PUBLISHED ON : ஜூலை 30, 2023

கரைப்பார் கரைத்தால்...
எங்கள் பகுதியில், பள்ளிப் படிப்பு வரை மட்டுமே முடித்த சில இளைஞர்கள், ஜாதிக் கட்சிகளில் சேர்ந்தனர்.
அரசியல்வாதிகளின் மூளைச் சலவையால், அவர்களின் சுயநலத்திற்காக அடிமை வேலை செய்து, மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாகி, தான்தோன்றித் தனமாக சுற்றித் திரிந்தனர்.
இவர்களால், ஊரின் அமைதி குலைந்து, ஜாதிக் கலவரங்களும், வீண் பிரச்னைகளும் அதிகரித்தன.
இதைக் கண்ட எங்கள் பகுதியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், அந்த இளைஞர்களிடம், நேரடியாக அறிவுரை எதையும் கூறாமல், காவல்துறையில் சேருவதற்கான வழிகாட்டுதல்களை எடுத்துக் கூறினார்.
மேலும், அவரின் சொந்த செலவில், இளைஞர்களுக்கு பயிற்சிக் கட்டணம் செலுத்தி, அருகிலுள்ள பயிற்சி நிலையத்தில் சேர்த்து விட்டார்.
இப்போது அவர்களில் பலர், காவல்துறை பணியில் சேர்ந்து, திருமணம் செய்து, கவுரவமாக வாழத் துவங்கியுள்ளனர்.
'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்...' என்பர். முரடர்களாக திரிந்து, வாழ்க்கையை வீணாக்க இருந்தவர்களுக்கு, சரியான வழிகாட்டிய ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர், 'ஊதாரியாய் திரிபவர்களை, இப்படியும் திருந்த செய்யலாம்...' என்ற பாடத்தை போதித்துள்ளார்.
-ஆர்.செந்தில்குமார், மதுரை.
இப்படியும் உதவலாமே!
வெகுநாட்களுக்கு பின், தோழியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'என்ன செய்து கொண்டிருக்கிறாய்...' என்று கேட்டேன்.
'பெண்களுக்கு குறைந்த வட்டியில், 'பைனான்ஸ்' கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறேன்...' என்றாள்.
'பட்டதாரியான நீ, வேலைக்கு செல்லாமல் இந்த வேலையை செய்கிறாயே...' என்றேன்.
'குடும்ப சூழ்நிலையால் வெளியில் சென்று வேலை பார்க்க முடியவில்லை. ஆனால், வருவாய் ஈட்டும் நோக்கில் வீட்டிலிருந்து ஏதாவது செய்யலாம் என்ற யோசனையில், 'பைனான்ஸ்' செய்ய முடிவு செய்து, இதை செய்து கொண்டிருக்கிறேன்...' என்றாள்.
அப்போது ஒரு பெண் கடன் வாங்க வந்திருந்தார்.
'வேலைக்கு செல்கிறாயா? வாங்கிய பணத்தை எப்படி திருப்பிதருவாய்...' என்று கேட்டாள், தோழி.
இல்லத்தரசி என கூறிய அப்பெண்ணிடம், 'வேலை ஏதாவது கிடைத்தால் செய்வாயா...' என்று கேட்டாள்.
'செய்வேன்...' என்றவளிடம், 'எனக்கு தெரிந்த ஒருவர், பலகார கடை வைத்திருக்கிறார். அதில் பெண்களுக்கு மட்டுமே வேலை. அவரவர் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்குவார். அதில் உன்னை சேர்த்து விடுகிறேன்.
'உன் போல் கடன் வாங்கிய பலரும், வேலைக்கு சென்று, என் கடனை திருப்பி செலுத்துகின்றனர்; அவரவர் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கின்றனர்...' என்று கூறி, கடன் கொடுத்து அனுப்பினாள்.
'இவ்வாறு செய்வதால் கஷ்டப்படுபவர்களுக்கு உதவியது போல் இருக்கிறது. என் பணமும் நிற்காமல் வந்து விடுகிறது...' என்றாள்.
தோழியின் அணுகுமுறையை, பாராட்டி வந்தேன்.
— ம.வசந்தி, திண்டிவனம்.
சூப்பர் ஐடியா!
சமீபத்தில், தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டை சுற்றிலும், சாலையில் பயன்படுத்தும், சோலார் லைட்களை ஆங்காங்கே தரையில் பொருத்தி வைத்திருந்ததை கண்டேன்.
'வீட்டை சுற்றி வாகனங்கள் செல்கிறதா...' என, தோழியிடம் கிண்டலாக கேட்டேன்.
'எங்கள் வீட்டை சுற்றிலும், காய்கறி தோட்டம் இருக்கிறது. அவற்றை எலி வந்து சேதப்படுத்துவதால், காய்களை பயன்படுத்த முடியாமல் இருந்தது. என்னதான் பாதுகாப்பு செய்தாலும், ஏதாவது ஒரு வழியில் அவை தோட்டத்தில் புகுந்து விடும்.
'ஒருநாள், வெளியூர் பயணம் மேற்கொண்டபோது, சாலை ஓரம் வாகனத்தை நிறுத்தி, சாப்பிட்டோம். சாப்பிட்ட இலையை சாலை ஓரமாக போட்டோம். அதில் மீதம் இருந்த உணவை ருசிக்க, பெருச்சாளி ஒன்று காத்திருந்தது.
'இலையின் பக்கத்தில், கண் சிமிட்டும் சோலார் விளக்கு ஒன்று மின்னிக் கொண்டிருந்தது. அதிலிருந்து வந்த ஒளியை கண்டு பயந்த பெருச்சாளி, இலை பக்கமே வரவில்லை. அதை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தோம்.
'இதே விளக்கை நம் வீட்டைச் சுற்றிலும் பொருத்தினால், எலி வராதே என்று, ஐடியா தோன்ற, அதன்படி, சில விளக்குகளை வாங்கி ஆங்காங்கே பொருத்தினோம். அன்றிலிருந்து எலி மற்றும் பாம்பு என எதுவும் வருவதில்லை. இப்போது, காய்கறி தோட்டமும் நல்ல நிலையில் உள்ளது...' என்றாள், தோழி.
அதைக் கேட்டு வியந்தேன். இதேபோன்ற பிரச்னையில் நீங்களும் இருந்தால், இதைச் செய்யுங்களேன்!
இலக்கியா மகேஷ், கோவை.
