
வந்தது மொபைல் போனது படிப்பு!
என் உறவுக்கார பெண், சென்னை யில் வசித்து வருகிறாள்; படிப்பில் படுசுட்டி. எந்நேரமும் புத்தகமும், கையுமாகவே இருப்பாள். டாக்டருக்கு படிப்பதே, அவள் லட்சியம்.
அவளது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், அவளின் பெற்றோரிடம், 'நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க... எப்பவும் உங்க பொண்ணு படிப்பு, படிப்புன்னு இருக்கா. எங்களுக்கும்தான் வந்து பொறந்திருக்குங்களே...' என்று கூறி, சலித்துக் கொள்வர்.
பத்தாம் வகுப்பில், 400 மதிப்பெண் பெற்றால், மொபைல் போன் பரிசாக தருவதாக அவளின் பெற்றோர் கூறினர். அவள் பத்தாம் வகுப்பு தேர்வில், 438 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றாள். அவளின் பெற்றோரின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சொன்னபடி, அவளுக்கு மொபைல் போனை வாங்கித்தந்தனர்.
பாவம்... அவர்களுக்கு தெரியவில்லை, அந்த மொபைல் போன், மகளின் படிப்பை பாழாக்கும் என்று. அன்று வரை புத்தகமும் கையுமாக இருந்தவள், மொபைல் போன் வந்தவுடன், மொபைல் போனும், கையுமாக இருக்க ஆரம்பித்தாள்.
எப்போதும் நண்பர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது, பேசுவது என்றபடி இருந்தாள். படிப்படியாக, படிப்பில் ஆர்வம் குறைந்தது. இறுதியில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், 734 மதிப்பெண்கள் பெற்றாள்; பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தம் பெண்ணை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு, கலைந்தது. அவள் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு பதில், அரசு கல்லூரியில், பி.ஏ., படிக்கிறாள்.
பெற்றோரே... உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக, பரிசு தருகிறேன் என்று, மொபைல் போனை பரிசாக வாங்கி தராதீர்கள்; அதற்கு பதில், நல்ல புத்தகங்களை பரிசாக கொடுங்கள். அது, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்.
— எம்.சிவக்குமார், திருவண்ணாமலை.
அந்த மூன்று நாட்கள்
அரசுப் பள்ளியில் ஆசிரியை நான்; வயது 38. என்னுடன் பணியாற்றும் கணக்காசிரியர், அனைவரோடும் அன்பாகப் பழகுவார். வீட்டுத் தோட்டத்திலிருந்து, அவ்வப்போது வாழைக்காய், முருங்கைக்காய், தேங்காய் என, கொண்டு வந்து, சக ஆசிரியர்களுக்கு கொடுத்து மகிழ்வார்.
சில தினங்களுக்கு முன், 'எங்கள் ஊர் வயலில் விளைந்த எள்ளில் தயாரித்தது, சூப்பர் டேஸ்ட்டா இருக்கும். சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க டீச்சர்...' என்றபடி, எள்ளுருண்டைகளை நீட்டினார். லட்டு சைசில் இருந்த அதைப் பார்த்ததுமே எனக்கு, 'பகீர்' என்றது.
அந்த மூன்று நாட்களின், முதலாம் நாளில் இருந்த நான், இந்த சமயத்தில் எள்ளுருண்டை சாப்பிட்டால், 'விளைவு' மோசமாக இருக்கும் என்பதால் மறுத்தேன்; அவரோ, விவரம் புரியாமல் வற்புறுத்தினார்.
அத்தனை ஆசிரியர்கள் முன், 'பீரியட்ஸ்' என்று சொல்ல முடியாததால், 'வயிற்று வலி, அப்புறம் சாப்பிடுறேன்...' என நான் சமாளிக்க, அவரோ, எள்ளின் மருத்துவ குணங்களை வரிசைப்படுத்தி, விரிவாக விளக்க ஆரம்பித்தார்.
அவரது அன்புத் தொல்லையைத் தவிர்க்க முடியாமல், ஒரு உருண்டையை நான் தின்று தொலைக்க, அடிக்கடி நாப்கின் மாற்ற வேண்டியதாகி விட்டது. அது மட்டுமல்லாமல், அந்த மூன்று நாட்கள் மேலும், இரண்டு நாட்கள் நீடித்து, 'நொந்த ஐந்து நாட்கள்...' ஆகிப் போனது.
பெண்களிடம் அன்பு மழை பொழியும் ஆண்களே... சில விஷயங்களை, பெண்கள் நாசூக்காகத் தவிர்த்தால், வெளிப்படையாக சொல்ல இயலாத காரணம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் அன்புத் தொல்லையால், அவர்களை இம்சை செய்யாதீர்கள்.
— பெயர் வெளியிட விரும்பாத, தென்காசி வாசகி.
நோக வைத்த மருத்துவர்!
சென்ற வாரம், வயதான என் அம்மா, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால், அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அவர் உறுப்பினராக இருந்த தைரியத்தில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். 'அட்மிட்' செய்யும் போது, 'பத்தாயிரம் ரூபாய் செலவாகும்...' என, டாக்டர் கூறினார்.
ஆனால், டிஸ்சார்ஜ் ஆகும் போது, 60 ஆயிரம் ரூபாய்க்கு பில் போட்டிருந்தார். அதிர்ச்சியடைந்த நான், டாக்டரிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு அவர், 'அரசு பணம் தானே... உங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தந்து விடுகிறேன்; கண்டுக்காமல் போங்க...' என, கூலாக கூறினார்.
'கடவுளுக்கு அடுத்தபடியாக, மக்கள் பெரிதும் நம்பும் புனிதமான மருந்துவர்கள் கூட, இப்படியா நடந்து கொள்வர்...' என்று நொந்து கொண்டேன்.
— எஸ்.பி.நீலமேகன், சென்னை.

