹார்ஸ் டி ஏஜ் என, எழுதப்பட்டிருக்கும். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா?
வி.எஸ்.ஓ.பி., -- வெரி சுப்பீரியர் ஓல்ட் பேல்: நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் பழமையான பழச்சாறு.
வி.ஓ., - வெரி ஓல்டு: நான்கு ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான மது.
வி.எஸ்., - வெரி ஸ்பெஷல்: இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான மது.
நெப்போலியன் - மாவீரன் நெப்போலியனின், 'பேவரைட் டிரிங்க்' ஆறு ஆண்டுகள் பழமையான மது.
எக்ஸ்.ஓ., - எக்ஸ்ட்ரா ஓல்டு: பத்து ஆண்டுகள் வரை பழமையான மது.
வெரைடல் - ஒரு குறிப்பிட்ட வகை திராட்சையிலிருந்தே தயாரிக்கப்படும் மது.
ஹார்ஸ் டி ஏஜ் - 35 முதல் 50 ஆண்டுகள் பழமையான மது. ரொம்ப காஸ்ட்லியானது.
இது எதுவுமே தெரியாமல் தான் நம்மாளுங்க, 'வி.எஸ்.ஓ.பி., குவாட்டர் கொடுங்க'ன்னு கேட்பாங்க. ஆனா, நம்ம ஊருல, போலியான சரக்கை நிரப்பி, ஸ்பெஷல் வகை என குறிப்பிடுவர்.
ஓல்டு கீல்ட் எல்லாம் ஒண்ணும் கிடையாது. அம்புட்டும் ஸ்பிரிட். விலையை கூட்டி, நம்மை ஏமாற்ற இங்குள்ள வியாபார முதலைகள் கடைப்பிடிக்கும் ஏமாற்று யுக்தி.
இவ்வாறு கூறியிருந்தார், லென்ஸ் மாமா. மேலும், கூடுதல் தகவலாக அவர் கூறியது:
சமீபத்தில் நடத்தப்பட்ட, 'நேஷனல் பேமிலி ஹெல்த் சர்வே'யின் அடிப்படையில், தமிழ்நாட்டில், 25.4 சதவீத ஆண்களும், 0.3 சதவீத பெண்களும், மதுவுக்கு அடிமையானவர்கள்.
முப்பத்தியேழு லட்சம் பேர் தினக் குடிகாரர்கள். 1.21 கோடி பேர், வார குடிகாரர்கள். 1.05 கோடி பேர், மாத குடிகாரர்கள். 2.30 கோடி பேர், விசேஷ நாட்கள் மற்றும் துக்க நாட்களில் மது அருந்துகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில், நாள் ஒன்றுக்கு சராசரியாக, 70 லட்சம் மது பாட்டில்கள் விற்பனையாகின்றன.
ஒவ்வொரு மது பயனாளிக்கும், மாதம் ஒன்றுக்கு, சராசரியாக, 6,500 ரூபாய் வரை நிரந்தர செலவாக உள்ளது.
மதுவின் மதிப்பீடுகள்
'ஏ' கிரேடு மதுவின் மூலப்பொருளின் ஒரு லிட்டர் விலை, 65.61 ரூபாய்.
'பி' கிரேடு மதுவின் மூலப்பொருளின் ஒரு லிட்டர் விலை, 60.73 ரூபாய்.
'சி' கிரேடு மதுவின் மூலப்பொருளின் ஒரு லிட்டர் விலை, 49.41 ரூபாய்.
தமிழ்நாட்டில், 'சி' கிரேடு மது தான், 80 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. 190 மி.லிட்டர் அளவுள்ள, 'சி' கிரேடு மதுவின் மூல விலை, 9.40 ரூபாய். அதே மது, டாஸ்மாக்கில் விலை, 120 ரூபாய். 120 - 9.40 = 110.60 ரூபாய், ஒவ்வொரு பயனாளியிடமிருந்து பெறப்படுகிறது.
இந்த, 110.60 ரூபாயில், 66.36 ரூபாய் மது உற்பத்தியாளருக்கு லாபமாக கிடைக்கிறது. 42.02 ரூபாய் அரசுக்கும், 2.21 ரூபாய் நிர்வாக செலவுக்கும் பயன்படுகிறது.
மேலே குறிப்பிட்ட கணக்கீட்டின்படி, உரிய தொகை, மது உற்பத்தியாளருக்கு கொள்ளை லாபம் என்பது தெரிய வருகிறது. இந்த மது உற்பத்தி ஆலைகள் யாவும் நேரடியாகவும், மறைமுகமாகவும், அரசியல் தலைவர்களுக்கோ, அவர்களது பினாமிகளுக்கோ சென்றடைகிறது.
இவர்கள் தான் தேர்தல் சூத்ரதாரிகள்; ஜனநாயகத்தை தம் வசப்படுத்துபவர்கள். பல கோடிகளை செலவு செய்து, தம் கட்சியை வெற்றி பெற வைப்பர். இவர்களை பகைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது.
ஆளும் கட்சியாகட்டும் அல்லது ஆண்ட கட்சியாகட்டும், தேர்தலுக்கு, சாராய முதலாளியை நம்பியே உள்ளனர்.
கேள்வி கேட்ட வாசகருக்கு இதையே பதிலாக தந்து, தப்பித்தேன்.
ப
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை, ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது
* பூனை துாங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில், பூனை உறங்காது
* புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது
* பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது
* முயல் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்
* பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில், உங்களுக்கான நீர் ஊற்றை தோண்டுங்கள்
* பறவைகள் துாங்கப் போகும் நேரத்தில் துாங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்
* அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்
* மீன்களைப் போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களை போலவே உணர்வீர்கள்
* அடிக்கடி வானத்தை பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்
* நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மவுனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்
* விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், நாடு நாசமாகாது.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
