PUBLISHED ON : அக் 16, 2011

வணக்கம்... நமஸ்கார்... நமஸ்தே! விளை யாட்டு போல் நான் உங்களைச் சந்தித்து, 18 வாரங்கள் ஓடி விட்டன. என் மனதில், எனக்குள் அலைபாய்ந்த சங்கதிகளை உங்களிடத்தில் இறக்கி வைத்ததில், எனக்கு மிகப் பெரிய நிம்மதி.
சென்னை மக்களின் வாழ்க்கைத் தரம், இன்று, எங்கோ சென்று கொண்டிருக்கிறது; இது, நல்ல விஷயம் தான். அதே சமயம், இளைஞர்களின் வாழ்க்கை முறை, இன்று, எங்கோ போய் விட்டது தான் மிகவும் வேதனையான விஷயம். வெள்ளைக் காரர்கள் எல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு, இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஆனால், நம்முடைய இளைஞர்கள் வெள்ளைக்காரர்களின், 'லிவிங் டு கெதர்' பாலிசியை பிடித்துக் கொண்டு வாழ்வதை பார்க்க, மிகவும் பயமாக உள்ளது.
சென்னை போகும் போக்கு தாங்க முடிய வில்லை என்றால், பெங்களூரூ அதை விட மோசம். சமீபத்தில், நான்கு பெண்கள் சேர்ந்து, ஒரு ஆணை, 'ரேப்' பண்ணி, அவன் பாக்கெட்டில் பணத்தை வைத்து விட்டு சென்றுள்ளனர். அந்தப் பணத்தையும், அவன் போட்டிருந்த டிரெஸ்சையும் கழட்டிக் கொண்டு, அரவாணி ஒருவர் ஓடி விட்டார். நிர்வாணமாய் கிடந்த அந்த இளைஞனை, பார்த்தவர்கள் காப்பாற்றியுள்ளனர் என்ற செய்தி, எத்தனை வேதனையை தருகிறது... யோசித்துப் பாருங்கள்...
பெங்களூருவிலும் நிறைய ஐ.டி., கம்பெனிகள் திறக்கப்பட்டு, இளைஞர்கள் எக்கச்சக்கமாக சம்பாதிக்கின்றனர்; இதனால், பெற்றோரை சிறிதும் மதிப்பதில்லை. தம் இஷ்டம் போல் பணத்தை செலவு செய்வதும், ஆடம்பரமாக வாழ்வதும், சிறு வயதிலேயே போதை, மது, செக்ஸ் என, தவறான வழிகளுக்கும் சுலபமாகச் செல்கின்றனர்.
எங்கள் குடும்ப நண்பருக்கு ஒரே மகன். மிகவும் பொத்தி, பெண் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்த்தனர். காலேஜ் போகும் போது கூட பின்னாலே செல்வர்.
எம்.இ., படிக்கும் மகன், 'புராஜெக்ட்' விஷயமாக ஆசிரியர்களை பார்க்கச் சென்றாலும், இவர்களும் போய் காரிலேயே உட்கார்ந்து கிடப்பர். அவன் டியூசன் சென்றாலும் பின்னாலே செல்வர். இத்தனை கட்டுப்பாட்டில் இருந்த மகனுக்கு, படிப்பு முடிந்ததும் உடனே வேலை கிடைத்தது. அவ்ளோ தான்... எக்கச்சக்க சம்பளம். அது வரையில் அடக்கமாக இருந்த மகன், அப்படியே ஆளே மாறி விட்டான்.
பெற்றோரை எதிர்த்துப் பேசுவது, கேர்ள் பிரண்ட்சிடம் விடிய, விடிய போன் பேசுவது... எதிர்த்து கேட்க முடியுமா... பெற்றோர் வாய டைந்து நின்றனர். மகன் ஒரு பெண்ணுடன், 'டீப்' டிஸ்கஷன் செய்வது தெரிந்ததும், என்ன ஏது என்று விசாரித்தனர்.
'எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு... அவளைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்...' என்றான்.
அவளது திமிர்த்தனமான நடவடிக்கை பிடிக்காத பெற்றோர், 'வேண்டாம்...' என்றனர்.
'நீங்கள் சம்மதித்தால் உ<ங்கள் அனுமதியுடன் திருமணம் நடக்கும்; இல்லையென்றால் நானே பார்த்துக்குவேன்...' என போட்டானே ஒரு போடு... மிரண்டனர் பெற்றோர்.
பெற்றோருக்கு தெரிந்து விட்டது என்ற கெத்தில் மிகவும் கூலாக ஊர் சுற்றினர்.
ஒரு நாள் அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் என்று சொல்லி, நண்பரின் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான் ஹீரோ. அவர்கள் வீட்டில், கேக், 'கட்' பண்ணி, ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். பிறகு, 'அண்ணி... நாங்க ரொம்ப டயர்டா இருக்கோம்... சற்று நேரம் தூங்குகிறோம்...' என்று சொல்லி, அண்ணியின் பெட்ரூமுக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டனர்.
அதிர்ந்து போன உறவினர் மனைவி, தன் கணவருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். பதறியடித்து வீட்டுக்கு ஓடி வந்தவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்களே கூலாக எழுந்து வந்து, ஒன்றுமே நடக்காது போல், 'ஷாப்பிங்' சென்று விட்டனர்.
விஷயமறிந்த பெற்றோர், அவமானத்தில் தலைகுனிந்தனர். கொஞ்ச நாட்களில் என்னாச்சு என்றே தெரியவில்லை... 'எனக்கு அவ வேண்டாம்ப்பா...' என்றான் மகன்.
'ஏன்?' என்று காரணம் கேட்டதற்கு, 'சுள்'ளென்று எரிந்து விழுந்தான். அப்புறம் தான் தெரிந்தது, அந்த பெண்ணுக்கு இவனைப் போல் நிறைய பாய் பிரண்ட்ஸ் உண்டு என்று.
எனவே, இந்தப் பெண்ணை கழட்டிவிட்டு விட்டான்.
திரும்பவும் சிறிது நாட்களில் இன்னொரு பெண்ணுடன் ரொம்ப, 'குளோஸ்' ஆக இருந்தான். அப்படி பெண்களுடன் குளோசாக இருக்கும் நாட்களில் பெற்றோர், உறவினர் யாரைக் கண்டாலும் எரிந்து விழுவான். வேலை நேரம் போக, மீதி நேரமெல்லாம் போனில் கடலை போடுவான்; பெற்றோரை சிறிதும் மதிப்பதில்லை.
அப்புறம் என்னவானது என்று தெரிய வில்லை... அந்தப் பெண்ணையும் கழட்டி விட்டான். பயந்து போன பெற்றோர், இவனுக்காக அவசர, அவசரமாக பெண் பார்த்தனர். அந்தப் பெண்களை எல்லாம், 'வேண்டாம்...' என்று சொல்லி விட்டான்.
இவனது கம்பெனியின் டீம் லீடரான மூத்த பெண்மணியுடன் சனி, ஞாயிறு ஆகிவிட்டால், 'டிஸ்கோத்தே' செல்கிறோம் என்ற பெயரில் டான்ஸ் ஆடுவது, பிறகு வந்து பகல் முழுவதும் தூங்குவான்.
பெற்றோர் கேட்டால், 'அம்மா நீ அந்தக் காலம்... கர்நாடகம் மாதிரி இருந்தது உங்க லைப் ஸ்டைல். ஆனால், எங்களது தலைமுறை கம்ப்யூட்டர் உலகம். நாங்கள் என்ஜாய் பண்ண வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உள்ளது. இதில் எல்லாம் நீ தலையிடாதே... மீறி தலையிட்டால், நான் வாங்கியிருக்கிற பிளாட்டுக்கு தனியா போயிடுவேன்...' என்றான்.
இதையும் மீறி எந்தப் பெற்றோர் என்ன பேச முடியும்? வெறுத்துப் போய் அவன் இஷ்டப்படி விட்டனர். ஒரு நாள், 'கல்யாணம் எல்லாம் பண்ணி எதற்காக பணத்தை கரியாக்கணும். ஊருப்பட்டவர்களை கூப்பிட்டு, பணம், நேரம் எல்லாமே வேஸ்ட்... இது, 'லிவிங் டு கெதர் சீசன் மம்மி...' என்று சொல்லி, கல்யாணமாகி டிவோர்ஸ் ஆகி, ஒரு குழந்தையுடன் இருக்கும், டீம் லீடருடன் இவன் சேர்ந்து வாழ்ந்தான்.
'பிடித்த வரையில் ஒன்றாக இருப்போம், பிடிக்கலைன்னா பிரிஞ்சிடுவோம்; இது தான் சுலபமானது!' என்று சொல்லி, அந்தப் பெண்ணுடன் வாழ்ந்தான்.
அவமானம் தாங்க முடியாத பெற்றோர், கிராமத்திற்கே சென்று விட்டனர். அந்த பெண், இவனது பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டாள். இவனுக்கு இளம் வயதிலேயே பி.பி., சுகர், கொலஸ்ட்ரால் எல்லாம் வந்து விட்டது. பின்னே... ஆபீஸ் டென்ஷன் ஒரு பக்கம், அதிகப்படியான குடி, சிகரெட் எல்லாம் ஒரு மனிதனை எங்கே கொண்டு போய் விடும். இவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், அவள் புத்தியை காட்டியிருக்கிறாள்.
'நான் என்ன உன் மனைவியா... உன்னை விழுந்து, விழுந்து கவனிப்பதற்கு?' என்று சொல்லி, அவள் பாட்டுக்கு ஆபீஸ் போய் விட, உடல்நிலை மிகவும் மோசமாகி, தன் பெற்றோரிடம் வந்து சேர்ந்திருக்கிறான். பதறிப் போன பெற்றோர், அவனை கவனித்து வருகின்றனர்.
இளைஞர்களே... வருங்காலத் தூண்களே... உங்களது இளம் வயதிலேயே லட்சக்கணக்கில் சமபாதிக்கும் லட்சாதிபதிகளே... இவ்வளவு பணத்தை கண்டதும், தலைகால் புரியாமல், பெற்றோரை மதிக்காமல், நீங்களே முடிவு செய்து கொள்ளும் இளம் சிங்கங்களே... இஷ்டமான வாழ்க்கை வாழும் வாலிபர்களே... நீங்கள் போதை, பெண்கள், மது, டிஸ்கோத்தே என, பலவிதங்களில் உங்கள் வாழ்க்கையை, என்ஜாய் பண்ணும் போது, கொலஸ்ட்ராலுடன், பல விதமான நோய்களும், உங்கள் உடம்பில் வந்து குடி கொள்ள காத்திருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்!
உங்களது பெற்றோர், இன்று வரையில், கணவன், மனைவி என்ற பந்தத்தை மதித்து, நேசித்து, ஒருவருக்கொருவர் எப்படி நடக் கின்றனர். இந்த அன்னியோன்யம், அன்பு எல்லாம் உங்களது, 'லிவிங் டு கெதரில்' இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்...
— தொடரும்.
ஜெபராணி ஐசக்

