தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இரண்டாவது தீபாவளி!

இரண்டாவது தீபாவளி!

இரண்டாவது தீபாவளி!


PUBLISHED ON : நவ 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமலியிடம், ''டாக்டர் மாப்பிள்ளை எப்படி இருக்கிறாரு, என்ன சொல்றாராம்?'' என்றான், ரகு.

'இவர் சாதாரணமாகக் கேட்கிறாரா... இல்லை கிண்டல் செய்கிறாரா?' என, நினைத்துக் கொண்டாள், கமலி.

வீட்டின் மூத்த பெண், கமலி. அவளுக்கும், ரகுவுக்கும் திருமணமாகி, ரித்திக் என்ற, மகன் இருக்கிறான். 'எலக்ட்ரானிக்ஸ் ஹோல் சேல் பிசினஸ்' மற்றும் சின்னதாக, 'லேத்' வைத்துள்ளான், ரகு.

கமலியின் தங்கை, விமலாவுக்கு மூன்று மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை டாக்டர். தன் சக்திக்கு மீறியே, டாக்டர் வரன் பார்த்து திருமணத்தை நடத்தினார், கமலியின் அப்பா.

இரண்டு மகள்களுக்கும் நல்லபடியாக வாழ்க்கை அமைத்து தந்த திருப்தி. பெரிய மாப்பிள்ளை ரகுவின் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார்.

''கமலி... அப்பா பேசறேன்மா.''

''சொல்லுங்கப்பா, எப்படி இருக்கீங்க. அம்மா நல்லா இருக்காங்களா?''

''எல்லாரும் நல்லா இருக்கோம். அடுத்த வாரம் தீபாவளி வருது, உன் தங்கைக்கு, தலை தீபாவளி. மூத்த மாப்பிள்ளைக்கு மரியாதை பண்ணிட்டு தான், இளையவருக்கு மரியாதை செய்யணும். அதனால், நீயும், மாப்பிள்ளையும், ரித்திக்கை அழைச்சுகிட்டு இரண்டு நாள் முன்பே வந்துடுங்க,'' என்றார், அப்பா.

''எதுக்குப்பா, எங்களை அழைச்சுக்கிட்டு. ஏற்கனவே கல்யாண செலவுக்கு இருந்த நிலத்தை வித்தாச்சு. விமலாவுக்கு, தீபாவளி, 'சீர்' செய்யவே நிறைய பணம் தேவைப்படும். இதில் எங்களை வேறு கூப்பிடறீங்க?''

''அப்படி இல்லம்மா, எல்லாம் முறைப்படி செய்யணும். பெரிய மாப்பிள்ளையை அழைத்தால் தான் மரியாதை. செலவு ஆகத்தான் செய்யும், எப்படியாவது சமாளிச்சுப்பேன். நீயும், மாப்பிள்ளையும் அவசியம் வந்துடுங்க. மாப்பிள்ளைகிட்டேயும் பேசறேன்,'' என்றார்.

'பாவம்... இரண்டு பெண்களைப் பெற்று, படிக்க வைத்து, நல்ல முறையில் திருமணம் செய்து விட்டார். இனி, 'பென்ஷன்' பணத்தை வச்சு தான் காலத்தை ஓட்ட வேண்டும். சேமிப்பும் அதிகமில்லை.

'விமலாவின் திருமணம் முடிந்த கையோடு, தீபாவளி வந்து விட்டது. இந்தச் செலவையும் பார்க்க வேண்டும்...' என, அப்பாவை நினைத்து கவலைப்பட்டாள், கமலி.

''கமலி... இந்த வருஷமும் தீபாவளிக்கு, உங்கப்பா அழைச்சிருக்காரு. மூத்த மாப்பிள்ளையை தான் முதலில் கவனிக்கணுமாம். என்ன செய்யறாருன்னு பார்ப்போம். டாக்டர் மாப்பிள்ளைக்கு சமமாக நமக்கு வருமானம் வரப்போகுது. நமக்கு தீபாவளி செலவு மிச்சம்,'' என்றான், ரகு; எந்த பதிலும் சொல்லவில்லை, கமலி.

போனில் அழைத்தாள், விமலா.

''அக்கா நீயும், மாமாவும் குட்டி பையனோடு தீபாவளிக்கு சேலத்துக்கு வர்றீங்களாமே. அப்பா சொன்னார். நாங்களும் வரோம். தலை தீபாவளி, தடபுடலாக இருக்கப் போகுது.

''அம்மாகிட்ட என்னென்ன பலகாரங்கள் வேணும்ன்னு, 'லிஸ்ட்' அனுப்பிட்டேன். அவருக்கு ராக்கெட், சரவெடின்னா ரொம்பப் பிடிக்குமாம். அதனால், நிறைய பட்டாசு வாங்கி வைக்கச் சொல்லியிருக்கேன்,'' என்றாள், விமலா.

'கடவுளே, இவ்வளவு செலவையும் அப்பா சமாளிக்க வேண்டும்...' என, கமலியின் மனம் நினைத்தது.

''கமலி, பிசினஸ் விஷயமாக நாலு நாள், பெங்களூரு போக வேண்டியிருக்கு. அதனால், தீபாவளிக்கு முதல் நாள் தான் போக முடியும். அப்பாகிட்ட சொல்லிடு,'' என்றான், ரகு.

அம்மாவுக்கு உதவி செய்ய, இரண்டு நாள் முன்னதாக போக முடியவில்லையே என வருத்தப்பட்டாள், கமலி.

தீபாவளிக்கு முதல் நாள்...

வீடே கலகலப்பாக காட்சியளித்தது. விமலாவும், அவளது கணவனும் வந்திருந்தனர். புது மாப்பிள்ளை என்ற சங்கோஜமில்லாமல், எல்லாரிடமும் சகஜமாகப் பேசிப் பழகினான்.

உள் அறையில், பெரிய பெரிய, பிளாஸ்டிக் வாளியில் முறுக்கு, சீடை, அதிரசம், லட்டு, ஜிலேபி என, வகை வகையான பலகாரங்கள்.

''அம்மா இவ்வளவும் நீ ஒருத்தியாவே செய்தியா?'' கேட்டாள், கமலி.

''இல்லம்மா, என்னால முடியல. எல்லாம் ஆள் வச்சு தான் செய்தோம். சரி, உள்ளே வா. உனக்கும், விமலாவிற்கும் வாங்கி வச்சியிருக்கிற பட்டுப் புடவையை காட்டறேன். அப்புறம் இரண்டு மாப்பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியா மோதிரம் வாங்கி இருக்கோம்,'' என்று, முகம் மலரச் சொன்னாள், அம்மா.

'ஸ்டோர் ரூமில்' இரண்டு அட்டை பெட்டி நிறைய வெடி இருந்தது.

'அம்மா வீட்டிற்கு வந்த சந்தோஷத்தை விட, அப்பாவிற்கு இந்தத் தீபாவளிக்கு எவ்வளவு செலவு...' என, கமலியின் மனம் நினைத்தது. இருப்பினும், விமலாவின் டாக்டர் கணவனுக்கு சமமாக, தன் கணவருக்கும் மோதிரம், பட்டு வேஷ்டி, சட்டை, 'தனக்கும் பட்டுப் புடவை என, குறையில்லாமல் அப்பா எடுத்திருப்பதை நினைத்து பெருமைப்பட்டாள்.

தீபாவளி அன்று, ஸ்நானம் செய்து, பட்டுப்புடவை உடுத்தி, சாமி கும்பிட்டு, வெடிகள் வெடித்து, விருந்து சாப்பிட்டு என, பொழுது சந்தோஷமாகப் போயின.

சாப்பிட்ட பின், கணவன் இருந்த அறைக்கு வந்தாள், கமலி.

''என்ன, எங்கப்பா மூத்த மாப்பிள்ளையை நல்லபடியாகக் கவனிச்சுட்டாரா... உங்களுக்கு திருப்திதானே,'' என, பெருமிதம் பொங்க, புன்னகையுடன் கேட்டாள், கமலி.

''நானே எதிர்பார்க்கலை, கமலி. எனக்கு எதுக்கு மோதிரம். ரொம்பவே நிறைவாக செஞ்சுட்டாரு. தலை தீபாவளியை விட, இந்த இரண்டாவது தலை தீபாவளி தான் ரொம்பவும் சிறப்பாக இருந்துச்சு.

''பாவம், உன் அம்மா - அப்பா. இந்த, 10 நாட்களில் அதிக வேலை. ஒரு மாசம் நம் வீட்டில் வந்து, 'ரெஸ்ட்' எடுக்கச் சொல், நானும் வரச்சொல்லி கூப்பிடறேன்,'' என்றான், ரகு.

கமலியின் மனம் பூரித்தது.

கணவனோடு விடைபெற்று கிளம்பினாள், விமலா.

''நாங்களும் கிளம்பறோம், மாமா. நீங்களும், அத்தையும், ஒரு வாரத்தில் கிளம்பி, எங்க வீட்டிற்கு வந்து, ஒரு மாசம் தங்கியிருந்துட்டு போகலாம். நான் உங்களுக்கு மருமகன் மட்டுமில்லை, மகனும் தான். நீங்க உரிமையோடு வரலாம்,'' என, அன்புடன் அழைத்தான், ரகு.

''கட்டாயம் வர்றோம், மாப்பிள்ளை. கடவுள் எங்களை நிறையவே ஆசிர்வாதம் பண்ணியிருக்காரு. நல்ல குணமுள்ள இரண்டு மாப்பிள்ளைகள் எங்களுக்கு கிடைச்சிருக்காங்க,'' என்றார், கமலியின் அப்பா.

கம்பெனியில் வேலை முடித்து, வீட்டிற்கு கிளம்பும்போது, ரகுவின் மொபைல் போன் அழைத்தது.

''சொல்லுங்க மாமா, எப்படி இருக்கீங்க?'' என்றான், ரகு.

''நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை,'' என்றார், கமலியின் அப்பா.

''யாருக்கு யார் நன்றி சொல்றது. என்ன மாமா இதெல்லாம்?''

''இல்லை மாப்பிள்ளை, ஒரு மகனாக, என் நிலைமை தெரிஞ்சு, எவ்வளவு செய்திருக்கீங்க... வேலை விஷயமாக பெங்களூரு போன நீங்க, சேலத்தில் இறங்கி, எங்களோடு கடைக்கு வந்து, துணிமணிகள் எடுத்து...

''இரண்டு பேருக்கும் மோதிரம் வாங்கி... அது மட்டுமில்லாமல், சிவகாசியிலிருந்து வெடிகளை வரவழைத்து, பலகாரங்கள் செய்ய பணம் தந்து... எங்களுக்கு ஒரு பைசா செலவு வைக்கலை. இத்தனையும் செய்தது மட்டுமில்லாமல், இது, கமலிக்கு தெரிய வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க.

''நீங்க செய்த உதவிகளை நான் ஏத்துக்கிறேன். இருந்தாலும், 'அப்பாவுக்கு நிறைய செலவு வச்சுட்டோம்'ன்னு கவலைப்பட்டாள், கமலி. அவள்கிட்டயாவது ஒரு வார்த்தை. 'இதெல்லாம் உன் கணவன்தான்ம்மா செய்தாரு'ன்னு சொல்லி, சந்தோஷப் பட்டிருப்பேன்.''

''இல்லை மாமா... என்ன தான் நான் கொடுத்ததுன்னு தெரிஞ்சு, கமலி சந்தோஷப்படறதை விட, இதெல்லாம் அப்பா, சின்ன மாப்பிள்ளைக்கு செய்தது போல, தன் கணவருக்கும் குறைவில்லாமல் செய்திருக்காருன்னு, பிறந்த வீட்டை நினைச்சு பெருமைப்பட்டாளே... அதுதான் மாமா, அவளுக்கு சந்தோஷத்தை விட திருப்தியைத் தரும்.

''இதை நீங்க பெரிசுபடுத்த வேண்டாம். உங்க மகனாக இருந்து இந்த செலவுகளை சந்தோஷமாக ஏத்துக்கிட்டேன். சரி, நீங்க ரெண்டு பேரும் எப்ப புறப்பட்டு வர்றீங்க?'' என்றான், ரகு.

மகனாக மாறிய மாப்பிள்ளையை நினைச்சு, மனம் பெருமிதத்துடன், ''வரேன் மாப்பிள்ளை,'' என்றார், கமலியின் அப்பா.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us