PUBLISHED ON : நவ 05, 2023

அ நிறம் | அளவு
தலைக் குப்புற
கவிழ்த்துப் போட்டாலும்
எழுந்து வருகிறது தீ!
மரங்கள், மலைகள்
எதுவரினும் எது எதிர்படினும்
இலக்கை அடைகிறது காற்று!
தோண்டித் தோண்டி
களைத்துப் போகும்
மானுடத்தை
தாங்கிப் பிடிக்கிறது பூமி!
பிளாஸ்டிக் குப்பிகளில்
அடைத்து அடைத்து
விற்றாலும்
மழையாய் வருகிறது நீர்!
கரி அமிலத்தால்
காரித் துப்பினாலும்
முகம் காட்டத்
தயங்காமல் வருகிறது ஆகாயம்!
தினமும்
அபகரித்துக் கொண்டாலும்
அடுத்த நாளும்
பூக்கிறது செடி!
கண்டம் துண்டமாய்
வெட்டிச் சாய்த்தாலும்
துளிர்க்கிறது மரம்!
கருவேல முட்கள்
காயப்படுத்தி விட்டதாக
மூக்கைச் சிந்தும்
பறவை பார்த்ததுண்டா?
எந்த மாடும்
தன் கொம்புகளில்
தீனியை கட்டிக்கொண்டு
மேயப் போவதில்லை!
கல் தடுக்கியதாய்
முள் குத்தியதாய்
பிறர் மட்டம் தட்டியதாய்
பிதற்றும் மனிதா
பிரபஞ்சத்திடம்
நாளும் பாடம் கற்றுக்கொள்!
— சு. கல்யாணசுந்தரம், புவனகிரி.
