தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாரைத்தான் நம்புவதோ?

மத்திய அரசு பணியிலிருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கும் நான், ஓய்வுக்குப் பிறகு வசிக்க, வீடு கட்டும் பொருட்டு, நிலம் ஒன்று வாங்கினேன். வாங்கியுள்ள நிலத்தில், வில்லங்கம் ஏதும் உள்ளதா என்று அறிய, சார்-பதிவாளர் அலுவலகத்தில் இ.சி., போட்டுப் பார்த்தேன். உரிய கட்டணமும், சிறப்புக் கட்டணமும், அதாங்க லஞ்சமும் கட்டிப் பெற்ற வில்லங்கச் சான்றிதழைப் படித்துப் பார்த்து, நொந்தே போனேன்.

சாம்பிளுக்கு ஒன்று... 'குறிப்பிடப்பட்ட தேர்வில் மனுதாரர் தாமே சரிபார்க்கவில்லை என்பதால், இந்த அலுவலகத்தில் போதிய கவனத்துடன், தேவையான அளவில் சரிபார்க்கப்பட்டது. ஆனால், இந்த சான்றிதழில் உள்ள முடிவுகளில் பிழைகள் ஏதேனும் இருப்பின், அவற்றுக்கு இத்துறை பொறுப்பேற்காது!'

கழுவுகிற மீனில், நழுவுகிற மீனாய், இப்படி பதிவுத்துறை அலுவலகம் பொறுப்பேற்காது என்றால், இப்படியொரு சான்றிதழை ஏன் அரசு வழங்க வேண்டும்?

சார்-பதிவாளர் அலுவலகம் என்ன பொது நூலகமா; மனுதாரர் தாமே விவரங்களை சரிபார்த்துக் கொள்வதற்கு?

அரசு வழங்கும் வில்லங்கச் சான்றிதழே இப்படியொரு வில்லங்கத்தோடு இருந்தால், யாரைத்தான் நம்புவது?

— எஸ்.சச்சிதானந்தம், சென்னை.

சிக்கன் சிக்கனம்!

நான் அசைவம் சாப்பிடும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். மட்டன் விலை எலும்புக்கறி, 360 ரூபாய்க்கும், தனிக்கறி, 400 ரூபாய்க்கும் விற்கிறது. ஒரு சில சிறு மீன்களைத் தவிர, முள் இல்லாத சுவையான மீன்கள், மட்டன் விலையை விட அதிகம். அதனால், பிராய்லர் சிக்கன்தான், வாரமிருமுறை வாங்கி சாப்பிடுவேன்.

அன்றைய நிலவரத்தை பொறுத்து, விலை கிலோ, 100 - 150க்குள் விற்கும். ஒன்றரை கிலோ எடையுள்ள, ஒரு கோழியை உரித்தால், அதில், தலை 50 கிராம், கால் 50 கிராம், மேற்தோல் 50 கிராம் என, எல்லாவற்றையும் வெட்டி விடுகின்றனர். ஈரல்களை, இரைப்பைகளை கிலோ, 50 ரூபாய்க்கு விற்கின்றனர்.

ஒரு நாளைக்கு தமிழகத்தில், பத்து லட்சம் கிலோ சிக்கன் பயன்படுகிறது என்றால், அதில், 8 சதவீதம் கழிவாய் போய் விடுகிறது. சிங்கப்பூரில், கோழிக் கால்கள் விருப்பமான உணவுப் பொருளாக பயன்படுகிறது.

கோழியின் தேர்ந்தெடுக்கப்பட்ட குடல் பகுதி கூட, உணவாக உதவும். நாம்தான் வறட்டு கவுரவம் கருதி, அவற்றை ஒதுக்குகிறோம்.

இனியாவது,கோழியின் இறக்கைகளை தவிர, மீதி அனைத்தையும் உணவாய் உட்கொண்டு, கோடிக்கணக்கான பணத்தை மிச்சபடுத்துவீர்களா?

— ஆர் எம்.ஹேமந்த் குமார், திருச்சி.

மனதை பாதிக்காமல்...

நடந்து முடிந்த, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் பாடத்தில், என் மகள், 88 மதிப்பெண் எடுத்திருந்தாலும், பிளஸ் 1-ல், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடம் எடுப்பதற்கு தயங்கினாள்.

ஏனெனில், பத்தாம் வகுப்பில், அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியர், மாணவியர் நன்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எப்போதும் திட்டிக் கொண்டே பாடம் நடத்துவாராம். மாணவியர் நன்கு படித்து, பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாலும், 'காப்பி அடித்து தான் நீங்கள் இவ்வளவு மதிப்பெண் எடுத்து இருப்பீர்கள்...' என, குறை கூறிக் கொண்டே இருப்பாராம். அதுமட்டுமல்லாமல், மற்ற பிரிவு வகுப்புகளையும் உதாரணம் காட்டி பேசுவாராம். இதனால், அறிவியல் ஆசிரியரை கண்டாலே, மாணவியர் எரிச்சல் அடைவராம்.

ஆசிரியர்களே... மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டிப்பது சரிதான்; ஆனால், அது, அவர்கள் மனதை பாதிக்காத வகையில் இருக்கட்டும்!

— எஸ்.கங்காதேவி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us