தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/யார் பெரியவர்?

யார் பெரியவர்?

யார் பெரியவர்?


PUBLISHED ON : நவ 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தான் என்ற கர்வம் அதிகம் உள்ள, மன்னர் ஒருவர் இருந்தார்.

'எல்லாரும் எனக்கு தொண்டர்கள். நான் யாருக்கும் தொண்டன் இல்லை...' என்று பெருமையாக, அடிக்கடி சொல்வார்.

அந்த அரண்மனையிலேயே, அறிவும், அனுபவமும் மிகுந்த, முதிய அமைச்சர் ஒருவர் இருந்தார். அவருக்கு மன்னரின் செய்கை சரியாகப் படவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த அமைச்சர், ஒரு நாள், 'மன்னா, உலகிலேயே கடவுள் ஒருவர் தான், பெரியவர். மற்றபடி நாம் எல்லாருமே சேவகர்கள் தான். அடுத்தவருக்குத் தொண்டு செய்வதன் மூலம் தான், மனித குலம் வாழும். அப்படி தொண்டு செய்யாமல் யாரும் இருக்க முடியாது...' என்றார்.

'அது எப்படி அனைவரும் தொண்டராக முடியும். நீங்கள் சொல்கிறபடி, இன்று மாலைக்குள் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால், நுாறு பசுக்களை வெகுமதியாகத் தருவேன்; இல்லையென்றால் தலையை வெட்டி விடுவேன்...' என்றார்.

அந்த நேரம் பார்த்து, பிச்சைக்காரர் ஒருவர் வந்தார்.

அவரைப் பார்த்த அமைச்சர், 'மன்னா, உள்ளே சமையற்கட்டிலிருந்து, இவருக்குக் கொஞ்சம் சாதம் கொண்டு வந்து போட அனுமதி அளிக்க வேண்டும்...' என்றார்.

அனுமதி அளித்தார், மன்னர்.

தன் கையிலிருந்த கைத்தடியை, கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, சாதம் கொண்டு வர போனார். சாதத்துடன் அவர் திரும்பும்போது, கைத்தடி நழுவி விழுந்து, அவர் கால் இடறியது.

'இந்த கைத்தடியை கொஞ்சம் எடுங்கள்...' என்றார், அமைச்சர்.

மன்னரும் எடுத்துக் கொடுத்தார்.

பிச்சைக்காரரிடம் சாதத்தைக் கொடுத்து விட்டு, பலமாக சிரித்தபடியே திரும்பினார், அமைச்சர்.

'எதற்காகச் சிரிக்கிறீர்கள்?' என்றார், மன்னர்.

'மன்னா, நாம் எல்லாருமே ஒருவருக்கொருவர் தொண்டர்கள் என்று சொன்னது தவறு என்று கூறினீர்களே... இப்போது பார்த்தீர்களா, நான் அந்தப் பிச்சைக்காரருக்குத் தொண்டு செய்தேன்.

'நீங்கள் என் கைத்தடியை எடுத்துக் கொடுத்து, எனக்குத் தொண்டு செய்தீர்கள். ஒருவருக்கு ஒருவர் தொண்டு செய்வது தான் மனித இயல்பு. மேலும், கடவுள் தான் பெரியவர். நாம் அனைவருமே அவரது தொண்டர்கள் தான்...' என்றார், அமைச்சர்.

அவர் சொன்னதைப் புரிந்து கொண்ட மன்னர், 'நீங்கள் சொல்வது தான் உண்மை. கடவுள் தான் பெரியவர். நாம் அனைவருமே தொண்டர்கள் தான். சொன்னபடி, உங்களுக்கு, நுாறு பசுக்களை தருகிறேன்...' என்றார்.

'மன்னா, எனக்கு வேண்டாம். அதை யாராவது ஏழைக்குக் கொடுங்கள்...' என்றார், அமைச்சர்.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us