sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கதாநாயகனின் கதை (10) - சிவாஜி கணேசன்

/

கதாநாயகனின் கதை (10) - சிவாஜி கணேசன்

கதாநாயகனின் கதை (10) - சிவாஜி கணேசன்

கதாநாயகனின் கதை (10) - சிவாஜி கணேசன்


PUBLISHED ON : டிச 07, 2014

Google News

PUBLISHED ON : டிச 07, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராதா அண்ணனைக் கண்டதும், ஒருவர் ஓடோடி வந்தார். முட்டைக் கண்களும், ஒல்லியாக ஒடிந்து விழுவது போன்ற உடலமைப்பும் கொண்ட அவர், மரியாதையோடும், மிகுந்த அன்போடும் ராதா அண்ணனை வரவேற்றார்.

'சவுக்கியமா இருக்கியா?' என்று அவரைப் பார்த்து கேட்டார் ராதா அண்ணன்.

'சவுக்கியமா இருக்கேண்ணே...' என்று பணிவுடன் பதில் சொன்னவர், 'காபி சாப்பிடறீங்களா?' என்று கேட்டார்.

'வேண்டாம்... இப்போது தான் குடிச்சிட்டு வந்தோம்..' என்றார் ராதா அண்ணன்.

'அதனாலென்ன காபி தானே தரப் போகிறேன்; குடிச்சிட்டுப் போங்க...' என்று வற்புறுத்தினார் அவர்.

'வேண்டாம்பா...' என்றார் ராதா அண்ணன்.

'அப்படிச் சொல்லிட்டா எப்படி? நான் காபி கொடுக்கத்தான் போறேன்; நீங்க குடிச்சிட்டுத் தான் போகணும்...' என்று கட்டாயப்படுத்த ஆரம்பித்தார் அவர்.

'சரி சரி... கொண்டு வா; குடிச்சிட்டே போறேன்...' என்று சொன்னார் ராதா அண்ணன்.

ராதா அண்ணனின் பதிலைக் கேட்டதும், மகிழ்ச்சி பொங்க உள்ளே போனார் அவர்.

போன வேகத்திலேயே, முகத்தில் அசடு வழிய திரும்பி வந்தவர், 'காபி இல்லயாம்; தீர்ந்து போச்சாம்...' என்று சங்கோஜப்பட்டு கொண்டே சொன்னார்.

அவருக்கு ஒரே வெட்கமாகி விட்டது!

ராதா அண்ணன் பெருந்தன்மையுடன், 'அதனாலென்ன பரவாயில்ல; அப்போ நான் போயிட்டு வர்றேன்...' என்று அவரிடம் விடை பெற்று கிளம்பினார்.

அவர் யார் தெரியுமா?

அவர் தான், பிரபல காமெடி நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.

அவர் யாரென்று அப்போது எனக்கு தெரியாது. பல நாட்களுக்குப் பிறகு தான், அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் எல்லா நடிகர்களுக்கும், கம்பெனி வீட்டில் இப்படிப்பட்ட நிலைமைதான் இருக்கும். அவர்களுக்கு செல்வாக்கு வளர வளரத் தான், கம்பெனியிலும் அவர்களுக்கு மதிப்பும், வசதியும், பெருகும்.

அதாவது, அவர்கள் வளரும் போது, இவை எல்லாம் வளரும். ஆனால், வளரும் போதோ அவர்கள் கம்பெனியில் இருக்க மாட்டார்கள்.

ராதா அண்ணன், கம்பெனிக்காக வாங்க வேண்டிய சாமான்களை வாங்கி முடித்ததும், பழையபடி பொள்ளாச்சிக்கே திரும்பி வந்தோம். இங்கு வந்ததும் தான் ராதா அண்ணன், எங்களை கம்பெனியிலிருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டது பற்றி, காரசாரமான விவாதங்கள், கம்பெனியில் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டோம்.

புதிய காட்சி ஜோடனைகளையும், சீன்களையும் (திரைச்சீலைகள்) தயார் செய்தார் ராதா அண்ணன். 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, நாடகத்தை ஆரம்பித்தார். அந்த நாளில் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு ஆரம்பித்த கம்பெனி, ராதா அண்ணனுடைய தாகத் தான் இருக்கும்.

இப்படி பெருஞ்செலவில் உருவாக்கிய சீன்களையும், பல நல்ல நடிகர்களையும் ஒன்று சேர்த்து ஈரோட்டில் நாடகம் நடத்த ஆரம்பித்தார்.

ஈ.வெ.ரா.,வுக்கு சொந்தமான தியேட்டரில் தான் நாடகம் நடந்தது.

முதல் நாடகம், 'லட்சுமி காந்தன்!'

ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக வந்த மக்கள் கூட்டம், பத்து நாட்களில் குறைய ஆரம்பித்தது.

ஏன் என்று ஒருவருக்குமே புரியவில்லை.

இதனால், கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில், கடன் வாங்கும் நிலையும் ஏற்பட்டது.

நாடகத்தை ஆரம்பித்ததற்கும், பெரிய நஷ்டம் வருவதற்கும் இடையில் அதிக நாட்கள் கூட இல்லை. இறுதியில், தியேட்டருக்கான வாடகை பணத்தைக் கூட கொடுக்க முடியாமல், அதற்குப் பதிலாக பெரும் செலவில் உருவாக்கிய சீன்களை, அங்கேயே விட்டு விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கே வரும்படி ஆகிவிட்டது.

இந்நிலையில், ராதா அண்ணனுக்கும், அவருடன் கம்பெனியில் பாகஸ்தர்களாக இருந்தவர்களுக்கும் இடையில் மன வேறுபாடு ஏற்பட்டு, கம்பெனியை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

கம்பெனியில் பணம் போட்டவர்கள், சில முக்கியமான நடிகர்களையும், பையன்களையும் அழைத்து, ராதா அண்ணன் பேரில் புகார் சொல்லி, நல்லது கெட்டதைப் பாகுபடுத்திப் பார்க்க முடியாத பருவத்திலிருந்த சிறுவர்களாகிய எங்கள் மனதைக் கலைத்து, அவர்கள் கூடவே நாங்கள் இருக்கும்படி எங்கள் மனதைத் திருப்பி விட்டனர்.

ராதா அண்ணனும், அவர்களும் பிரிந்து கொள்வதற்காக ஒரு பஞ்சாயத்து நடந்தது.

'யார் யார், ராதா அண்ணனுடன் போகின்றனர், யார் யார் இங்கேயே இருக்கப் போகின்றனர்?'என்ற கேள்வியை பஞ்சாயத்தார் எல்லாரிடமும் கேட்டனர்.

கம்பெனியில் இருந்த பெரும்பாலோர், ராதா அண்ணனுடன் போகாமல், அங்கேயே தங்கி விடுவதாகக் கூறினர். அப்படிச் சொன்னவர்களில் நானும் ஒருவன்.

எங்கள் முடிவைக் கேட்டதும், ராதா அண்ணன் மன வேதனையுடன் பிரிந்து போனார்.

பணம் போட்டவர்கள், பாலக்காடு கிருஷ்ணப் பிள்ளை தலைமையில், எங்களை அழைத்துக் கொண்டு பாலக்காட்டுக்கு வந்தனர்.

பாலக்காடு, நெம்மாரா, வல்லங்கி, கொல்லங்கோடு போன்ற ஊர்களிலும் மற்றும் பல சின்ன சின்ன ஊர்களிலும் வழக்கம் போல ஸ்ரீ கிருஷ்ண லீலா, ராமாயணம் போன்ற நாடகங்களை நடத்த ஆரம்பித்தோம்.

கொல்லங்கோடு மகாராஜா மிகச் சிறந்த கலா ரசிகர். அவர் தன் குடும்பத்துடன், அடிக்கடி எங்கள் நாடகத்தை பார்க்க வருவார். கொல்லங்கோட்டில் தான், 'மனோகரா' நாடகத்தில், முதன் முதலாக மனோகரனாக, கதாநாயகன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.

என் வாழ்க்கையில் பெரிய திருப்பமும், லட்சியமும் கொல்லங்கோட்டில் தான் நிறைவேறியது. ஆம்! கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற என் கனவு மற்றும் லட்சியம், இங்கே தான் ஈடேறியது. இந்நாடகத்தில் மனோகரனாக நடித்த என் நடிப்பை பாராட்டி, கொல்லங்கோடு மகாராஜா, வெள்ளியால் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த ஆடை ஒன்றை பரிசாக தந்தார்.

கதாநாயகன் வேடம் போட்ட முதல் நாடகத்திலேயே எனக்கு இப்படி ஒரு பரிசு. அதுவும் சிறந்த கலா ரசிகரான, ஒரு மகாராஜாவால் கொடுக்கப்பட்டதை பெரும் பாக்கியமாகவே நினைத்தேன்.

மீண்டும் நாடகப்பணியில் தொய்வு ஏற்படவே, 'நாடகமும் வேண்டாம்; நடிப்புத் தொழிலும் வேண்டாம்...' என்று தற்காலிகமாக ஒரு முழுக்குப் போட்டு, திருச்சி - ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட் பஸ் கம்பெனியில் மெக்கானிக்காகச் சேர்ந்தேன்.

நடிப்புக்கு முழுக்குப் போட்டேனே தவிர, அந்த ஆர்வத்தை என்னால் தணிக்க முடியவில்லை. உள்ளூரில் அவ்வப்போது நடந்த அமெச்சூர் நாடகங்களில் நடித்தேன். இதுவும், என் கலை ஆர்வத்திற்கும், தாகத்திற்கும் போதுமானதாக இல்லை.

மறுபடியும் பொன்னுசாமி பிள்ளை கும்பகோணத்தில் கம்பெனி ஆரம்பித்து, என்னை அழைத்தார். அதில் சேர்ந்தேன்.

சென்னையில் முகாமிட்டிருந்த போது, இக்கம்பெனியை என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கினார். என்.எஸ்.கே.,யுடன் சில நாடகங்களில் நடித்தேன். துரதிருஷ்டவசமாக அவர் சிறை சென்று விடவே, நானும், கே.ஆர்.ராமசாமியும் தனியே பிரிந்து சென்று, தஞ்சாவூரில் ஒரு கம்பெனி ஆரம்பித்தோம்.

இதற்கிடையில், சென்னை சவுந்தர்ய மகாலில், ஈ.வெ.ரா., தலைமையில், ஏழாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இதில், 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில், சத்ரபதி சிவாஜியாக நடித்த என்னை அழைத்த ஈ.வெ.ரா., கணேசன் பெயரோடு ஒரு அடைமொழியைச் சேர்த்தார். அதுவே எனக்கு நிறந்தர பெயராக அமைந்து விட்டது.

அது...

— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,

நன்றி 'பொம்மை'

விஜயா பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.







      Dinamalar
      Follow us