தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காவிரியின் கதை!

காவிரியின் கதை!

காவிரியின் கதை!


PUBLISHED ON : ஜூலை 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக., 03 - ஆடிப்பெருக்கு

அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையை நீராக மாற்றி, கமண்டலத்தில் அடைத்துக் கொண்டு வந்தார். காக வடிவில் அதைத் தட்டி விட்டார், விநாயகர். அது காவிரியாக பாய்ந்தது. இதுதான், காவிரியின் வரலாறு பற்றி நாம் அறிந்த கதை. ஆனால், இந்த நதி பிறந்த கதையை, பிரம்ம வைவர்த்த புராணத்தில் வித்தியாசமாக கூறியுள்ளனர்.

கவேரன் என்ற ராஜா, மிதிலையின் ஜனகர் போலவும், விஸ்வாமித்திரர் போலவும் ராஜரிஷியாக விளங்கினார். பெயருக்குத் தான் ராஜாவே தவிர, உலக இன்பங்களில் இவருக்கு நாட்டமில்லை. பிறப்பற்ற நிலை அடைய விரும்பி, பிரம்மாவை நினைத்து தவமிருந்தார்.

'என் மகளான விஷ்ணுமாயா என்பவள் உனக்கு மகளாகப் பிறப்பாள். அப்போது அவளது பெயர் லோபமுத்ரா என இருக்கும். அவள் மூலம் உனக்கு முக்தி கிடைக்கும்...' என்றார், பிரம்மா.

பிரம்மா சொன்னபடியே, லோபமுத்ரா பிறந்தாள். அவள், காவிரி என்ற பெயரில் தன்னில் ஒரு பகுதியை ஜல ரூபமாக மாற்றிக் கொண்டாள். இதன் மூலம் உலகுக்கு பெரும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டாள். தன் எண்ணம் நிறைவேற வேண்டி, விஷ்ணுவை வேண்டினாள்.

அவள் முன் தோன்றிய விஷ்ணு, 'பெண்ணே, உன் விருப்பம் நிறைவேறும். ஸஹ்ய மலையில் (குடகு மலை) நான், நெல்லி மரமாய் தோன்றுவேன். அந்த மரத்தடியிலிருந்து நீ, நதி வடிவில் புறப்பட்டு, தென்னாட்டுக்கு சென்று, அந்த நாட்டை வளப்படுத்துவாய்.

'எந்த யுகமாக இருந்தாலும், உன்னை காவிரி தெய்வம் என்று போற்றுவர், மக்கள். அது மட்டுமல்ல. நீ பாயும் வழியிலுள்ள உயர்ந்த இடத்தில், நானும் பள்ளி கொள்வேன். அந்த இடம் ஸ்ரீரங்கம் எனும் பெயர் பெறும். என் தலங்களிலேயே அது சிறந்ததாக விளங்கும்.

'பிரம்மா, என் பாதத்திற்கு அபிஷேகம் செய்த நீர், கங்கையாக மாறி புனிதமடைந்தது. நீயோ என் உடல் முழுவதையும் அபிஷேகிக்கும் பாக்கியம் பெறுவாய். அதனால், கங்கையை விட, நீயே உயர்ந்தவள் ஆவாய்.

'அத்துடன் நீ, லோபமுத்ரா என்ற பாத்திரத்தையும் தொடர்ந்து ஏற்பாய். மகாமுனிவரான அகத்தியர் உன்னைத் திருமணம் செய்து கொள்வார். இதனால், நீ என்றும் அழியாப் புகழ் பெறுவாய்...' என்று அருளினார்.

இதன்படி நிகழ்ந்தது தான், காவிரியின் பிறப்பு. காகம் கவிழ்த்ததால், காக விரி தீர்த்தம் என, பெயர் பெற்று, பின், காவிரியாக சுருங்கியது.

காவிரி என்ற சொல்லை உச்சரித்தாலே, இத்தனை நன்மையும் கிடைக்கும்போது, அந்த நதியைப் பாதுகாப்பதும், போற்றுவதும் நமது கடமை. ஆடிப்பெருக்கன்று, காவிரித்தாயைப் போற்றி புகழ்வோம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us