PUBLISHED ON : அக் 22, 2023

பா - கே
லண்டனில் வசிக்கும் டாக்டர் நண்பர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.
நான், லென்ஸ் மாமா மற்றும் டாக்டர் நண்பர் மூவரும், மதிய உணவு சாப்பிட, சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றிருந்தோம்.
லென்ஸ் மாமா, முன் கூட்டியே, 'ரிசர்வ்' செய்திருந்த மேஜை முன் அமர, 'மெனு கார்டை' நீட்டியபடி எங்கள் அருகில் வந்தார், ஹோட்டல் ஊழியர்.
அதை வாங்கிய டாக்டர் நண்பர், 'உங்களுக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளதா?' என்று, கேட்டார்.
சற்று அதிர்ந்த அந்த ஊழியர், 'ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும்?' என்றார்.
'ஒரு அனுமானம் தான். சரியான சிகிச்சை எடுத்துக்கிட்டா, பிரச்னை தீரும்...' என்று கூற, எனக்கும், லென்ஸ் மாமாவுக்கும் ஆச்சரியம்.
'எதை வைத்து இப்படி சரியா கண்டுபிடிச்சீங்க. ஏதாவது, மாய மந்திரமா?' என்றார், லென்ஸ் மாமா.
'மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. மருத்துவ துறையின் சமீபத்திய வளர்ச்சி இது...' என்றதும், புரியாமல் விழித்தோம்.
'சரி... சரி... நானே விளக்குகிறேன்...' என்று கூற ஆரம்பித்தார்:
சாதாரணமா உடம்பு சரியில்லேன்னு டாக்டர்கிட்ட போனா, நாக்கை நீட்டச் சொல்லிப் பார்க்கறது வழக்கம். ஆனால், இப்பல்லாம் கையை கவனிச்சுப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க!
'கைகள், உடம்புல உள்ள கோளாறுகளைக் காட்டற கண்ணாடிகள்...' என, சொல்றாங்க.
நோயாளியோட உடல் நிலையை மட்டுமில்ல, மன நிலை-யையும் கையிலேயிருந்து கண்டுபிடிச்சுடலாம்ன்னு சொல்றாங்க.
ஒருவன் தன் உடல்நிலை பற்றி சொல்றதை விட, அவன் கையிலேயிருந்து அதிகமான விஷயத்தைத் தெரிஞ்சுக்க முடியும்.
ஒருவர், படபடப்பாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அவர், தன் கைகளை இறுக பற்றி பிசைந்து கொண்டிருப்பாராம். அதை வைத்து, அவர் படபடப்பாக இருப்பதை கண்டுபிடித்து விடலாம்.
விரல் நகத்தை பார்த்துட்டு கூட, உடம்பை பற்றி பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம். இப்படித்தான், ஒருமுறை, நோயாளி ஒருவர், எங்க மருத்துவமனைக்கு வந்தார்.
சீனியர் மருத்துவரிடம், 'டாக்டர், எனக்கு உடம்பு...'ன்னு ஆரம்பிச்சார்.
'அதெல்லாம் கிடக்கட்டும், முதல்ல உங்க நுரையீரல்ல கோளாறு இருக்கு. உடனே, ஒரு நுரையீரல் நிபுணர்கிட்ட போங்க...' என்றார், அவர்.
'இவரு என்ன மருத்துவரா, ஜோசியரா...' என, வந்தவருக்கு சந்தேகம்.
இதற்கு காரணம், அந்த நோயாளியோட கை விரல் முனைகள் குமிழ் மாதிரி பெருத்து இருந்தது. இதை, 'கிளப் பிங்கர்'ன்னு ஆங்கிலத்தில் சொல்வாங்க. நகங்கள்ல மங்கலான நீல நிறமும், சாம்பல் நிறமும் தெரிஞ்சதும், நோயை கண்டுபிடிச்சுட்டார்.
இது மாதிரி குழந்தைகளுக்கு இருந்தா, இதயத்துல பிறவிக்கோளாறுன்னு ஊகிச்சுடலாம். பெரியவங்களுக்கு இருந்தா, நுரையீரல்ல கோளாறுன்னு அர்த்தம்.
சில சமயம் புற்றுநோயா கூட இருக்கலாம்.
கையில நிறம் மாறுறது, ஒரு முக்கியமான அறிகுறி. உள்ளங்கையில வழக்கத்துக்கு மாறா மஞ்சள் நிறம் தெரிஞ்சா என்ன அர்த்தம் தெரியுமா?
ரத்தத்துல கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைடு இதுல்லாம் அதிகமா சேர்ந்துருக்குன்னு அர்த்தம்.
ஒரு நோயாளியோட கை, அளவுக்கு மீறி சிவப்பா இருந்தாலும் பிரச்னை தான்.
கருவுற்ற பெண்களுக்கு, உள்ளங்கை சிவந்து இருக்கிறதுண்டு. அதனால், எந்த பிரச்னையும் இல்ல.
ஆனா, மத்த பெண்களுக்கும், ஆண்களுக்கும், உள்ளங்கை அளவுக்கு மீறி சிவந்திருந்தா, ஈரல்ல, 'சிர்ரோசிஸ்'ங்கிறகோ-ளாறு இருக்கலாம்.
விரல் நகத்துல வெள்ளைப்புள்ளி இருந்தா, ரத்தத்துல ஏதோ குறை.
நகம் வெளுத்திருந்தா, ரத்த சோகை என்று அர்த்தம்
மருத்துவரை சந்திக்கிறதுக்கு, ஒரு பெண் வந்தாங்க. கைக்குலுக்கிய சமயத்துலயே அந்தப் பெண்ணுக்கு மூட்டு வாதம், ஆரம்ப நிலைங்கிறதை கண்டுபிடிச்சுட்டாங்க.
எப்படின்னா... பிடி வலுவில்லாம, உள்ளங்கை லேசா ஈரமாகவும், தோல் மெலிசா, கதகதப்பாவும் இருந்திருக்கிறது.
சோதித்துப் பார்த்ததில், அது உண்மை என்பதும் நிரூபணமாகியது.
எனவே, தினமும் காலையில் எழுந்ததும், உள்ளங்கையை பார்ப்பது நல்லது என்று மட்டும் நினைக்காமல், உள்ளங்கை மற்றும் நகங்களில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம்.
ஹோட்டல் ஊழியர், 'மெனு கார்டை' நீட்டிய போது, அவர் கைகளைப் பார்த்ததும், அவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பது தெரிந்து விட்டது.
- இவ்வாறு கூறி முடித்தார், டாக்டர் நண்பர்.
'கையைப் பார்த்து ஜோசியம் சொல்றது எல்லாம் மலையேறி விட்டது. நோயை கண்டுபிடிப்பது, 'லேட்டஸ்ட்'ப்பா...' என்ற லென்ஸ் மாமா, தன் உள்ளங்கையை உற்றுப் பார்க்க ஆரம்பித்தார்.
'அதெல்லாம் அப்புறம் நான் பார்த்து சொல்றேன். பசிக்கிறது, சாப்பிடும் வேலையை பார்ப்போம்...' என்றார், டாக்டர் நண்பர்.
லென்ஸ் மாமாவும், டாக்டர் நண்பரும், நடப்பன, பறப்பன, நீந்துவன போன்ற அசைவ உணவுகளில் புகுந்து விளையாடினர்.
நான் வழக்கம்போல், சுடச்சுட இருந்த, 'தாய் காம்போ'வை சாப்பிட துவங்கினேன்.
ப
உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், பாப்ஹோப். அவர் ஒருமுறை, இத்தாலிக்கு சுற்றுலா சென்றார்.
ஊரை சுற்றிப் பார்க்க விரும்பினார். ஆகவே, சுற்றுலாத்துறை வெளியிட்ட குறிப்பு புத்தகத்தை வாங்கி கையில் வைத்துக் கொண்டார்.
ஒரு வழிகாட்டியை அணுகி, 'ஐயா... நான் இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். உதவ முடியுமா...' என்றார்.
'ஓ தாராளமாக... அதற்காகதானே நாங்கள் இருக்கிறோம்...' என்றான், அவன்.
'ரொம்ப மகிழ்ச்சி...'
'நான் உங்களுக்கு, ஊரைச் சுற்றிக் காட்டுகிறேன். ஆனால், ஒரு சிறு நிபந்தனை...'
'என்ன சொல்லுங்கள்...'
'நான் ஊரைச் சுற்றிக் காட்டுவேன். ஆனால், அந்த சமயத்தில் நீங்கள் இந்த குறிப்புப் புத்தகத்தை உபயோகப்படுத்தவே கூடாது...' என்றான்.
'நான் ஏன் அந்தப் புத்தகத்தைப் பார்க்கக் கூடாது?'
'அதெல்லாம் சொல்ல முடியாது...' என, அவன் சொன்னதும், இவருக்கு ஒரு மாதிரியாகி விட்டது. 'இது சரிப்பட்டு வராது...' என, வேறு ஒரு வழிகாட்டியை அணுகினார்.
அவனும், அதே நிபந்தனையை போட்டான். வேறு வழியின்றி, நிபந்தனைக்கு சம்மதித்தார்.
அதன்பின், ஊர் முழுவதையும் சுற்றிக் காட்டினான், அந்த வழிகாட்டி. பிறகு, அந்த ஊர் நாணய மதிப்பு படி, 500 ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டான்.
அறைக்கு வந்த பின், புத்தகத்தை புரட்டினார், பாப்ஹோப்.
'வழிகாட்டி ஏன், இந்த புத்தகத்தை படிக்கக் கூடாது என்று சொன்னான்... புத்தகத்தில் உள்ள குறிப்புகளைத் தானே அவனும் சொன்னான். வேறு எதுவும் மாற்றிச் சொல்லவில்லையே. பிறகு, எதற்கு அவன் பயப்பட்டான்...' என்றபடியே, அதன் கடைசி பக்கத்தை புரட்டினார்.
அதில், 'டூரிஸ்ட் கைடுக்கு கட்டணமாக, 50 ரூபாய் தந்தால் போதுமானது...' என்று, எழுதப்பட்டிருந்தது.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
