PUBLISHED ON : அக் 22, 2023

எஸ். சிவப்பிரகாசம், விருத்தாசலம்: ரஜினிகாந்துக்கு, கவர்னர் பதவி கிடைக்குமா?
சினிமாவிலிருந்து, 'ரிட்டயர்' ஆகும் நிலையில் இருக்கிறார், ரஜினி. அவருக்கு, அவ்வளவு வயதாகி விட்டது. வரும், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தால், அவருக்கு, ஏதோ ஒரு வட மாநிலத்தில், கவர்னர் பதவி நிச்சயம்!
* என். ஜெயம், மேல் புவனகிரி: வரவிருக்கும், வட கிழக்கு பருவ மழையை சமாளிக்க, நம் சிங்காரச் சென்னை தயாராகி விட்டதா?
தயாராகவில்லை... 'கான்டிராக்டர்'கள் ஆளும் கட்சியினருக்கு, 'கொடுப்பதால்' அவர்கள், கண்டு கொள்ளவில்லை; பணிகளுக்கு, இன்னும் பள்ளம் தோண்டியபடி உள்ளனர். பருவ மழையை, சென்னையால் சமாளிக்க முடியாத நிலையே உள்ளது!
எம். மனோகரன், ராமநாதபுரம்: 'மத்திய அரசு பணிக்கு, தமிழர்கள் அதிக அளவு விண்ணப்பம் செய்வதில்லை...' என, ஒரு பேட்டியில், மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாரே...
திராவிட மாடல் கட்சிகள் தான், தமிழகத்தில், ஹிந்தியை ஒழித்துக் கட்டி விட்டனரே. ஹிந்தி தெரியாமல், மத்திய அரசு பணிக்கு சேர, தமிழர்கள் விரும்புவர் என, தப்பு கணக்கு போடுகிறார், நிர்மலா சீதாராமன்!
* எஸ்.என். ஹரிஷ்பாபு, சென்னை: சனாதன தர்மத்தை பற்றி, அவதுாறாக பேசிய, அமைச்சர் சேகர்பாபு, திருக்கடையூரில், 60ம் கல்யாணம் செய்து கொண்டுள்ளாரே...
கட்சியின் மேலிடங்கள் எதிர்க்கும், சனாதன தர்மத்தை பற்றி அவதுாறாக பேசி, பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், அவருக்கு சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளதாலே, திருக்கடையூர் சென்றுள்ளார்!
வே. சாதனா, ஓமலுார்: ஆசிரியர்கள் போராட்டம், தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
அடுத்த ஆண்டு வரவுள்ள, லோக்சபா தேர்தல் முடிவுகள் இதைச் சொல்லும்!
கே. ராசா மரியா, தென்காசி: படித்தவர்கள் கூட, 'ஆன்லைன்' மோசடியில் சிக்கிக் கொள்கின்றனரே...
சுலபமாக பணம் கிடைத்துவிடும் என்ற பேராசையின் காரணமாகவே, மோசடியில் சிக்கி, ஏமாந்து விடுகின்றனர்!
பா. தங்கவேலு, சென்னை: நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறேன். அதற்கு யோசனை சொல்லுங்களேன்...
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்; சிரித்த முகத்தோடு இருங்கள்; பிறருக்கு உதவும் மனதோடு இருங்கள்; யாரையும் வெறுக்காதீர்கள்; சுறுசுறுப்பாக இருங்கள்; உற்சாகமாக இருங்கள்; எப்போதும் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள். நல்ல வாழ்க்கை கிடைத்து விடும்!
