PUBLISHED ON : நவ 05, 2023

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 30 வயது பெண். திருமணமானவள். எம்.எஸ்சி., படித்து, தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தேன். நல்ல வரன் வரவே, உடனடியாக நிச்சயதார்த்தம் செய்தனர்.
திருமணத்துக்கு ஆறு மாத இடைவெளி இருந்ததால், நாங்கள் தினமும் போனில் பேசி, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம். அவரது மென்மையான, நேர்மையான குணம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், எங்களது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. கணவர், சி.ஏ., படித்து, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
திருமணத்துக்கு பின், வயதான மாமனார் - மாமியாரை கவனித்துக் கொள்ள, என் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். என் மீது மிகுந்த பாசமாக இருப்பர், மாமனார் - மாமியார்.
சொந்த வீடு, போதிய வருமானம் இருந்ததால், மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். ஆனால், இப்போது அந்த மகிழ்ச்சியில் சற்று குறைவு ஏற்பட்டு விட்டது. காரணம், குழந்தை இல்லாதது தான்.
நானும், கணவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில், இருவருக்குமே சிறு பிரச்னை இருப்பதாகவும், சிகிச்சை எடுத்தால், குழந்தை பிறக்கும் எனக் கூறினர், மருத்துவர்கள். தற்சமயம், இருவருமே சிகிச்சையில் இருக்கிறோம்.
இது எல்லாம் தெரிந்தும், என்னை மட்டுமே குறை கூறி, தினமும் விஷ வார்த்தைகளால் மனதை புண் படுத்துகிறார், மாமியார்.
தனிக்குடித்தனம் போய் விடுவோம் என்று கணவர் கூறியும், வயதானவர்களை விட்டுச் செல்ல எனக்கு மனம் வரவில்லை. வயதான அவர்களிடமிருந்து, ஒரே மகனை பிரிப்பது பாவம் என, நினைத்து, அவர்களது பேச்சுகளை சகித்துக் கொண்டிருக்கிறேன்.
சிகிச்சை முடிந்ததும், நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதே வீட்டில், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்.
அதுவரை, பெரியவர்களின் வெறுப்புக்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு,உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
பொதுவாக நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி விடுவது நல்லதல்ல. நீயும், கணவரும், ஆறு மாதம் போன் பேசி, ஒருவரையொருவர் புரிந்து கொண்டீர்கள் என்பது, அக்மார்க் பொய்.
இருவரும் முகமூடி அணிந்து கொண்டு நடித்திருக்கிறீர்கள். உங்கள் திருமணத்துக்கு முந்தைய ஆறு மாத வெட்டி பேச்சு தான், திருமணத்திற்கு பிந்தைய இரண்டு ஆண்டு அவலங்களின் அடிப்படை.
நீ, தியாகி பட்டம் சூட விரும்பிய அறிவிலி. வயதான மாமனார் - -மாமியார் உன்னிடம் வந்து, 'அம்மா மருமகளே... தயவுசெய்து, உன் வேலையை விட்டுவிட்டு எங்களை கவனி...' என்று கெஞ்சினார்களா?
உடனடியாக, நீ மீண்டும் ஆசிரியர் பணிக்கு போ. தினம் நீ, 10 மணி நேரம் வீட்டில் இல்லாதது, நீயும், மாமியாரும் சண்டை இட்டு கொள்ளும் நேரடி வாய்ப்புகளை குறைக்கும்.
'திருமணமாகி புகுந்த வீடு வரும் பெண்கள், 'மலடி' எனும் அவப்பெயரை போக்க, கையோடு ஒரு குழந்தையை துாக்கி வரலாமா...'- என, மாமியாரைக் கேள்.
உங்கள் இருவரின் மருத்துவ அறிக்கைகளை, மாமனார் - மாமியார் இருவரிடமும் படித்துக் காட்டி, பிரச்னைகளை விளக்கு.
'மகன் - மருமகள் இருவரிடமும் உடலில் பிரச்னைகள் இருக்கும்போது, தொடர்ந்து என்னை மட்டும் குற்றம் சாட்டி, மன ரீதியாக முடக்குவது குழந்தையின்மை காலத்தை அபாயகரமாக நீட்டிக்குமே. இது தேவையா...' என, மாமியாரை கேள்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், உனக்கு இரட்டைக் குழந்தைகளே பிறக்கும்.
பிறருக்கு தீங்கிழைக்காத சுயநலம் தப்பே இல்லை. மாமனார் - மாமியார் வீட்டுக்கு அருகிலேயே வீடு பார்த்து, நீயும், கணவரும் தனிக்குடித்தனம் போங்கள்.
ஆரோக்கியமான இடைவெளி, உறவுகளை பாதுகாக்கும். வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருக்க, தகுந்த பணியாள் அமர்த்திக் கொள்.
வேலைக்கு போ, குழந்தை பெற்றுக் கொள். புகுந்த வீடு, பிறந்த வீட்டாரோடு, இணக்கமாக இரு. வாழ்க்கை பூலோக சொர்க்கமாகும். வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
