தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நதி திருவிழா ரகசியம்!

நதி திருவிழா ரகசியம்!

நதி திருவிழா ரகசியம்!


PUBLISHED ON : ஆக 02, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக., 2 - ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்றால் அனைவருக்கும் தெரியும், நதிக்கரை திருவிழா என்று. குறிப்பாக, காவிரி நதிக்கரையில் கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும்.

சோழ மன்னர்கள் காலத்தில் சிறப்பாக இருந்த இந்த விழா, இப்போது, தண்ணீர் பற்றாக்குறையால் களையிழந்து விட்டது. எனினும், நம் பெண்கள், தங்கள் வம்ச விருத்திக்காக செய்யும் பூஜைகள் நின்று விடவில்லை என்பது ஆறுதல்.

ராஜராஜசோழனின் நண்பரான, வந்தியத்தேவன், காவிரிக்கரையில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவை ரசித்த காட்சிகள் குறிப்பிடத்தக்கவை.

தங்கள் முறைப்பெண்கள் அல்லது காதலிகள் சூடி வரும் பூவை, அவர்கள் அறியாமல் தலையிலிருந்து எடுக்கும் இளைஞர்கள், அதை பெருகியோடும் காவிரி நதியில் போடுவர். அது, ஒரு மடை வழியாக சென்று, மறுபுறமாக வெளி வருவதைக் கண்டு, கை தட்டி மகிழ்வர்.

தங்கள் பெற்றோர், பாக்கு மட்டையில் தரும் கூட்டாஞ்சோறையும், சித்ரான்ன வகைகளையும் குழந்தைகள் உண்டு களித்து, அந்த மட்டைகளை, காவிரியில் வீசுவர்; அவை அடித்துச் செல்லப்படுவதை கண்டு ஆரவாரம் செய்வர்.

இதில் ஒரு விசேஷத்தைப் பாருங்கள்... இக்காலத்தில் நாம் மக்காத பிளாஸ்டிக் தட்டுகளில் வைத்து, உணவை சாப்பிடுகிறோம். இது உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு.

அக்காலத்தில், மக்கள், பாக்கு மட்டைகளை பயன்படுத்தி உள்ளனர். இது, எளிதில் மக்கி விடும். சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்திருந்தனர்.

அது மட்டுமல்ல, அன்று, இரு கரையும் பொங்கி ஓடியது, காவிரி. இதன் வேகத்தில், ஆற்றில் போடப்படும் கழிவுகள் எளிதில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால், தண்ணீர் மாசுபடவில்லை.

இந்த விழா, ஆடி, 18ம் நாள் கொண்டாடப்பட்ட ரகசியம் தெரியுமா...

அக்காலத்தில் வசித்த முனிவர்கள் சிலர், காவிரிக்கரையில் குழி தோண்டி, உள்ளே இறங்கி, மண்ணைப் போட்டு தங்களை மூடச் செய்தனர். பின், உள்ளே அமர்ந்து, 'பிருத்வி யோகம்' (தவம்) செய்தனர். இப்படி, 18 தெய்வ சக்தி மிக்க இடங்களில் தவமிருந்த முனிவர்கள், ஆடி, 18ம் நாள் வெளியே வந்தனர்.

தாங்கள் நின்ற, 18 இடங்களிலும், பெருகியோடிய காவிரியில் நீராடினர். அவர்கள் நீராடிய இடங்கள் தெய்வாம்சம் பெற்றன. அந்த இடங்களில் மக்களும் நீராடி, இறையருள் பெற்றனர்.

பெண்கள், இந்நாளில், தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டியும்; கன்னிகள், தங்களுக்கு நல்ல மணமகன் அமைய வேண்டியும்; விவசாயிகள், விளைச்சல் பெருக வேண்டியும் பிரார்த்தித்தனர். அந்த வழக்கம், இன்றும் இருக்கிறது.

நாமும், நதிகளை தெய்வமாக மதித்து, அவற்றுக்குரிய மரியாதையைக் கொடுத்து வணங்கினால், அவை பெருகி ஓடும்.

ஆக., 2 - ஆடிப்பெருக்கில், நாம் எடுக்க வேண்டிய உறுதி இதுவே.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us