PUBLISHED ON : செப் 25, 2011

இதுவரையில் பட்டாம்பூச்சிகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நான், இன்று, 'குட்டி பட்டாம்பூச்சிகள்' பற்றி சொல்லப் போகிறேன்... அதாங்க, இந்த காலத்து குழந்தைகளைத் தான் சொல்கிறேன்.
அய்யோ... அய்யோ... அய்யோ... என்ன சாமர்த்தியம்.... எத்தனை அறிவு... உஷார் என, எப்படித்தான் பிறக்கும் போதே இவ்வளவு சாமர்த்தியம் வந்து விடுகிறதோ, தெரியவில்லை.
நாம் எல்லாம் பிறக்கும் போது, பாவம் போல கண்ணை மூடி, தூங்கிகொண்டு இருந்திருப் போம். இந்தக் காலத்து குழந்தைகள், பிறந்தவுடனேயே கண்களை உருட்டி பார்ப்பதும், 'ஏசி' ரூம் சுகம் தேடுவதும், 'ஏசி'யை சற்று அணைத்து விட்டாலே, 'ம்ஹும்...' என்று சிணுங்குவதும், நாம் செல்லமாக கொஞ்சினால், சிரிப்பதும், கொஞ்சம் அதட்டி பேசினால், 'ம்ஹும்...' என்று சிணுங்குவதும்... என்ன ஆச்சரியமாக இருக்கிறது தெரியுமா? அத்துடன், இக்குழந்தைகள் செய்கிற சேட்டைகள் சூப்பர்.
என் தோழியின் மகள் ஷைனி, யு.கே.ஜி., படிக்கிறாள். படிப்பில் படுசுட்டி; அழகிலும் தான். இந்த காலத்தில், எந்த குழந்தைகள் அழகாக இல்லை. மார்க்கெட்டில் விதவிதமாக செருப்புகள், 'ஷூ'க்கள், பைகள், பேன்சி கிளிப்கள், செயின், உடல் தெரியும்படி அழகிய ஆடைகள் என, குவிந்து கிடக்கிறது.
அதையல்லாம் போட்டு, சூப்பராக கலக்குறாங்க இந்த கால குழந்தைகள். கையிலேயே ஒரு மேக்-அப் செட்டுடன், அப்பப்ப, 'டச்-அப்' வேறு. நாம் எதுவும் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டாம்.
சரி... விஷயத்துக்கு வருகிறேன்... இந்த ஷைனிக்கு ஒரு பாய் பிரண்ட், கி÷ஷார். இவன் எப்பவும் வகுப்பில் ஷைனி கூடத்தான் உட்காருவானாம். ஷைனி ஸ்கூலுக்கு லீவு போட்டா போதும்... அடுத்த நாள், இவளது நோட்டில் முதல் நாள் பாடங்களை எழுதி தருவது, ஷைனிக்கு பிடித்த ஸ்நாக்ஸ் தருவது என, ஏக கவனிப்பு.
ஒருநாள் ஷைனியை பார்த்து கேட்டு இருக்கிறான்... 'ஷைனி... ஐ லவ் யூ டீ... நாம் கல்யாணம் செய்துக்கலாமா?' என்று. அதற்கு ஷைனி, என்ன சொன்னாள் தெரியுமா?
'நான் கிறிஸ்து; நீ இந்து. இது எப்படி நடக்கும்?' என்று கேட்டு இருக்கிறாள்.
'அதெல்லாம் சமாளித்துக் கொள்ளலாம்டீ...' என்றானாம் கி÷ஷார்.
இதை வீட்டில் வந்து ஷைனி சொன்னதும், என் தோழிக்கு ஒரே அதிர்ச்சி. என்னிடம் சொல்லி, புலம்பி தீர்த்து விட்டாள்.
சரி... இதை விடுங்க...
என் தங்கைக்கு, இரண்டு குழந்தைகள். மூத்தவனுக்கு வயது நாலரை; இளைய மகளுக்கு மூன்றரை வயது. தங்கையும் வேலைக்கு செல்கிறாள். எனவே, வீட்டில் இரண்டு வேலைக்காரிகள் உண்டு. தங்கை மகள் ஹனி, சோபாவில் உட்கார்ந்து, தன்னை பார்த்துக் கொள்ளும் ஆயாவை அழைத்து, 'ஆயா... புதிதாக வந்திருக்காளே கல்பனா... அவள் நல்லா வேலை செய்கிறாளா... என்னை நல்லா பார்த்துக்குவாளா?' என்று கேட்டதும், ஆயாவுக்கு சிரிப்பு தாங்க வில்லை.
'நல்லா பார்த்துக்குவா; நீ ஒண்ணும் கவலைப்படாதே...' என்று சொல்லி இருக்கிறாள் ஆயா.
ஒருமுறை ஹனி, தன்னோட சாக்லெட்டை சோபா மீது வைத்துவிட்டு போய் விட்டாள். அதையெடுத்து, சாப்பிட்டு விட்டான் அவளது அண்ணன் சாம்.
தன் சாக்லெட்டை தேடி இருக்கிறாள் ஹனி. இல்லை என்றதும், ஸ்டைலாக கால் மேல் கால் போட்டு, சோபாவில் உட்கார்ந்து, 'ஆயா... இங்கே வா... என் சாக்லெட் எங்கே?' என்று கேட்டு இருக்கிறாள்.
'உங்க அண்ணனிடம் கொடுத்து விட்டேன் செல்லம்...'ன்னு சொல்லி இருக்கிறாள் ஆயா. உடனே, சாமுக்கு கோபம் வந்து விட்டது.
'ஏய் ஹனி... நான் உன்னோட சாக்லெட்டை எடுக்கல... ஆயா கொடுத்தாள்; நான் சாப்பிட்டேன்...' என்று சொல்லி இருக்கிறான்.
உடனே, இந்த ஹனி என்ன சொன்னாள் தெரியுமா?
'சாம் அண்ணா... என்னோட பொருட்களை கொண்டு வந்து நான் இங்க வைப்பேன்; அதையெல்லாம் நீ எடுக்கக் கூடாது. உனக்கு வேணும்னா என்னை கேட்கணும்; நான் உனக்கு தருவேன்... சரியா?' என்று அட்வைஸ் செய்திருக்கிறாள். சிரிப்பு தாங்கவில்லை ஆயாவுக்கு.
ஒருமுறை வேலைக்காரிகளை அடித்திருக்கிறான் சாம். 'உங்க மம்மி வரட்டும்; நாங்க சொல்கிறோம். நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போகிறோம்...' என்று சொல்லி இருக்கின்றனர்.
உடனே, இந்த ஹனிக்கு, கோபம் வந்து விட்டது.
'இதோ பாருங்க... எங்க அண்ணனை பத்தி நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போறதா இருந்தால் போங்க. எங்க அண்ணனை நான் பார்த்துக்கிறேன்...' என்று சொல்லி, அவன் தோளில் கை போட்டு அழைத்து சென்று சேரில் உட்கார வைத்திருக்கிறாள்.
அப்புறம், ஐந்து நிமிடம் கழித்து, ஆயா காதுல, 'ஆயா... நான் சும்மா சொன்னேன்... கோவிச்சுக்காதே... நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போக வேண்டாம். அண்ணனுக்காகத் தான் அப்படி சொன்னேன்... சரியா' என்று சொல்லி கொஞ்சி இருக்கிறாள். இதுகளுக்கு இத்தனை சாமர்த்தியம் எங்கிருந்து வந்தது என நினைத்தால், ஆச்சரியமாக இருக்கிறது.
எங்க மம்மி ஊரில் இருந்த, தங்கச்சி வீட்டுக்கு போய் இருக்காங்க. அவங்க பையில இருந்து ஒரு புடவையை எடுத்து, ஆயாவுக்கு கொடுத்து, 'நீ கட்டிக்கோ...'ன்னு சொல்லி இருக்கிறாள் ஹனி.
'ஏண்டி... ஆயாவுக்கு என் புடவையை எடுத்துக் கொடுத்தே?' என்று கேட்டிருக்காங்க எங்க மம்மி.
'அப்பத்தான் ஆயா என்னை நல்லா பார்த்துக்குவாங்க பாட்டி...'ன்னு சொல்லி இருக்கிறாள்.
அசந்து போன என் மம்மி, 'ஏண்டி ஹனி... உங்க மம்மி புடவையை கொடுக்க வேண்டியதுதானே...' என்று கேட்டு இருக்காங்க. அதுக்கு அவள், 'மம்மி புடவை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்; உன்னோட புடவை எல்லாம் சுமாரா இருக்கும் பாட்டி...' என்று சொல்லி இருக்கிறாள்.
அப்புறம் ரொம்ப பயங்கரமா ஸ்டைல் செய்து, இங்கிலீஷ் பேசும். தெரிந்தது, தெரியாதது என தானே இட்டு கட்டி பேசுவாள்.
ஒரு நாள் அவங்க அப்பா சொல்லி இருக்கிறார், 'ஹனிமா... டாடிக்கு உடம்பு முழுவதும் வியர்த்திருக்கு; கொஞ்சம் தள்ளிப் போடா செல்லம்...' என்று.
அதற்கு ஹனி, 'டாடி... டிரிங்கிங் வாட்டர் கமிங் அவுட்?' என கேட்டிருக்கிறாள்.
அவருக்கு சிரித்து, சிரித்து வயிற்று வலியே வந்து விட்டது.
டாடி குடித்த தண்ணியெல்லாம் உடம்பு மேல வந்து விட்டதுன்னு யோசித்து இருக்கிறாள். இன்னும் என்ன சொல்ல? பேசும் இங்கிலீஷ் ஸ்டைலா இல்லைன்னா, உடனே அதை சரி செய்து, நம்ப மானத்தை வாங்குவாள்.
ஒருநாள், 'டிவி'யில் ஒருத்தர் ஒரு நாயை பிடித்துக் கொண்டு சென்றார்.
'மம்மி... அவரு யாரு?' என்று கேட்டிருக்கிறாள்.
'அவன் அந்த நாயின் எஜமான்...' என்று சொன்னால், இவளுக்கு எப்படி புரியும் என நினைத்து, 'நாயோட டாடி தான் அவர்...' என்று சொல்லி, வேலையை பார்த்திருக்கிறாள் தங்கை.
'நோ மம்மி... நாயோட டாடி நாய்தான்; இவர் நாயோட மாஸ்டர்...' என்றாளே பார்க்கலாம்.
அப்படியே, 'சப்' என்று கன்னத்தில் அறைந்தது போல் இருந்திருக்கிறது என் தங்கைக்கு.
இப்படி இவர்களது குறும்புகளை சொல்லப் போனால், சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஏன்... உங்கள் வீட்டு குழந்தைகளும் இதைபோல எத்தனையோ குறும்புகள் செய்யும்.
நான் சொல்ல வந்த விஷயமே வேறு...
குழந்தைகள் கடவுள் கொடுக்கிற பரிசு. 'கல்யாணம் ஆன உடனே வந்து விட்டதே...' என நினைத்தோ அல்லது 'அடுத்தடுத்து குழந்தைகள் வந்து விட்டதே...' என நினைத்தோ எக்காரணம் கொண்டும், 'அபார்ஷன்' செய்து விடாதீர்கள்.
என்னுடைய உறவினருக்கு, பத்து வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்தது. பெரிய பணக்காரி. வீட்டில் பயங்கர குஷி. அடுத்த சில மாதங்களில் மீண்டும், 'கர்ப்பம்' ஆனாள். இதுவே, சின்ன குழந்தை என்பதால், இரண்டாவது உருவானதை, 'அபார்ஷன்' செய்து விட்டாள்.
சில மாதங்களில், முதல் குழந்தைக்கு விஷக் காய்ச்சல் வந்து, இறந்து விட்டது. இப்போது, வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுகின்றனர்.
லட்சத்தில் பணத்தை கொண்டு போய் டாக்டர்களிடம் கொடுக்கிறாள்; குழந்தை இல்லை. இவர்களது வசதிக்கு எத்தனை வேலைக்காரி வேண்டுமானாலும் வைத்து, பார்த்துக் கொள்ளலாம்.
அதே போல், என் ஊர்க்கார பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. கொஞ்ச நாட்களிலேயே அடுத்து கர்ப்பம் ஆனாள்; உடனே, அதை,'அபார்ஷன்' செய்து விட்டனர். இப்போது, 'முதல் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை உள்ளது, பிழைப்பது கடினம்...' என்று சொல்லி விட்டனர். இன்னொரு குழந்தைக்கு, முயற்சி செய்தும், கிடைக்கவில்லை.
டியர் பட்டாம்பூச்சிகளே... திருமணம் ஆனவுடன் குழந்தை வந்து விட்டால், 'என் வேலைதான் முக்கியம்; இதை எப்படி வளர்ப்பது?' என்று நினைத்து, 'அபார்ஷன்' செய்வது போன்ற மடமையை செய்து விடாதீர்கள். இப்போது எங்கு பார்த்தாலும், மலட்டுத்தன்மை நிறைய காணப்படுகிறது. குழந்தை பாக்கியம் என்பது நிஜமாகவே கடவுள் நமக்கு தரும் கொடை. அதை அழித்து, மீண்டும் நீங்கள் நினைத்த நேரத்தில் ஆசைப்பட்டாலும் கிடைக்காது என்பதை மறந்து விடாதீர்கள் பட்டாம்பூச்சிகளே...
— தொடரும்.
ஜெபராணி ஐசக்