தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 02, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்களாலும் முடியும்!

வேலை நிமித்தமாக, கோவையிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, சாயிபாபா காலனிக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம், 'பஞ்சர்' ஆனது.

அந்த ரோட்டில், 'பஞ்சர்' ஒட்டும் கடையை தேடி சென்று, வாகனத்தை நிறுத்தினால், அந்த கடையை நடத்துபவர், ஒரு திருநங்கை. அவருக்கு உதவியாக பணிபுரியும் இருவருமே திருநங்கையரே.

'பஞ்சர் பார்க்க வேண்டும்...' என்றதும், 'அசால்ட்'டாக சக்கரத்தை கழற்றி, ஐந்து நிமிடத்தில், 'பஞ்சர்' ஒட்டினர்.

சட்டென்று வேலையை முடித்த அவர்களை பாராட்டி, 'இந்த, 'பஞ்சர்' கடை துவங்கும் ஐடியா எப்படி வந்தது...' என்று கேட்டேன்.

'பஞ்சர் ஒட்டும் கடை நடத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த ஊக்கத்தாலும், பயிற்சியாலும் இக்கடையை ஆரம்பித்தேன்; உதவியாளர் கூட திருநங்கையரையே பணியமர்த்தினேன். எங்களாலும், எந்த தொழிலும் திறம்பட செய்ய முடியும்...' என்று, மலர்ந்த முகத்துடன் கூறிய அவரை, வாழ்த்தி வந்தேன்.

- வெற்றிச்செல்வன், கோவை.

கருப்பே அழகு!

பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு, ஆறு மாதத்திற்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. கணவரும், அவளும் நல்ல நிறம். ஆனால், தாத்தா - பாட்டி போல், கருப்பான நிறத்தில் குழந்தை பிறந்திருந்தது.

குழந்தை வயிற்றில் இருக்கும்போது, நிறைய குங்குமப்பூவை சாப்பிட்டும் பலன் இல்லையே... குழந்தை கருப்பா பிறந்துடுச்சே என்ற கவலையில், 'யூ டியூபில்' குழந்தையின் நிறத்தை அதிகரிக்க, 'டிப்ஸ்' பார்க்க ஆரம்பித்தாள், அந்த பெண்.

முட்டையின் வெள்ளை கருவில் ஊற வைத்த கடலைப்பருப்பு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பலவிதமான பொடிகள் கலந்து, குழந்தைக்காக, பிரத்தியேகமாக குளியல் பொடி தயார் செய்தாள்.

ஒரு மாதமாக குளியல் பொடியை போட்டும், குழந்தையின் நிறம் மாறவில்லை. மாறாக, குழந்தையின் சருமம் வறண்டு, அலர்ஜி வர ஆரம்பித்து விட்டது.

நாங்களும், பெண்ணின் பெற்றோரும், 'அட்வைஸ்' செய்த பின், நிறத்தை கூட்ட பொடி பூசுவதை விட்டு விட்டாள். குழந்தை மருத்துவரிடம் காட்டி, அலர்ஜியை சரி செய்தாள்.

நிறத்தை பற்றிய அறியாமை, எத்தனை தலைமுறை ஆனாலும் மாறுவதில்லை. கருப்பே அழகு என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும், 'யூ டியூப்' பக்கம் போகாமல், வயதானோரிடம் ஆலோசனை கேட்டு செய்வது நல்லது.

குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் அல்லவா!

— லஷ்மி நாராயணன், புதுச்சேரி.

நட்பு பாராட்டுங்கள், நலமாக வாழுங்கள்!

'ஒவ்வொருவர் வாழ்விலும், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட காரணமானவர்கள், நண்பர்கள். நட்பு பாராட்டுவது, உங்கள் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்...' என்று, 12 வகையான ஆய்வுகள் கூறுகின்றன.

தனியாக இருப்பவர்களுக்கும், சரியான நட்பு வட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும், 'ஹார்ட் அட்டாக்' அதிகம் வருவதாக கண்டறிந்துள்ளனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வயதில் மூத்தவர்களுக்கு, இது மிகவும் பயனளிப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

அதிக நண்பர்களுடன் பழகுபவர்களுக்கு, ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

உலகில், உண்மையான நட்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. சிறந்த நண்பர்களை அடையாளம் காண, கிட்டத்தட்ட, 2,௦௦௦துக்கும் மேற்பட்டோரை, ஆய்வுக்கு உட்படுத்தி, கண்டறிந்த விதிகள்:

* உங்கள் நண்பர்கள், நீங்கள் எப்போது கூப்பிட்டாலும், உடனே உங்கள் போனை எடுத்து பேச வேண்டும்

* எந்த பிரச்னை என்றாலும், நியாயமான கருத்தை சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும்

* இக்கட்டான சூழ்நிலையில் தோள் கொடுக்கும் முதல் ஆளாகவும், நீங்கள் சாய்ந்து அழ, தோள் கொடுக்கும் முதல் ஆள் அவராக இருக்க வேண்டும்

* உங்கள் ரகசியங்களை என்றென்றும் காப்பாற்றுகிறவராக இருக்க வேண்டும்

* உங்களுக்கு ஓர் ஆபத்து என்றால், நீங்கள் சொல்லாமலே அவர் களத்தில் குதித்து, உங்களுக்கு உதவுபவராக இருக்க வேண்டும்.

இந்த விதிகளை, உங்கள் நண்பர்களிடம் மட்டும் எதிர்பார்க்க கூடாது; நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

- கோவீ.ராஜேந்திரன், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us