தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாக்கு பலித்தது!

வாக்கு பலித்தது!

வாக்கு பலித்தது!


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வியல் தத்துவங்கள் நிரம்பிய, 'கிராதார்ஜுனியம்' எனும் அற்புதமான காவியத்தை எழுதியவர், மகாகவி பாரவி.

இவர், தன் மனைவியுடன், மாளவ தேசத்தில் வாழ்ந்து வந்தார். பாரவிக்கு கலைமகளின் அருள் இருந்த அளவுக்கு, திருமகளின் அருள் இல்லை. இதனால், அவரது குடும்பம், வறுமையில் வாடியது.

அவர் மனைவி ரசிகா, தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக விற்று, குடும்பத்தை நடத்தி வந்தாள். ஒருநாள், அதுவுமில்லாமல், உணவிற்கே வழியில்லாமல் போயிற்று. யாரையும் புகழ்ந்து பாடி பிழைக்கும் பழக்கம் இல்லாத பாரவி, வேறு வழியில்லாமல், தான் இயற்றிய, 'கிராதார்ஜுனீயம்' எனும் காவியத்திலிருந்து, மூன்று ஸ்லோகங்களை, ரசிகாவிடம் தந்து, 'இவற்றை விற்று, பொருள் வாங்கி வா...' என, அனுப்பினார்.

'எந்தவொரு செயலை செய்வது என்றாலும், நன்கு சிந்தித்த பின் செய்ய வேண்டும்...' எனும் பொருளடங்கிய பாதி ஸ்லோகத்தை, மாளவ மன்னரிடம் கொடுத்தாள், ரசிகா. அப்பாடலின் பொருள் ஆழத்தை உணர்ந்த மன்னர், அதை எழுதி, அரண்மனையில் ஆங்காங்கே மாட்டும்படி உத்தரவிட்டார்.

மாதங்கள் சில கடந்த நிலையில், அரசரின் வயிற்றில் கட்டி உண்டாயிற்று. வலி தாங்காமல் துடித்தார், அரசர். அரண்மனை மருத்துவர்கள், அயல்நாட்டிலிருந்து மருத்துவரை அழைத்து, அறுவைச் சிகிச்சை செய்யலாம் என, தீர்மானித்தனர். இதையறிந்த அமைச்சர், 'அயல் நாட்டு மருத்துவரை, நம் கைக்குள் போட்டு, அரசரை, மேலுலகம் அனுப்பி, நாம் அரசராகி விட வேண்டியது தான்...' என, தீர்மானித்தார்.

அதன்படி, அம்மருத்துவருக்கு, நான்கு பைகள் நிறைய தங்கக் காசுகள் அளித்து, தன் வசப்படுத்திக் கொண்டார் அமைச்சர்.

அந்த மருத்துவரும், விஷம் தோய்ந்த கத்தியுடன், அறுவைச் சிகிச்சை செய்ய தயாரானார். அப்போது, எதேச்சையாக, சுவரில் பெரிதாக எழுதித் தொங்க விடப்பட்டிருந்த, பாரவியின் ஸ்லோகத்தை படித்தார்; உடனே, அவர் மனம் மாறியது. கை நடுங்கியபடி விஷம் தோய்ந்த கத்தியை கீழே வைத்தவர், வேறு கத்தியை எடுத்தார். அவர் தடுமாற்றத்தை கவனித்த அரண்மனை மருத்துவர், 'ஏன் உங்கள் கை நடுங்குகிறது... எதற்காக அந்த கத்தியை வைத்து விட்டு, வேற கத்தியை எடுக்கிறீர்கள்...' என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார், அயல்நாட்டு மருத்துவர்.

இதனால், சந்தேகமடைந்த அரண்மனை மருத்துவர், விஷக் கத்தியை எடுத்து, பாலில் போட்டார்; அடுத்த வினாடி, பால் நீல நிறமாக மாறியது. உடனே, அயல்நாட்டு மருத்துவரை கைது செய்தனர்.

அவர், அமைச்சர் செய்த சூழ்ச்சியை விவரித்து, அவர் தந்த தங்கக் காசுகள் அடங்கிய பைகளை, மன்னர் முன், வைத்தார். அமைச்சரை கைது செய்தனர்.

'பாரவியின் பாதி ஸ்லோகம், என் உயிரை காப்பாற்றியதே...' என்று மகிழ்ந்த மன்னர், பாரவிக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் அளித்து பாராட்டினார்.

சத்தியம் தவறாத மகாகவிகளின் வாக்கு, நேர்மையான பாதையை காட்டும். அதனால், நல்ல ஞான நூல்களை படிப்போம்; நலம் பெறுவோம்!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

கிரகணத்தின் போது, கர்ப்பிணி பெண்கள் ஏன் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது?

கிரகண நேரத்தில் கண்ணுக்கு புலப்படாத பல கதிர்கள் வெளிப்படுகின்றன. இக்கதிர்களால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம். இதனால், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us