PUBLISHED ON : செப் 24, 2023

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ். ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
தங்கரத்தினம் படம், திரையில் ஓடிக்கொண்டிருந்தது. படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரி, அவர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்.
'படம் பார்த்தேன். நல்லாயிருக்கு. ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பேசின தலைவர்களுக்கெல்லாம் உங்க குரலிலே பேசினது, கம்பீரமா இருக்கு. படத்தில் நான் கை வைக்கப் போறதில்லை.
'நல்லாவே செய்திருக்கீங்க. ஆனா ஒண்ணு, பட ஆரம்பத்தில் வரும் பாட்டில், 'இன்னொருவர் தயவெதற்கு, இன்னாட்டில் வாழ்வதற்கு...' என்ற, முதல் வரியை அனுமதிக்க முடியாது. அதை அவசியம் மாத்தியே தீரணும்...' என்றார்.
'அதில் என்ன சார் தவறு...' என்றேன்.
'நீங்க ஏன் அந்த வரியை வச்சிருக்கீங்க... நான் ஏன் மாத்தணும்கிறேன்... காரணம், நாம ரெண்டு பேருக்குமே தெரியும். இப்போது சொல்கிறேன், 'இன்னொருவர் தயவெதற்கு, இன்னாட்டில் வாழ்வதற்கு...'ன்னு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் பாடுவதாய் இருந்தால் விட்டு விடுவேன்.
'ஆனால், நீங்க பாடினால், திராவிட நாட்டிலே வாழ்வதற்கு, வட நாட்டான் தயவு எதற்குன்னு கேட்கிற மாதிரி வரும். உடனே, உங்கள் ரசிகர்கள் கை தட்டுவர். நான் சொல்றது சரிதானே...' என்றார்.
'சரி...' எனக் கூறி, 'இன்னொருவர் தயவெதற்கு, இனி மேலும் வாழ்வதற்கு...' என எழுதிக் கொடுத்தேன்.
'இது கரெக்ட். நான் சொன்ன பகுதி படத்தையும், நெகட்டிவையும் கத்தரித்து இங்கே அனுப்பி விடுங்கள். அதற்காக நீங்கள் வரவேண்டாம்...' என சொல்லி, வழியனுப்பி வைத்தார்.
தங்கரத்தினம் படத்தை அண்ணாதுரைக்கு போட்டு காட்டினேன். படத்தை பார்த்து, வெகுவாக பாராட்டினார்.
ஏவி.எம்., ஸ்டூடியோ, வாகினி ஸ்டூடியோ, பாரமவுண்ட் ஸ்டூடியோ, நியுடோன் ஸ்டூடியோ; கோவையில், பட்சிராஜா ஸ்டூடியோ, சென்ட்ரல் ஸ்டூடியோ; சேலத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் ரத்னா ஸ்டூடியோ என, இன்னும் பல படப்பிடிப்பு நிலையங்கள் இயங்கிக் கொண்டிருந்த காலம்.
ஒரே ஸ்டூடியோவில், தினசரி மூன்று, நான்கு படங்கள் கூட படமாக்கப்படும். அந்த அளவுக்கு வசதி செய்யப்பட்ட, 'செட்'டுகள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஒரு சமயம், வாகினி ஸ்டூடியோவில், நானும், எம்.ஜி.ஆரும், வெவ்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். சில சமயங்களில் எனக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தால், அவர் நடிக்கும், 'செட்'டுக்கு போய், அவரிடம் பேசி வருவேன். அதே மாதிரி, நான் நடிக்கிற இடத்திற்கு வந்து, அவரும் பேசிச் செல்வார்.
மதிய சாப்பாடு என் வீட்டிலிருந்து சிலருக்கும், எம்.ஜி.ஆர்., வீட்டிலிருந்து சிலருக்கும் வந்துவிடும். ஏனெனில், எங்களுடன் பணிபுரியும் மேக் - அப் மேன்கள், உடை அணிவிப்போரும், மற்றவர்களும் எங்களுடன் அமர்ந்து உணவு உண்பர்.
அந்த இடைவேளையில் தான், என்னிடம், 'தம்பி... எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் மற்றும் நான் நடிக்கிற படங்களின் கணக்கு வழக்குகளை அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி தான் பார்த்து வருகிறார். அவருக்கு வயதாகி விட்டது. முன்பு போல் அவரால் இயங்க முடியவில்லை. ஆகவே, ஒரு நல்ல கணக்குப் பிள்ளை இருந்தால் பாருங்கள்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
'உங்களுக்குப் பொருத்தமான கணக்குப் பிள்ளை தயாராக இருக்கிறார்...' என்று, ஆர்.எம்.வீரப்பன் பற்றி, அவரிடம் விபரமாக சொன்னேன்.
'அப்படியானால், நாளைக்கே வந்து என்னை பார்க்கச் சொல்லுங்கள். எம்.ஜி.ஆர்., பிக்சர்சில் கணக்குப் பிள்ளை வேலை போட்டுக் கொடுத்து விடலாம்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
ஆர்.எம்.வீரப்பனிடம் விபரத்தை சொன்னேன். அவருக்கு தாங்க முடியாத பெரு மகிழ்ச்சி. அடுத்த நாளே எம்.ஜி.ஆரை சந்தித்து, வேலைக்கு சேர ஒப்புக் கொண்டு, என்னை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
அதன்பின், 'சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, என் குடும்பத்தை அழைத்து வந்து இங்கே தங்க வேண்டும். அதற்கான மாத சம்பளமாக ஒரு தொகை கொடுக்க, நீங்க தான் எம்.ஜி.ஆரிடத்தில் எடுத்துச் சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும்...' என்றார், ஆர்.எம்.வீ.,
அதை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
'ஊதிய விஷயம், அவர் விருப்பம் போல செய்து கொள்ளலாம். ஆர்.எம்.வீரப்பனை என்னிடம் அனுப்பி வையுங்கள்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
எனக்கு நன்றி தெரிவித்து, 'நீங்கள் செய்த இந்த பேருதவியை எங்கள் குடும்பம் என்றைக்கும் மறக்காது...' என சொல்லி விடைபெற்றார், ஆர்.எம்.வீ.,
அங்கே, கணக்குப்பிள்ளை வேலைக்கு போனவர், பின்னாளில், படத் தயாரிப்பாளராக மாறி, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து பட அதிபரானார். அதன்பின், எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில், அமைச்சராகவும் முன்னேறினார்.
அக்காலத்தில், சினிமா உலகில் மிக பிரபலமானவர், ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசன்.
இந்தியாவின் அத்தனை சினிமா தயாரிப்பாளர்களுமே வியந்து போற்றுகிற வண்ணம், பெரும் செலவில், சந்திரலேகா போன்ற பல படங்களை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியிட்டு, வெற்றி கண்ட பெருமகன். அவரது தயாரிப்பில் வெளிவந்த படங்களை கண்டு வியந்திருக்கிறேன்.
அவரது படங்களில் நடிக்க, தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காதா என, நான் உட்பட, பெரிய நடிகர் - நடிகையரெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த காலம்.
அத்தகைய ஜெமினி வாசன், வாழ்க்கைப் படகு எனும் புதிய படத்தை தமிழில் தயாரிக்க இருப்பதாகவும், அதில், என்னை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதால், அதுபற்றி என்னிடம் பேச விரும்புவதாகவும், அவரது உதவியாளர் என்னிடம் கூறினார்.
குறிப்பிட்ட நாளில், எஸ்.எஸ்.வாசனை சந்தித்தேன்.
- தொடரும்.
- எஸ்.எஸ்.ராஜேந்திரன்
