PUBLISHED ON : செப் 24, 2023

போன் கவரில், பணம் வைப்பவரா நீங்கள்?
திருமண விசேஷத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, மொபைல் போனை மேலும் கீழும் பார்த்தபடி புலம்பியபடி, என்னிடம் வந்தார், துாரத்து உறவினர் ஒருவர்.
'மாப்ள, 'டவர்' கிடைக்கலையா... போன், 'ரிப்பேரா'ன்னு தெரியலை. 'வாய்ஸ்' சரியா கேட்க மாட்டேங்குது. அவசரமா ஒரு போன் பண்ணணும்...' என்றார்.
'என்ன மச்சான், உங்களுக்கு இல்லாத போனா. இந்தாங்க...' என கூறி, போனை கொடுத்தேன்.
அவ்வேளையில், இன்னொரு உறவினர் வரவே, அவரிடம் பேச துவங்கினேன்.
சத்தம் இல்லாத பகுதிக்கு சென்று பேசி, 10 நிமிடத்திற்கு பின் போனை தந்தார், துாரத்து உறவினர்.
வாங்கி பாக்கெட்டில் வைத்து, மொய் எழுதும் இடத்திற்கு சென்றேன். மொபைல் போன் கவரில் வைத்திருந்த பணம், காணாமல் போயிருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும்போது, மொபைல் போன் கவரினுள், 500 ரூபாய் வைத்தது, நினைவில் இருந்தது.
போன் வாங்கிச் சென்ற உறவினரிடம், பணம் குறித்து கேட்டால், குடும்பத்திற்குள் விரிசல் ஏற்படும் என கருதி, கேட்காமல் விட்டு விட்டேன்.
புத்தகம் போன்ற மொபைல் போன் கவரின் பக்கவாட்டு பகுதியில், பணம் வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இனி, அது போல் செய்யாதீர்கள்!
- பி.என். பத்மநாபன்,கோவை.
வேலை தேடும் பட்டதாரிகளே...
சமீபத்தில், வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். வீட்டு பால்கனியில் அமர்ந்தபடி, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது, எதிர் வீட்டுக்கு மண் வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட தோட்ட வேலைக்கான உபகரணங்களோடு, 'டூ - வீலரில்' வந்த இளைஞர்கள், அவ்வீட்டின் முன் வளர்ந்திருந்த புற்கள், தோட்டத்தில் வளர்ந்திருந்த களைகளை அகற்றினர். மேலும், அவ்வீட்டு மாடி தோட்டத்தில் உள்ள தாவரங்களிலிருந்து பூச்சி அரித்த பழுப்பு இலைகள் மற்றும் சருகுகளையும் அகற்றினர்.
இதுபற்றி உறவினரிடம் கேட்டேன்.
'எங்கள் பகுதி பட்டதாரி இளைஞர்கள், இவர்கள். ஒவ்வொருவரும் தனித் தனி நிறுவனங்களில் பணியாற்றினாலும், அனைவரும் குழுவாக இணைந்து, இதுபோன்ற பணிகளை செய்து, கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர்.
'சில மாதங்களுக்கு முன், துண்டு பிரசுரங்களை வீடு வீடாக தந்து, அவர்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டனர்.
'அதிலுள்ள மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், குழுவில் அப்போதைக்கு வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள், தோட்டப் பணிகளை முடித்து, நியாயமான தொகையை பெற்றுச் செல்வர்...' என்றார்.
வேலை இல்லையென, காலத்தை விரயமாக்குவோர் மத்தியில், நிறுவன பணி செய்தபடியே, நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதிக்கும் இளைஞர்களை நினைத்து, பெருமையாக இருந்தது.
பட்டதாரிகளே... உழைப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால், உங்கள் முன் ஆயிரம் வேலைகள் காத்துக் கிடக்கின்றன. எனவே, உழைப்பதற்கான வாய்ப்பை தேடி கண்டுபிடித்து முன்னேறுங்கள்!
டி. யாஷினி, திருப்பூர்.
வாசிப்பை கைவிடாத முதியோர்!
நெருங்கிய நண்பன் ஒருவன், தன் பிறந்தநாளை, முதியோர் இல்லத்தில் கொண்டாட இருப்பதாக கூறி, என்னை அழைத்தான்.
மூத்த குடிமக்களின் முன்னிலையில், 'கேக்' வெட்டி, பகிர்ந்தளித்தான். மேலும், வாங்கிச் சென்றிருந்த, உணவு பார்சல்களை அனைவருக்கும் வழங்கினான்.
உண்டு முடித்து, அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, 'உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் கூறுங்கள். வாங்கி வந்து தருகிறேன்...' என்றேன்.
'கொஞ்சம் அஞ்சல் அட்டைகள் வாங்கி தர முடியுமா, தம்பி...' என்ற பாட்டி, 'எங்கள் முதியோர் இல்லத்தில், நன்கொடையாளர்கள் உதவியோடு, நாளிதழ் மற்றும் மாத இதழ்களும் வாசிக்க கிடைக்கின்றன. படிக்க தெரிந்தவர்கள், படிக்க தெரியாதவர்களுக்கு வாசித்து காட்டுகிறோம்.
'எங்களில் சிலர், அந்த பத்திரிகைகளுக்கு விமர்சன கடிதங்கள், நகைச்சுவை துணுக்குகள், பயனுள்ள குறிப்புகள் மற்றும் கேள்விகள் என, அஞ்சலட்டைகளில் எழுதி அனுப்புவோம். அதில் கிடைக்கும் சன்மானத்தை, அனைவரும் பயன்படுத்திக் கொள்வோம். அதற்காக தான் அஞ்சல் அட்டை கேட்டேன்...' என்றார்.
வயதான காலத்திலும், வாசிப்பை கைவிடாதிருக்கும் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அன்றே, அவர்கள் கேட்ட அஞ்சல் அட்டைகள் மற்றும் எழுதுவதற்கு பேனாக்களையும் வாங்கிக் கொடுத்தேன்.
'இவை தீர்ந்து விட்டால், தகவல் சொல்லுங்கள், வாங்கி வந்து தருகிறேன்...' என, கூறி வந்தேன்!
செ. விஜயன், சென்னை.
