PUBLISHED ON : நவ 05, 2023

பாகவதர் என்ற பட்டப் பெயரில், எத்தனையோ பேர் இருந்தாலும், பெரும்பாலோர் சுட்டிக் காட்டுவது, எம்.கே.தியாகராஜ பாகவதரை மட்டும் தான்.
தன் கந்தர்வ கானத்தால், கோடிக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்ட ரூபலாவண்ய நடிகராக திகழ்ந்தவர், தியாகராஜ பாகவதர்.
மார்ச் 1, 1910ல், பெற்றோருக்கு மூத்த மகனாக பிறந்தார். உடன் பிறந்தோர், ஐவர். இரண்டு தம்பிகள் மற்றும் மூன்று சகோதரிகள்.
வீட்டின் அருகில் ஓடும், உய்யக்கொண்டான் ஆற்றில், கழுத்தளவு நீரில் நின்று, சாதகம் செய்வது, பாகவதரின் வழக்கம். அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அதி தீவிரமான பயிற்சி தான், பாகவதர் குரலை தங்கமயமாய் ஆக்கியது.
பாகவதரின் பாடலைக் கேட்டு வியந்து, 'உங்கள் தொண்டையில் தங்கச் சுரங்கமா உள்ளது...' என்று, பாராட்டியுள்ளார், ஒரு வெளிநாட்டுக்காரர்.
தன் உள்ளம் கவர்ந்தது, சங்கீதம் ஒன்றே என்பதை, இள வயதிலேயே புரிந்து வைத்திருந்தான், சிறுவன் தியாகராஜன்.
அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்பட்ட பாகவதரின் தந்தை, தன் மூத்த மகன், இப்படி பொறுப்பின்றி இருக்கிறானே என, கோபம் கொண்டார்.
பாட்டு, கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். சாப்பாட்டிற்கு உதவுமா என்ற தாபமும், கோபமும் தந்தையிடம் இருந்தது. தன்னோடு சேர்ந்து, தொழிலில் அக்கறை செலுத்த வேண்டும் என விரும்பினார்.
ஆனால், பெரிய சங்கீத வித்வான்களைப் போல், தானும் பாட வேண்டும் என்ற தீராத ஆசையிலிருந்த சிறுவன் தியாகராஜனுக்கு, மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சமாகவே தெரிந்தன.
லட்சியம் உறுதியாய் நெஞ்சினில் பதிந்துவிட, வீட்டை விட்டு வெளியேறினான், தியாகராஜன்.
பதறிப் போனார், தந்தை.
தியாகராஜன் வழக்கமாக செல்லும் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தார்; சினேகிதர்கள் வீட்டிற்கு எல்லாம் சென்று கேட்டார்.
எங்கும், 'தெரியாது... தெரியாது...' என்ற பதில் தான் கிடைத்தது.
துடித்துப் போனார், தந்தை.
அப்போது, 'உன் மகன் தியாகராஜனை, கடப்பாவில் பார்த்தேன்...' என்றார், நண்பர் ஒருவர்.
அவ்வளவு தான். உடனடியாக கடப்பாவுக்கு சென்று, தெருத் தெருவாக சல்லடைப் போட்டு தேட, கண்களில் தட்டுப்பட்டு விட்டான், பாச மகன்.
'தியாகராஜா தியாகராஜா...' என்று அரற்றிக்கொண்டே, மகனை நோக்கி ஓடினார், தந்தை.
அதற்குள் அங்கே கூட்டம் கூடி விட்டது.
'அய்யா, நீங்கள் இந்தப் பையனின் தந்தையா?' என்று அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டனர்.
'ஆமாம்...' என்றார்.
'ஐயா, இவன் சாதாரண பையன் அல்ல. நீங்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறீர்கள் தெரியுமா? அதனால் தான், இந்த கந்தர்வன் தங்களுக்கு பிள்ளையாகப் பிறந்திருக்கிறான்...' என்று கூறி மகிழ்ந்தனர்.
இப்போது, அவருடைய மனம் தெளிவாகி விட்டது. இனி, பிள்ளை எப்படி விருப்பப்படுகிறானோ அப்படியே தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
'வீடு திரும்பும் வழியில், பெருமாளுக்கு நன்றி தெரிவித்து, நெஞ்சார தரிசனம் செய்துவிட்டு செல்வோம்...' என்று, அன்பு மகனுடன் திருப்பதிக்கு சென்றார், தந்தை.
திருமாலை கண்டவுடன், தியாகராஜனுக்கு, தித்திக்கும் தேனமுதம் பாய்ந்தோட துவங்கி விட்டது. ஆம், தன்னை மறந்து பாட ஆரம்பித்து விட்டான்.
சன்னிதியை விட்டு வெளியே வந்த அர்ச்சகர், தியாகராஜனின் தந்தையிடம், 'கிருஷ்ண பகவானின் புல்லாங்குழல் எப்படி தேவகானத்தைப் பொழியுமோ, அத்தகைய கான மழையை பொழிந்தான், தங்கள் மகன்.
'இதோ பெற்றுக் கொள்ளுங்கள், பெருமாளின் திரிசூர்ணம். இதை நீரில் குழைத்து, இவன் நாவில் தடவுங்கள். கந்தர்வ கானம் பொழிபவனாக விளங்குவான்...' என்று வாழ்த்தி, அனுப்பினார்.
சிறுவன் தியாகராஜன், பார் போற்றும் சரித்திர புருஷனாக மாறப்போகும் வேளை வந்து விட்டது.
ரசிக ரஞ்சனி சபா, 1914ல், எப்.ஜி.நடேசய்யர் என்பவரால் துவங்கப்பட்டது. சுருக்கமாக, எப்.ஜி.என்., என்று அழைப்பர்.
தென்னக ரயில்வேயில், பெரிய பதவியில் இருந்தவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில், பெரும் புலமை பெற்றவர். கலைகளில் ஆர்வம் கொண்டவர். தன் சபா மூலம் கணக்கற்ற கலைஞர்களை உருவாக்கியவர்.
ரசிக ரஞ்சனி சார்பில் நடத்தப்பட்ட நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றான், தியாகராஜன்.
முதன் முதலில் போட்டது, 'ஹரிச்சந்திரா' நாடகத்தில், லோகிதாசன் வேஷம் தான். முதல் நாடகத்திலேயே ஜெயக்கொடி நாட்டி விட்டான், சிறுவன் தியாகராஜன்.
நாடகத்தில், எஜமான் காள கண்டருக்காக, லோகிதாசனின் அம்மா சந்திரமதி, தர்ப்பைப் புல் பறிக்க, காட்டுக்கு செல்வாள். அம்மாவின் பின்னே, 'அம்மா பசிக்குதே...' என்று பாடல் பாடிக் கொண்டு செல்வான், லோகிதாசன்.
சிறுவனது குரலின் வளமும், நடிப்பின் திறமும், பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
'இந்த பச்சைக் குழந்தையை இப்படி பசிக்கொடுமைக்கு ஆளாக்கிய, பாவி காளகண்டன் எங்கே இருக்கிறான். அடித்து நொறுக்குங்கடா அவனை...' என்று மேடையின் மீது தாவி ஏறி விட்டனர், ஏராளமான ரசிகர்கள்.
காளகண்டனாக வேஷம் தரித்தவர், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட, படுதா கீழிறக்கப்பட்டது.
அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
— தொடரும்
பிரபல பாடலாசிரியர், பாபநாசம் சிவனை, தமிழ் தியாகையர் என்று போற்றுவர். கணக்கற்ற பாடல்களை இயற்றியவர். கவிஞர், நடிகர், பாடகர் மற்றும் அருமையான இசையமைப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர்.
பாகவதரைக் காட்டிலும், 20 வயது மூத்தவர். பாகவதரை, தன் மகன் போல் நினைத்தவர். அவர் மீது அதிக வாத்ஸல்யம் காட்டியவர். அது, தந்தை, மகனிடம் காட்டும் அன்பை ஒத்ததாகும்.
பாபநாசம் சிவனை, தன் அப்பா ஸ்தானத்தில் வைத்து, மதித்து வந்தார், பாகவதர்.
ஒருமுறை, பாகவதரிடம், 'அப்பா தியாகராஜா, உனக்கு பாட்டு எழுத, நான் எத்தனை பிரயாசைப்பட வேண்டியுள்ளது தெரியுமோ! உன்னுடைய ரூபலாவண்யத்திற்கும், கந்தர்வக் குரலுக்கும் ஏற்றார்போல், வார்த்தைகளைத் தேடித் தேடி போட வேண்டியிருக்கிறது. ராகத்தையும் வெகு கவனமாக சேர்க்க வேண்டியிருக்கிறது...' என்றாராம், சிவன்.
- எஸ். கார்முகிலோன்
