தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : நவ 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.வி.பதி எழுதிய, 'உலக வெற்றியாளர்கள்' நுாலிலிருந்து:

தமிழகத்தை காமராஜர் ஆட்சி செய்து வந்த காலம். அப்போது, தமிழகம், கல்வித்துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தது. கல்விக்காக, காமராஜர் செய்த சேவைகளை பாராட்டி, குஜராத் பல்கலைக் கழகம், அவருக்கு, டாக்டர் பட்டம் அளிக்க முன் வந்தது.

எப்படியாவது விருதுகளையும், டாக்டர் பட்டங்களையும் பெற்று, தன் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ள விரும்பும் இந்த உலகத்தில், தன்னை தேடி வந்த டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்து விட்டார், காமராஜர்.

'நான் எந்த சாதனையையும் செய்யல. நம் நாட்டில் எவ்வளவோ படிச்சவங்க, சாதனை செய்தவங்க இருக்காங்க. அவங்களுக்கு இந்த பட்டங்களை கொடுத்து, கவுரவப்படுத்துங்க...' என்று சொல்லி விட்டார்.

எளிமை, மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற தீர்மானமான எண்ணம், பதவி, பட்டங்களுக்கு ஆசைப்படாத மனசு என, ஒரு தலைவருக்குரிய இந்த இலக்கணங்கள் அனைத்தும், காமராஜருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. இதனாலேயே அவர் இரண்டு முறை, இந்தியாவின் பிரதம மந்திரிகளை தீர்மானிக்கும் அளவிற்கு வாழ்க்கையில் உயர்ந்தார்.

விருத்தாம்பிகை அண்ணாதுரை எழுதிய, 'படித்ததில் சுவைத்தது!' நுாலிலிருந்து:

அமெரிக்காவின், ஹாசன்வில் எனும் ஊரிலிருந்த சிறுவனுக்கு, புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆசை. ஆனால், அவன் தந்தையோ ஏழை. 'கேடில் விழுச்செல்வம் கல்வி' என்ற மனநிலையில், பிறரிடம் யாசித்து, 'அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்' என்ற புத்தகத்தை ஒருவரிடம் இரவல் வாங்கி படித்தான்.

இரவு நேரம், உறக்கம் வரவே, வீட்டின் ஜன்னலோரத்தில் வைத்து, துாங்கி விட்டான்.

இரவு பெய்த மழையில் புத்தகம் நனைந்து விட்டது. மறுநாள் காலையில், புத்தக உரிமையாளரிடம், 'என் கவனக் குறைவால் புத்தகம் நனைந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்...' என்றான்.

உரிமையாளரோ, 'இதை என்னால் மன்னிக்க முடியாது. புத்தகத்திற்கான விலையை கொடுத்துவிட்டு செல்...' என்றார்.

'என்னிடம் பணம் இல்லை...' என்றான், சிறுவன்.

'புத்தக விலைக்கு ஈடாக, என் வயலில் மூன்று நாட்கள் நீ வேலை செய்ய வேண்டும்...' என்றார், புத்தக உரிமையாளர்.

சிறுவன் சம்மதித்து, 'ஐயா, நான் வேலை செய்து முடித்ததும், தாங்கள் இந்த புத்தகத்தை எனக்கே தரவேண்டும்...' என்றான்.

வேலை செய்து முடித்து, அப்புத்தகத்தை பெற்றுச் சென்றான்.

ஓய்வு நேரங்களில் அப்புத்தகத்தை படித்து, தன் அறிவை மேம்படுத்திக் கொண்டான். அச்சிறுவன்தான், அமெரிக்க நாட்டின், 16வது ஜனாதிபதி, ஆபிரகாம் லிங்கன்.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us