
டிச., 23 - வைகுண்ட ஏகாதசி
லட்சுமி தாயாரை, அஷ்ட லட்சுமிகளாகப் பிரிப்பர். இவர்களில் ஒருவர், வீரலட்சுமி எனும், தைரிய லட்சுமி. இவள் பிறந்தது, ஏகாதசி திதியில் என்பது தான் விசேஷ தகவல்.
முரா எனும் அசுரன், தேவர்களுக்கு தொல்லை தந்தான். இவன், பிரம்ம வம்சத்தில், நதிஜங்கன் என்பவனது மகனாகப் பிறந்தவன். விஷ்ணுவின் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சக்தி, வெளிப்படும் போது தான், முரனுக்கு வாழ்வு முடியும் என்றிருந்தது.
இதனால், அவன் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்திரலோகம் அவன் வசமானது. பதவியைப் பறி கொடுத்த இந்திரன், விஷ்ணுவிடம் புகார் செய்தான்.
விஷ்ணுவும் போருக்கு கிளம்பினார். ஆயிரம் ஆண்டுகள் மற்போர் செய்தனர், இருவரும். ஆனால், முடிவு ஏற்படவில்லை. எல்லாம் தெரிந்தாலும், தெரியாதது போல் மாயச்செயல் புரிபவரல்லவா, விஷ்ணு!
இன்றைய ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, ஹிமவதி என்ற பெரிய குகைக்குள் போய், பள்ளி கொண்ட விஷ்ணு, அசதி வந்தது போல் நடித்தார். இதுதான் சமயமென, அவரது மார்பை நோக்கி அம்பு ஒன்றை குறி வைத்தான், முரன்.
திருமாலின் மார்பில் குடியிருக்கும் லட்சுமிக்கு கோபம் வந்து விட்டது. சாந்தரூபியான அவள், தன் உடலிலிருந்து ஆயுதம் தரித்த ஒரு சக்தியை உருவாக்கினாள். அவளே வீரலட்சுமி என்றும், தைரிய லட்சுமி என்றும் பெயர் பெற்றாள்.
ஆயுதங்களுடன் முரனுடன் மோதினாள். ஒரே நொடி, முரனின் தலை கீழே விழுந்தது.
பெண்கள், பொறுமையாக இருக்கும் வரை தான், இந்த உலகம் தாங்கும். அவர்கள் அநியாயத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விட்டால், அன்றே உலகம் அழியும். இதை லட்சுமி தாயாரே, தன் செயல்பாட்டின் வாயிலாக நிரூபித்திருக்கிறாள். கணவனைப் பாதுகாப்பது பெண்களின் கடமை என்பதையும், இந்த நிகழ்வால் வெளிப்படுத்தி இருக்கிறாள்.
ஏதுமே அறியாதது போல் எழுந்தார், விஷ்ணு. தன் முன் ஆயுதம் தரித்து நிற்கும் பெண்ணைக் கண்டார். முரன் கொல்லப்பட்டு கிடப்பதைப் பார்த்தார்.
'மகாலட்சுமி, நீ இந்த அசுரனை, 11வது திதியன்று கொன்றிருக்கிறாய். இதனால், உனக்கு ஏகாதசி என்று பெயரிடுகிறேன்...' என்றார்.
ஏகம் என்றால் ஒன்று. தசம் என்றால் பத்து. இரண்டும் இணைந்தால், 11. இதனால் தான் இந்த திதிக்கு ஏகாதச என்று பெயர் வந்து, ஏகாதசியாக திரிந்து விட்டது.
முரனின் அழிவால், தேவர்கள் மீண்டும் தங்கள் சொர்க்க வாசலுக்குள் சென்றனர்.
பெருமாள் கோவில்களில் நுழைந்தாலே சொர்க்கம் என்பது ஒருபுறமிருக்க, இழந்த சொர்க்கத்தை அடைந்ததாலும், இன்று சொர்க்கவாசல் திறப்பு நாளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இந்நாளில், தன் கணவர் விஷ்ணுவை நினைத்து, உண்ணாவிரதமிருந்து, துாக்கத்தை விடுத்து வழிபடும் பக்தர்களுக்கு, நினைத்தது நிறைவேற வேண்டும் என, விஷ்ணுவிடம் வேண்டிக் கொண்டாள், லட்சுமி. விஷ்ணுவும், அந்த வரத்தைக் கொடுத்தார்.
தி. செல்லப்பா