
மாத்தி யோசி!
என் நண்பனின் தம்பி, பேசும், கேட்கும் திறன் அற்ற மாற்று திறனாளி. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று, வேலைக்கு முயற்சி செய்தார். ஏழெட்டு முறை நேர்காணல் வரை சென்றும் தோல்வியே கிட்டியது. மிகவும் புத்திசாலியான அவர், முதல் சுற்றான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும், அடுத்த சுற்றான நேர்காணல் வரும்போது, தேர்ச்சி பெற முடிவதில்லை. எங்கே தவறு செய்கிறோம் என்று தெரியாமல், கலங்கி போனார். இத்தனைக்கும், ஒவ்வொரு நேர்காணலின் போதும், தன்னால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும், அவர்கள் கேள்விகளை எழுதி கொடுத்தால், பதில்களை எழுதி காண்பிப்பதாகவும் ஒரு தாளில் எழுதி, அதை தன் சான்றிதழுடன் இணைத்து தந்து விடுவார். ஆனாலும் தோல்விதான் மிஞ்சியது.
இதனால், விரக்தியில் இருந்தவருக்கு, இன்னொரு இடத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. வழக்கம்போல் தன்னுடைய குறையை எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்த நேர்காணல் செய்பவர், அதை கிழித்தெறிந்து, வேறொரு தாளில் ஏதோ எழுதி இவரிடம் கொடுத்துள்ளார். அதில், 'நான் வேலை நேரத்தில் வீண் அரட்டை அடிக்க மாட்டேன்; ஏனெனில், என்னால் பேச இயலாது. எனக்கு கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் என் கவனம் சிதற வாய்ப்பில்லை. எவ்வளவு கடின வேலையாக இருந்தாலும் மனதை, ஒருநிலைப்படுத்தி என்னால் வேலை செய்ய முடியும். இப்போது, உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்...' என்று எழுதி, பின்குறிப்பாக, 'இப்படி எழுதியிருந்தால் உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டியிருப்போம்...' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அப்போதுதான் தன்னுடைய தவறு அவருக்கு புரிந்தது. ஓர் உண்மையை எப்படி சொன்னால், உலகம் திரும்பி பார்க்கும் என்பதை உணர்ந்த அவர், இன்று ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
தன் குறையை, நேர்மறை சிந்தனையுடன் மாற்றி யோசித்து, வானத்தை வசப்படுத்தலாம் என்பது புரிகிறதல்லவா வாசகர்களே!
— டி. ஹேமப்ரியா, சென்னை.
அலங்கோல பேஷன் தேவையா?
சென்னையிலுள்ள, 'மால்' ஒன்றில், 'சேல்ஸ் கேர்ள்' ஆக வேலை செய்கிறேன். என்னுடன், நிறைய, இளைஞர்களும் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவருமே பேஷன் என்ற பெயரில் பாதி, 'ஜட்டி' தெரியும்படி தான் பேன்ட் போடுகின்றனர். இதனால், அவர்கள் குனிந்து, நிமிர்ந்து பொருட்களை எடுக்கும்போது, 'பேன்ட்' முக்கால்வாசி கழண்ட நிலையில், உள்ளாடை தெரிய காட்சி அளிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நாள், நான், கீழே நின்று பார்சலைக் கொடுக்க, அதை, ஸ்டூலில் நின்றபடி வாங்கி உயரத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான் ஒரு சேல்ஸ் பாய். அப்போது அவனுடைய பேன்ட் கழன்று காலில் விழ, அவன், 'பிடி... பிடி...' என்று கத்தினான். நான் எதை பிடிப்பது என்று தெரியாமல், பார்சலை கொடுக்க நிமிர்த்தவள், அந்த கன்றாவியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
இளைஞர்களே... ஜட்டியின் பிரான்ட் வெளியே தெரிவதுதான் பேஷன் என்றால், பேசாமல், 'சூப்பர் மேன்' மாதிரி முழு ஜட்டியையும் பேன்ட் மேலேயே போட்டுக்க வேண்டியது தானே! எல்லாரும் சுலபமா பாத்துக்குவாங்களே!
பெண்கள் மாராப்பு போடுவது போல் வயித்துக்கு மேலே, 'பேன்ட்' போட்டது அந்த காலம். உங்களை அந்த மாதிரி போடச் சொல்லல. ஆனால், இடுப்பில் கச்சிதமாக நிற்பது போல் அழகாக அணியலாமே... எந்த நேரமும் கீழே கழண்டு விடுமோ என்ற அபாய நிலையில் ஒரு பேன்ட்! இந்த ஸ்டைல் தேவை தானா? யோசிங்க யூத்ஸ்!
- பாதிக்கப்பட்ட யூத் கேர்ள்ஸ்.
மனைவியை உதாசீனப்படுத்தாதீர்!
மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்த என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, உருவமே மாறிப் போயிருந்தாள். 'எப்படி இருக்கிறாய்?' என கேட்ட போது, அழுகையுடன், 'இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து விடுதலையான பின், கணவரது போக்கு மாறி விட்டது. என்னிடம் முன்பு போல பேசுவதோ, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதோ இல்லை. கேட்டால், 'பிழைத்தது போதாதா...' என்று கேலி பேசுகிறார். கணவரது புறக்கணிப்பை பார்க்கும் போது, பிழைத்ததை விட இறந்திருக்கலாம்...' என்று தோன்றுகிறது என்று கூறி வருத்தப்பட்டாள்.
இம்மாதிரியான நேரங்களில் மனைவியை அன்பாக நடத்தாமல், புறக்கணிப்பது சரிதானா... வியாதிக்கு சிகிச்சை கொடுப்பதை விட, அவர்களை பரிவுடன் நடத்தி, உள்ளன்போடு நடந்து கொள்வதே நல்ல கணவனுக்கு அழகு!
— பார்வதி ராமகிருஷ்ணன், கோவை.

