PUBLISHED ON : அக் 22, 2023

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ். ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
எங்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் முக்கியமானவரை அழைத்து, 'நான் இப்போது, இறந்தவன் இல்லத்துக்கு போய் அவன் சடலத்தை காண வேண்டும். அவன் அம்மாவுக்கு ஆறுதல் கூற வேண்டும்...' என்று கெஞ்சினேன்.
'சரி, எங்கள் வேனிலேயே வாருங்கள். இருட்டி விட்டதால், அங்கே கூட்டம் இருக்காது...' என்றார்.
போலீசாருடன் நான் மட்டும் வேனில் புறப்பட்டேன். அங்கே அதிக அளவு கூட்டம் இல்லை.
நான் வந்திருப்பதாக, பையனின் அம்மாவிடம் சொன்னார், ஒரு போலீஸ் அதிகாரி. அந்த அம்மா ஓடி வந்து என் கைகளை பிடித்து, கதறி அழுதார். இறந்து போன அந்த இளங்காளையை கண்டு தேம்பி அழுதேன்.
'இந்த பாவிப்பயல் எஸ்.எஸ்.ஆர்., இந்த ஊருக்கு வராமல் இருந்திருந்தால், என் மகன் இறந்திருக்க மாட்டானே என நினைக்கிறீர்களா...' என்று கேட்டேன்.
'இல்லேய்யா... இல்ல சாமி. நீ இந்த ஊருக்கு வரணும். உன்னை கண்ணார பார்த்து, உன் பேச்சை கேட்டுட்டு போயிடணும்ன்னு தான், அவன் தலையில விதி எழுதி வச்சுருக்கு. அவன் போயிட்டான்யா...' என்று சொல்லி, அழுதார்.
எவரோ, எந்த காரணத்துக்காகவோ எழுதி வைத்து விட்டு போன, அந்த விதி என்ற வார்த்தை, இப்போது பகுத்தறிவு இயக்கத்தை சேர்ந்த எனக்கு, ஏதோ ஓர் ஆறுதலை தருகிறது என, எண்ணிக் கொண்டேன்.
'அம்மா, நீங்கள் பெற்ற மகன் இறந்து விட்டாலும், நீங்கள் பெறா பிள்ளை, இதோ எஸ்.எஸ்.ஆர்., இருக்கிறேனம்மா. என்னை பெற்ற தாயை விட, உங்களை பேணி வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன்.
'மாதா மாதம் உங்களுக்கு, 5,000 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். துணைக்கு ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி கடிதம் எழுதுங்கள். இலங்கையில் உள்ள என் நண்பர்களும் உங்களை வந்து பார்த்துக் கொள்வர்...' என்று கூறி, விடைபெற்றேன்.
கொழும்பு விமான நிலையத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள், எங்களை வழியனுப்ப காத்திருந்தனர். அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று, சென்னை விமானத்தில் நாங்கள் புறப்பட்டோம்.
இலங்கையில் நான் கலந்துகொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், தங்கம், வெள்ளியிலான ஏராளமான பரிசு பொருட்களை எனக்கு அளித்திருந்தனர்.
'இலங்கையிலிருந்து வந்த எஸ்.எஸ்.ஆர்., ஏராளமான தங்கப் பதக்கங்கள், நகைகள் கொண்டு வந்துள்ளார். சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, போலீஸ் விசாரணையில் இருக்கிறார்...' என்ற செய்தி பத்திரிகைகளில் வந்து விடக்கூடாதே என கருதி, பரிசுப் பொருட்களையெல்லாம் ஒரு சிறு பெட்டியில் வைத்து தனியாக கையில் எடுத்துக் கொண்டேன்.
சென்னையில் இறங்கியவுடன், சுங்க அதிகாரிகளிடம், அந்த பெட்டியை கொடுத்து, 'வேறு பெட்டிகளில் எங்கள் உடைகள் தான் இருக்கின்றன. இந்த கைப்பெட்டியில் தான் எனக்கு இலங்கையில் கிடைத்த பரிசுப் பொருட்கள் இருக்கின்றன. வேண்டுமானால், அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது சுங்க வரி போட்டால் கட்டி விடுகிறேன்...' என்றேன்.
'அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம். நீங்கள் தாராளமாக உங்கள் பொருட்களை எடுத்துச் செல்லலாம்...' என சொல்லி, இலங்கையில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பற்றி விசாரிக்க துவங்கினர். பிறகு, அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்தேன்.
நான் சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை, தொடர்ந்து ஜனாதிபதியிடமிருந்து பெற்றிருக்கிறேன்.
டில்லியில், ஜனாதிபதி பரிசு பெறுவதென்றால், இரண்டு நாட்களுக்கு முன்பே, அகில இந்திய கலைஞர்கள் அங்கு வரவழைக்கப்படுவர். பரிசளிப்பு நடைபெறுவதற்கு முதல் நாள், எங்களுக்கு ஒத்திகை நடைபெறும்.
பிரதமர், அமைச்சர்கள் பலர், முன் வரிசையில் அமர்ந்திருப்பர். எங்கள் பெயர் போட்ட நாற்காலிகளில் நாங்கள் அமர்ந்திருப்போம். எங்கள் பெயரை சொல்லி அழைப்பு வரும்.
ஒவ்வொருவராக ஜனாதிபதியையும், பிரதமரையும் வணங்கி, பரிசுகளை பெற்று, வணக்கம் தெரிவித்து, பின்புறமாகவே நடந்து சென்று, அவரவர் நாற்காலிகளில் அமர்ந்து கொள்ள வேண்டும். ஒருசமயம், பரிசளிப்பு விழாவுக்கு, நானும், சில கலைஞர்களும் சென்னையிலிருந்து சென்றிருந்தோம். அந்த சிறப்பு விருதை பெற, நடிகை பானுமதியும் வந்திருந்தார். டில்லியில், பரிசளிப்பு விழாவுக்கு முதல் நாள் மாலை, பரிசு வழங்குவது போல அந்த ஒத்திகை நடந்தது.
அடுத்த நாள் மாலை, பரிசளிப்பு விழா துவங்கியது. ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், பிரதமர் மற்றும் அமைச்சர் பிரமுகர்களும் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். ஓரத்தில் நின்று ஒலிபெருக்கியில் ஒருவர், படத்தின் பெயரையும், அதற்கான பரிசை பெறுவோர் பெயரையும் வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தார். அதன்படி ஒவ்வொருவராக சென்று முறைப்படி பரிசை பெற்று, வந்து அமர்ந்தனர்.
என் பெயர் வந்ததும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் முன் நின்று, தமிழில், 'வணக்கம் அய்யா...' என்றேன்.
என் தோளில் கை வைத்து, 'சவுக்கியமா...' என்றார்.
'ஆமாம்' என்பது போல தலை அசைத்து, பரிசை பெற்று, என் நாற்காலியில் அமர்ந்தேன். நான் அங்கே ஜனாதிபதியிடம் பேசியது, பலருக்கு வியப்பை தந்தது.
முதல் நாள், எங்களுக்கு விழாவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பயிற்சியளித்த அதிகாரி, அதிர்ச்சியடைந்து, 'உங்களை விசாரிக்க வேண்டும். இங்கேயே இருங்கள்...' என்றார்.
விழா முடிந்ததும், அந்த அதிகாரி என்னை அணுகி, 'ஜனாதிபதியிடம் நீங்கள் பேசியது குற்றம்...' என்றார்.
'அப்படியென்றால், அவர் என் தோளில் கை வைத்து என்னிடம் பேசினாரே, அதுவும் குற்றம்தானா? இதை ஜனாதிபதியிடம் நீங்கள் கேட்க முடியுமா...' என்றேன்.
அவர், ஹிந்தியில் ஏதோ பேசி, என்னை முறைத்தபடியே சென்று விட்டார்.
அடுத்த நாள் காலை...
எனக்கும், பானுமதி அம்மாவுக்கும், மதிய உணவுக்கு வருமாறு, ஜனாதிபதி மாளிகையிலிருந்து அழைப்பு வந்தது. நாங்கள் புறப்பட்டு சென்றோம். அங்கே, முதல் நாள் என்னை மிரட்டிய அதிகாரி மிகவும் பரிவுடனும், அடக்கத்துடனும் வரவேற்று அழைத்துச் சென்று உள்ளே அமர வைத்தார்.
-தொடரும்.- எஸ்.எஸ்.ராஜேந்திரன்
