PUBLISHED ON : ஆக 14, 2011

இனிய வாசக, வாசகிகளே... நெல்லை வாசகி ஒருவர், தங்கள் வீட்டில் நடந்த சோகக் கதையை என்னுடன் பகிர்ந்து கொண்டார். 'இதை, 'பட்டாம்பூச்சி' வாசகர்களுக்கு தெரியப்படுத்துங்கள்... நாங்கள் செய்த முட்டாள் தனத்தை, வேறு யாரும் செய்துவிடக் கூடாது ஜெபராணி...' என்று எழுதியுள்ளார். மிகவும் வேதனையுடன், அவர்களின் கதையை கூறுகிறேன்; படித்து, விழிப்புணர்வு அடையுங்கள்...
நெல்லை மாவட்டத்தில், வர்த்தகத்துக்கு பெயர் பெற்ற, ஒரு ஊரில் வசிக்கிறோம். எங்கள் குடும்பத்தில், நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள். மூத்த பெண், எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். நாங்கள் சற்று வசதியானவர்கள் என்பதால், பணக்கார வரன்கள் நிறைய வந்தன. அவற்றை எல்லாம் விட்டு, விட்டு, உறவினர் ஒருவர் சொன்னார் என்பதால், சிவகாசியைச் சேர்ந்த, அந்த மாப்பிள்ளையை முடிவு செய்தோம்.
'மாப்பிள்ளை மிகவும் பக்தியானவர், இறை பணிகளில் ஈடுபாடு உள்ளவர்...' என்று கூறியதால், அவரின் பேச்சை மட்டுமே நம்பி, அவரது குடும்பம், குணம், வருமானம் எதையுமே விசாரிக்காமல், பெண்ணை கொடுத்தோம். வரதட்சணையாக நிறைய பணம், நகை, பொருட்களும் கொடுத்தோம்.
ஆனால், திருமணம் ஆன நாளில் இருந்து, எங்கள் சகோதரியை அடித்து, உதைத்து, சாப்பாடு கொடுக்காமல், 'பணம் வாங்கி வா...' எனச் சொல்லி, மாமியார், நாத்தனர் என, குடும்பமே எங்கள் சகோதரியை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
ஒரு வழியாக, பஞ்சாயத்துப் பேசி, என் சகோதரியை அனுப்பி வைத்தோம். இப்போது தான் தெரிகிறது, மாப்பிள்ளை வீட்டார் பற்றிய செய்திகள். மாப்பிள்ளையின் தகப்பனார் சரியான பெண் பொறுக்கியாம்; இரண்டு மனைவிகள் வேறு. மூத்த மனைவியை, அவர் தினம், தினம் அடித்துச் சித்தரவதை செய்வாராம். இதனால், அந்த அம்மா, தன் மகனான எங்கள் மாப்பிள்ளையிடம், 'நீ வளர்ந்து பெரியவனானதும் உனக்கு வரும் மனைவியை அடித்து நொறுக்குடா மகனே... அது தான் ஆண்மைக்கு அழகு...' என சொல்லியே வளர்த்துள்ளார்.
அத்துடன், ஒரு முறை என் சகோதரியின் மாமனார், தன் மனைவியை அடித்து நொறுக்குவதைப் பார்த்து ஆத்திரம் கொண்ட மாப்பிள்ளை, கீழே கிடந்த கட்டையை எடுத்து, தன் தகப்பனாரை அடித்து நொறுக்கியிருக்கிறார். காயமடைந்த அவர், மூன்றாம் நாளில் இறந்துள்ளார். இவ்வளவு விஷயங்களையும் விசாரிக்காமலே, நாங்கள் எங்கள் சகோதரியை கட்டிக் கொடுத்து விட்டோம்.
தன் தந்தையை போலவே, மூர்க்க குணம் கொண்ட மாப்பிள்ளை, எங்கள் தங்கையை தினம், தினம் அடித்து துவம்சம் செய்கிறார்; அதற்கு, அவரது தாயும், நான்கு சகோதரிகளும் உடந்தை. மாப்பிள்ளையின் நண்பர்கள், உறவினர்கள், யார் வந்தாலும், அவர்களை திட்டி சாபமிட்டு, என் தங்கையுடன் சம்பந்தப்படுத்தி பேசுவதால், ஒருவரும் என் தங்கைக்கு உதவி செய்ய வருவதில்லை.
அவ்வப்போது கோபித்துக் கொண்டு வருவாள். ஒவ்வொரு முறையும், பஞ்சாயத்து பேசி, பணம் கொடுத்து அனுப்பி வைப்போம். இதற்கிடையில், என் தங்கைக்கு, குறை பிரசவத்தில், ஒரு ஆண் குழந்தை, நீர் கோர்த்துக் கொண்டு பிறந்தது. சரியான சிசிச்சை செய்யாமல், அந்தக் குழந்தை இறந்து போனது. அதன் பிறகு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். பிள்ளைகள் தினம், தினம் அவன் செய்யும் கொடுமைகளைக் கண்டு, நடு நடுங்குகின்றன.
ஒரு நாள் என் தங்கையை கொலை செய்ய முயற்சித்துள்ளான். அந்த நேரத்தில், யாரோ ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்ததால், உயிர் தப்பி இருக்கிறாள். இக்கொடுமையையும் சகித்துக் கொண்டாள் என் தங்கை. மற்றொரு நாள், தான் பெற்ற மகனையே, கொலை செய்ய முயற்சித்திருக்கிறான் அந்த படுபாவி. அதைக் கண்டதும் மனம் உடைந்த என் தங்கை, தன் பிள்ளைகளுடன் தப்பித்து, எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாள். தற்போது, எங்கள் வீட்டில்தான் இருக்கிறாள்.
மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தோம்; ஆனால், அவர்கள் கவுன்சிலிங் மட்டுமே செய்தனர். அதை மதிக்காமல், சேர்ந்து வாழும் போது மீண்டும் கொடுமைப்படுத்துகிறான். அதை விடக் கொடுமை என்னவென்றால், சட்டப்படி என் சகோதரியை பிரியாமலே, சமீபத்தில், இன்னொரு பெண்ணை மணந்து வாழ்கிறான். என் தங்கையின் வாழ்க்கை நிர்கதியாகி உள்ளது என, எழுதியிருந்தார் நெல்லை வாசகி; என் மனம் மிகவும் பாரமாகிப் போனது.
'திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்...' என, சும்மாவா சொன்னார்கள். உங்கள் செல்ல மகள்களை திருமணம் செய்து கொடுக்கும் போது, மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றி தீர விசாரிக்க வேண்டியது உங்கள் கடமை. என்ன தான் உறவினர்கள் சொன்னாலும், அவர்கள் குடும்பம், குலம், கோத்திரம் பற்றி நீங்கள் அல்லவா தீர விசாரிக்க வேண்டும்? வாழப் போவது உங்கள் செல்ல மகள் அல்லவா!
ஒரு புடவை வாங்க, நாலு கடை ஏறி, இறங்குகிறோம். வாழ்க்கை விஷயத்தில் உங்கள் குடும்பத்தினரின் அலட்சியப் போக்கால், <உங்கள் சகோதரியின் வாழ்க்கையே வீணாகி விட்டதே...
பெற்றோர்களே... தீர விசாரித்து முடிவு செய்யுங்கள்.
— தொடரும்.
ஜெபராணி ஐசக்
