
அந்த மாலை வேளை, இரவிடம் கை குலுக்கி விடை பெற்றுக் கொண்டிருந்தது. நேரம், 7:45 மணி.
வாஷ்பேசனில் கை கழுவியபடி, நர்ஸ் புனிதாவிடம், ''ஓ.பி.,யில் இன்னும் எத்தனை பேஷன்ட்ஸ் இருக்காங்க?'' கேட்டார், டாக்டர் செல்வகணபதி.
''பேஷன்ட்ஸ் யாருமில்லை, டாக்டர். ஆனா, ஒரு பொண்ணு உங்களைப் பார்த்து பேசறதுக்காக காத்துட்டிருக்கு.''
செல்வகணபதியின் புருவ மையங்களுக்கு நடுவில், வியப்பு முடிச்சு விழுந்தது.
''பொண்ணா?''
''ஆமா டாக்டர்... வயசு, 25க்குள்ளே இருக்கும்.''
''யாரு... என்னான்னு கேட்டியா?''
''கேட்டேன். பேரு, இன்பான்னு சொன்னா. என்ன விஷயமா டாக்டரைப் பார்க்கணும்ன்னு கேட்டதுக்கு, 'சம்திங் பர்சனல்'ன்னு சொல்லிட்டா. நானும் மேற்கொண்டு ஏதும் விசாரிக்கலை, டாக்டர்.''
''சரி... அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பு. ஓ.பி., பேஷன்ட்ஸ் யாராவது வந்தா, நாளைக்கு வரச் சொல்லிடு.''
நர்ஸ் தலையை ஆட்டிவிட்டு அறையிலிருந்து வெளியேற, ஈரக் கைகளை சிறிய டவலால் துடைத்தபடி, தன் நாற்காலிக்கு வந்து சாய்ந்தார், செல்வகணபதி.
அடுத்த சில விநாடிகளில், அந்த அழகான இளம் பெண், தயக்கத்தோடு உள்ளே வந்தாள். கைகளை கூப்பியபடி மெல்லிய குரலில், ''வணக்கம் அங்கிள்!'' என்றாள்.
''நீ யாரம்மா... இவ்வளவு உரிமையோடு என்னை அங்கிள்ன்னு கூப்பிடறே?''
''என்னை உங்களுக்குத் தெரியலையா, அங்கிள்?''
''தெரியலையே!''
''உங்க நண்பர் ஞானகடாட்சத்தோட பெண்... என் பள்ளி நாட்களில், நீங்க அடிக்கடி திருப்பூர்ல இருக்கிற எங்க வீட்டுக்கு வருவீங்களே?''
நிமிர்ந்து உட்கார்ந்தார், செல்வகணபதி.
''திருப்பூர்ல ஒரு ஸ்பின்னிங் மில்லில், ஜி.எம்.,மா இருக்கிற ஞானகடாட்சத்தோட பொண்ணா நீ?''
''ஆமா அங்கிள்.''
''ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி உன்னைப் பார்த்தது. இப்ப அடையாளமே தெரியலைம்மா... அப்பா, எப்படி இருக்கிறார்?''
''நல்லா இருக்கிறார், அங்கிள்.''
''திருப்பூர்ல நான் டாக்டராய், 'ப்ராக்டீஸ்' பண்ணிட்டிருந்தப்ப, லயன்ஸ் கிளப் மூலமா, அப்பா எனக்கு ரொம்பவும் பழக்கம். மாசத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது சந்திச்சு பேசிடுவோம்.
''நான், சென்னைக்கு வந்தபின், ஒரு மாசம் மொபைல்போன்ல பேசிக்கிட்டிருந்தோம். அதுக்கு அப்புறம் அவர், தன்னோட வேலையில், 'பிசி'யாயிட்டார். நானும் மேற்படிப்புக்காக வெளிநாடு போயிட்டேன்.
''அதனால, அப்பாவுக்கும், எனக்கும் இருந்த தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு, காணாம போயிடுச்சு. அது சரி, நீ இங்கே சென்னையில் என்ன பண்ணிட்டிருக்கேம்மா?''
''நான், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்துட்டிருக்கேன், அங்கிள். மேற்கு மாம்பலத்துல ஒரு ஹாஸ்டலில் தங்கியிருக்கேன். ரொம்ப நாளாவே உங்களை வந்து பார்க்கணும்ன்னு நினைச்சுட்டிருந்தேன். இன்னிக்குத்தான் அது முடிஞ்சுது.''
''என்ன... உடம்புக்கு ஏதாவது பிரச்னையாம்மா?''
''பிரச்னை உடம்புக்கு இல்லை அங்கிள்... மனசுக்கு...''
''மனசுக்கா... நீ என்னம்மா சொல்ற?''
தான் கொண்டு போயிருந்த கைப்பையைப் பிரித்து, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை எடுத்து செல்வகணபதியிடம் நீட்டினாள், இன்பா.
''இந்தப் போட்டோவை பாருங்க, அங்கிள்.''
வாங்கிப் பார்த்தார். ஒரு அழகான இளைஞன், சிரித்துக் கொண்டிருந்தான்.
''யாரம்மா இந்தப் பையன்?''
''பேரு வெங்கடேஷ். ஐ.டி., கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியரா வேலை செய்றார். நானும், இவரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம். வர்ற டிசம்பர்ல கல்யாணம் பண்ணிக்கிற முடிவையும் எடுத்திருக்கோம், அங்கிள்!''
புன்னகையுடன், ''உங்க அப்பா ஞானகடாட்சத்துக்கு, உன்னோட இந்த காதல் விஷயம் தெரியுமா?''
''தெரியும்.''
''அவருக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தானே?''
''இல்ல அங்கிள்... அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை. என் அம்மா கூட, 'கன்வின்ஸ்' ஆயிட்டாங்க. அப்பா தான் பிடிவாதமாய் இருக்கார்.''
''அவருக்கு பிடிக்காம போக என்ன காரணம்...''
செல்வகணபதியின் கேள்விக்கு, இன்பா பதில் சொல்லாமல், மறுபடியும் தன் கைப்பையை பிரித்து, வெள்ளைநிறக் கவர் ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினாள். கவரை பிரித்து, உள்ளே மடித்து வைத்திருந்த வெளிர்நீல வண்ணத்தாளை எடுத்துப் பிரித்துப் பார்த்தார், செல்வகணபதி.
''ஏதோ மெடிக்கல் ரிப்போர்ட் மாதிரி தெரியுது?'' என்றவர், கண்ணாடியை சரியாய் பொருத்தி, தன் பார்வையை அந்த மருத்துவ அறிக்கையில் அலைய விட்டார்.
'ஷார்ப்விஷன் ஐ பவுண்டேஷன்' டெஸ்ட் லேபிலிருந்து கொடுக்கப்பட்ட, 'கலர் ப்ளைய்ண்ட் டெஸ்ட்' சம்பந்தப்பட்ட அறிக்கை அது.
''என்னம்மா இது, 'கலர் ப்ளைய்ண்ட் டெஸ்ட் ரிப்போர்ட்' மாதிரி இருக்குது.''
''அதே தான் அங்கிள்.''
''யாருக்கு இந்த நிறக் குருடு பிரச்னை?''
''பேஷன்ட்டோட பேரைப் பாருங்க, அங்கிள்.''
பார்த்தவர் திகைத்தார்.
''பேர் வெங்கடேஷ்ன்னு போட்டிருக்கு. நீ, காதலிக்கிற பையனா?''
''ஆமா அங்கிள்!''
செல்வகணபதியின் முகம் லேசாய் மாறியது.
''என்னம்மா இது, இவ்வளவு அழகான பையனுக்கு இப்படியொரு பிரச்னையா?''
''போன மாசம் வரைக்கும், வெங்கடேஷுக்கு இந்த நிறக்குருடு பிரச்னையில்லை, அங்கிள். நார்மலாத்தான் இருந்தார். 'ரெஸ்டாரென்ட்'ல, ஒரு தடவை நானும், அவரும் கட்லெட் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, 'சாஸ், சிவப்பு கலர்ல இல்லாம, ஏன் பச்சைக் கலர்ல இருக்கு'ன்னு கேட்டார்.
''மொதல்ல அவர், ஏதோ கிண்டல் பண்றார்ன்னு நினைச்சு, பேசாம இருந்தேன். அவர் திரும்பத் திரும்பச் சொல்லவும் தான், கண்ணுல ஏதோ பிரச்னையிருக்குன்னு உடனடியா, 'ஷார்ப்விஷன் ஐ பவுண்டேஷனு'க்குப் போய், டாக்டரைப் பார்த்தோம்.
''அவர் தான் வெங்கடேஷின் கண்களை, 'டெஸ்ட்' பண்ணிப் பார்த்துட்டு, 'கலர் ப்ளைய்ண்ட்னெஸ்' பிரச்னை இருக்குன்னு சொன்னார்.''
பேசிக் கொண்டே போன இன்பாவின் குரல் சட்டென்று உடைய, மேற்கொண்டு பேச முடியாமல், தலையைக் குனிந்து சில விநாடிகள் மவுனம் காத்தபின், பேச்சைத் தொடர்ந்தாள்.
''வெங்கடேஷுக்கு ஏற்பட்டிருக்கிற, இந்த பிரச்னையை குணப்படுத்த முடியாது. ஆனா, தொடர்ச்சியாய் சிகிச்சை எடுத்துக்கிட்டா, அதுமேற்கொண்டு தீவிரம் அடையாம கட்டுப்பாட்டுக்குள்ளே வெக்க முடியும்ன்னு, டாக்டர் சொன்னார்.
''அவர் சொன்னபடியே சிகிச்சை எடுத்துட்டு வர்றார்... வெங்கடேஷின் இந்த பிரச்னையை குணப்படுத்த முடியாதுன்னு, டாக்டர் சொல்றது உண்மையா, அங்கிள்?''
மையமாய் தலையாட்டிய செல்வகணபதி, பெருமூச்சொன்றை வெளியேற்றி, இன்பாவை ஏறிட்டார்.
''எஸ்... டாக்டர் சொன்னது உண்மைதாம்மா. ஒருத்தருக்கு, 'கலர் ப்ளைய்ண்ட்னஸ்' பிரச்னை வந்துட்டா, முழுவதும் குணமாக்க முடியாது. பிரச்னை ஆரம்ப நிலையில் இருப்பதால், இயற்கையான முறையில், சில பயிற்சிகள் செய்வதன் மூலமாய் அவரால ஒரு இயல்பான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்.''
சற்றே முகம் மலர்ந்தாள், இன்பா.
''ஆர் யூ ஷ்யூர் அங்கிள்?''
செல்வகணபதி மெல்லச் சிரித்து, ''நானும் ஒரு டாக்டர் தான். நான் ஒரு கண் மருத்துவரா இல்லாம போனாலும், கண்களில் எது மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் என்கிற உண்மை எனக்கும் தெரியும்.
''இந்த நிறக்குருடு பிரச்னையில், நாலு வகை இருக்கு. நீ காதலிக்கிற வெங்கடேஷுக்கு ஏற்பட்டு இருக்கிறது, 20 சதவீத, 'கலர் ப்ளைய்ண்ட்னஸ்' தான். முறையான சிகிச்சையில தீர்த்துடலாம்.''
''அங்கிள், நீங்க பேசற நம்பிக்கையான வார்த்தைகளைக் கேட்கும்போது, எனக்கு சந்தோஷமாயிருக்கு... ரொம்ப நன்றி.''
''என்னம்மா நீ, எனக்குப் போய் நன்றி சொல்லிகிட்டு.''
சில விநாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு, கம்மிப்போன குரலில் பேச்சை ஆரம்பித்தாள், இன்பா.
''வெங்கடேஷுக்கு, 'கலர் ப்ளைய்ண்ட்னஸ்' பிரச்னை இருக்கிறதால, என் அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை. அவர் பார்த்து வெச்சிருக்கிற மாப்பிள்ளையைத்தான் நான் கட்டிக்கணுமாம்... எனக்கும், அப்பாவுக்கும் இது விஷயமாய் பெரிய சண்டையே நடந்துட்டிருக்கு.''
''ஆச்சரியமாயிருக்கே... ஞானகடாட்சம் அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாரே?'' என்றார், செல்வகணபதி.
''நிறக்குருடு பிரச்னை, ஒரு குடும்ப வாழ்க்கையை பாதிக்காதுன்னு சொல்ல வேண்டியது தானே?''
''சொல்லிப் பார்த்துட்டேன் அங்கிள்... நான் மட்டுமில்லை, வெங்கடேஷுக்கு சிகிச்சை அளிக்கிற கண் டாக்டர் கூட, அப்பாகிட்டே பேசிப் பார்த்துட்டார். அப்பா அசைந்து கொடுக்காம, பிடிவாதமாய் இருக்கார்.
''இந்த விஷயத்துல, நீங்க தான் எனக்கு உதவி பண்ணணும். அவருக்கு போன் பண்ணி, 'கன்வின்ஸ்' பண்ணணும். நீங்க சொன்னா, அப்பா கேட்பார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.''
''அதுக்கென்னம்மா நான் இப்பவே பேசிடறேன்,'' என்ற செல்வகணபதி, அவளிடமே மொபைல் எண் வாங்கி, ஞானகடாட்சத்தை தொடர்பு கொண்டார்.
மறுமுனையில், 'ரிங்' போய் பத்து விநாடிகளுக்குப் பின் ஞானகடாட்சத்தின் குரல் கணீரென்று கேட்டது.
''என்ன செல்வகணபதி... திடீர்ன்னு போன் பண்ணியிருக்கீங்க. என்னோட ஞாபகம் கூட உங்களுக்கு இருக்கா... சென்னைக்கு போயிட்டா, நண்பர்களை மறந்துடலாம்ங்கிற சட்டவிதி அங்கே இருக்குமோன்னு நினைச்சுட்டேன்.''
''சாரி ஞானகடாட்சம்... வேலை அதிகம் இருப்பதால், அடிக்கடி உன்னோட பேச முடியல.''
''சரி, இப்ப திடீர்ன்னு போன் பண்ணியிருக்கீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா?''
மெல்லப் பேச்சை ஆரம்பித்தார், செல்வகணபதி.
''உங்க மகள் இன்பா, தான் காதலிக்கிற வெங்கடேஷை கல்யாணம் பண்ணிக்க நீங்க எதிர்ப்பு தெரிவிக்கிறதா கேள்விப்பட்டேன். இந்த தகவல் உண்மையா?'' செல்வகணபதி கேட்க, ஞானகடாட்சம் சில விநாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு பேசினார்.
''உண்மை தான்... உங்களுக்கு இந்த விஷயத்தை யார் சொன்னாங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''
''அவங்க யார்ன்னு அப்புறமா சொல்றேன். முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ஞானகடாட்சம்... நிறக்குருடு ஒரு பிரச்னையே கிடையாது.''
''என்ன சொல்றீங்க செல்வகணபதி. நீங்க ஒரு டாக்டர். கண் ஒரு நுட்பமான உறுப்பு. அதுல பிரச்னை இருக்கிறது, சாதாரண விஷயமா என்ன?''
செல்வகணபதி மெல்லச் சிரித்து, ''நோ நோ... நீங்க நினைக்கிற மாதிரி அது ஒரு பிரச்னையே கிடையாது. சிகிச்சை எடுத்துக்கிட்டா, கொஞ்ச நாள்ல குணமாக வாய்ப்பு இருக்கு. இதை நான் உங்களுக்கு நண்பனா சொல்லலை. டாக்டரா சொல்றேன், நம்புங்க ஞானகடாட்சம்.''
மொபைல்போனின் மறுமுனையில் நிசப்தம் நிலவியது.
''என்ன பேச்சையே காணோம்?'' என்றார், செல்வகணபதி.
''நான் ஒரு கேள்வி கேட்டா, நீங்க தப்பா நினைக்க மாட்டிங்களே?'' என, தயங்கியபடி கேட்டார், ஞானகடாட்சம்.
''தாராளமா கேளுங்க.''
''ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கிற உங்க மக பேரு சுகிர்தா தானே?''
''ஆமா...''
''உங்க பொண்ணு சுகிர்தா, வெங்கடேஷ் மாதிரியான ஒரு பையனைக் காதலிச்சிருந்தா, நீங்க, அவளை அவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதிப்பீங்களா?''
''ஒய்நாட்... கண்டிப்பா நான் சம்மதிச்சிருப்பேன்.''
''ஆர் யூ ஷ்யூர்?''
''இதுல சந்தேகப்பட என்ன இருக்கு. கொஞ்சம் கூட தயக்கமில்லாம ஓ.கே., சொல்லிடுவேன்.''
''அப்படீன்னா பிரச்னை முடிந்தது.''
''என்ன சொல்றீங்க, ஞானகடாட்சம்?''
''சொல்றதுக்கு என்ன இருக்கு... அந்த நிறக்குருடு பாதிப்புள்ள வெங்கடேஷை காதலிக்கிறது, என்னோட மகள் இன்பா கிடையாது.''
''அப்புறம்?''
''உங்க மகள் சுகிர்தா தான்...''
''என்ன சொல்றீங்க?''
''உண்மையைத் தான் சொல்லிட்டிருக்கேன், செல்வகணபதி... உங்க மகள் சுகிர்தாவும், வெங்கடேஷும் கடந்த ரெண்டு ஆண்டுகளாய் ஒருத்தரையொருத்தர் விரும்பிக்கிட்டிருக்காங்க.
''வெங்கடேஷுக்கு இப்படிப்பட்ட ஒரு கண் பிரச்னை இருக்குன்னு உங்ககிட்ட சொன்னா, நீங்க கல்யாணத்துக்கு மறுப்பு தெரிவிப்பீங்களோன்னு, சுகிர்தா ரொம்பவும் பயப்பட்டா. என்கிட்டயும், என் மகள்கிட்டேயும் விஷயத்தைச் சொல்லி யோசனை கேட்டா.
''இந்தப் பிரச்னையை எப்படி தீர்ப்பதுன்னு நானும், இன்பாவும் யோசிச்சோம். வெங்கடேஷின் நிறக்குருடு பிரச்னையில் உங்க, 'ரியாக் ஷன்' எப்படியிருக்கும்ன்னு தெரிஞ்சுக்கதான் இப்படியொரு நாடகம் நடத்தினோம்.
''ஆனா, நீங்க அதை ஒரு பிரச்னையாவே எடுத்துக்காம கல்யாணத்துக்கு ஒத்துக்கீட்டீங்க. ரியலி யூ ஆர் க்ரேட்,'' என, மறுமுனையில் ஞானகடாட்சம் பேசிக் கொண்டே போக, செல்வகணபதி, சற்றே முகம்மாறிப் போனவராய், இன்பாவைப் பார்த்தார்.
அவள் ஒரு சிறிய புன்னகையோடு, ''வெரி வெரி சாரி... அங்கிள்...'' என்று, மெல்லிய குரலில் முனகினாள்.
ராஜேஷ்குமார்