
இதுவும் உதவி தான்!
மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருக்கிறார், தோழி. மாதா மாதம் நடக்கும் குழு சந்திப்பின் போது, வழக்கமான பணிகளை முடித்த பின், பெண்கள் சந்தித்த சில பிரச்னைகளையும், அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்த வழிகளையும் விளக்கமாக எடுத்துரைப்பார்.
இச்செயல், அதே போன்ற பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, நல்லதொரு தீர்வை காட்டுவதாகவும், அப்படியான பிரச்னைகளை இனிமேல் சந்தித்தால், எவ்வாறு கையாள்வது என்பதற்கான வாய்ப்பாகவும் இருப்பதாக, அனைவருமே தோழியை பாராட்டினர்.
'இவ்வாறு செய்யும் யோசனை, எப்படி வந்தது...' என, தோழியிடம் கேட்டேன்.
'பெண் சமுதாயத்திற்கு, ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் விளைந்தது தான், இந்த யோசனை.
'இதற்காக, என் உறவினர்கள், தோழியர், தெரிந்தவர்கள் என, பலரிடமும் தொடர்பு கொண்டு, அவர்களின் வாழ்வில் சந்தித்த பிரச்னைகளையும், அதைக் கையாண்ட விதத்தையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்பேன். அவற்றை, பெயர்களை குறிப்பிடாமல், மகளிர் சுய உதவிக்குழுவின் மாதாந்திர சந்திப்பில், சக உறுப்பினர்களுக்கு கூறுவேன்.
'என்னுடைய இந்த அணுகுமுறை, பல பெண்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து, பிரச்னைகளை கண்டு அஞ்சாமல், எதிர்கொண்டு வெற்றிபெற உதவி வருகிறது. எனக்கும் மன நிறைவாக இருக்கிறது...' என்றார்.
பிறருக்கு பணம், பொருளாக தான் கொடுத்து உதவ வேண்டும் என்பதில்லை. நல்ல ஆலோசனைகளை தந்து, வழிகாட்டுவதும் கூட, ஒரு வகை உதவி தான் என்று நிரூபித்து வரும் தோழியை, நானும் பாராட்டினேன்.
டி.பிரேமா, மதுரை.
'டைல்ஸ்' கற்கள் அபாயம்!
பள்ளி சென்ற தோழி மகள், கல்லடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் அறிந்து, அவளை காண சென்றேன்.
மருத்துவமனையில் இருந்த தோழியிடம் விசாரித்தேன்.
'வீட்டருகே இருக்கும், பள்ளிக்கு நடந்தே செல்வாள். சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக இருக்கும் அந்த சாலையில், வீட்டில் உடைக்கப்படும் செங்கல் மற்றும் மணலை கொண்டு வந்து கொட்டுவர், அருகிலுள்ளோர்.
'சம்பவத்தன்று, புதிதாக கட்டும் வீட்டிலிருந்து உடைந்த, 'டைல்ஸ்'களை எடுத்து வந்து, குழிகளில் கொட்டியுள்ளனர்.
'டூ - வீலரில் வேகமாக வந்தவரின் வண்டி, 'டைல்ஸ்' குவியலில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக, 'டைல்ஸ் பிட்' ஒன்று, மகளின் முகத்தில் பட்டு, சதையை கிழித்து விட்டது. மூன்று தையல்கள் போட்டுள்ளனர்.
'நல்லவேளை, கண்ணில் படவில்லை. பட்டிருந்தால், கண் இரண்டாக பிளந்திருக்கும் என்று, மருத்துவர்கள் கூறினர். இதில் யாரை குறை கூறுவது என்று தெரியவில்லை...' என புலம்பினாள், தோழி.
அவளுக்கு ஆறுதல் கூறி விட்டு வந்தேன்.
பொதுவாக, கண்ணாடி போன்ற கூர்மையான கற்களை, சாலை மற்றும் நடை பாதைகளில், கொட்டி, ஆபத்துக்கு வழி வகுக்காதீர்கள்.
ம.காவியா, கோவை.
திறமையை நம்பினால்!
எங்கள் பகுதியில், 70 வயதைக் கடந்த பாட்டி ஒருவர், கீரை வியாபாரத்துடன், சிறுதானிய உணவுகளையும் விற்பனை செய்து வருகிறார்.
குறிப்பாக, குழந்தைகள் உள்ள வீட்டினர், பாட்டியின் வருகைக்காக, காலை நேரத்தில் வாசலில் காத்திருக்கின்றனர்.
குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகவும், தேவையான ஊட்டச்சத்து சரிவிகிதத்தில் கிடைக்கவும், பாரம்பரிய சிறுதானிய உணவுகளான, அடை, புட்டு மற்றும் சத்துருண்டைகளை தானே தயாரித்து எடுத்து வந்து, விற்பனை செய்கிறார், அந்த பாட்டி.
மேலும், அவற்றை வீட்டில் தயாரிக்க விரும்புவோருக்கு, தயக்கமின்றி, சலிப்பில்லாமல் செய்முறைகளையும் சொல்லிக் கொடுக்கிறார்.
தன் வாழ்வாதாரத்திற்காக கீரை வியாபாரம் செய்தாலும், வருங்கால தலைமுறையினரின் நலனில் அக்கறை கொண்டு, பாரம்பரிய உணவு வகைகளை செய்து வந்து, லாப நோக்கமின்றி விற்பனை செய்து வரும், கீரைக்கார பாட்டியை, அனைவருமே பாராட்டுகின்றனர்.
-ஆர்.செந்தில்குமார், மதுரை.