தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வெண் மேகங்கள்!

வெண் மேகங்கள்!

வெண் மேகங்கள்!


PUBLISHED ON : அக் 22, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம் சொன்னதைக் கேட்டதும், ஆயாசமும், அதிர்ச்சியாகவும் இருந்தது, கமலிக்கு.

'அம்மா, இனிமேல் நீங்கள் சமைக்க வேண்டாம் என, மாலினி சொல்லி விட்டாள். நீ சமைத்தால், அவளுக்கு அருவருப்பாக சாப்பிட பிடிக்கவில்லையாம்...'

'ஏன் ராம்?'

'வெண் குஷ்டத்துடன் நீ சமைப்பது அவளுக்கு பிடிக்கவில்லையாம். ஏன், எனக்கு கூட தான் பிடிக்கவில்லை...'

ஆசை ஆசையாக வளர்த்த பிள்ளை, இப்படி சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

என்ன வாழ்க்கை இது... சுகம் என்பதே, என் வாழ்க்கையில் கிடையாதா? 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 6ம் வகுப்பு போக நினைக்கையில், அப்பாவின் தடை, சோகத்தை உண்டாக்கியது.

'அப்பா, எனக்கு மேலே படிக்க ஆசை...'

'சும்மா இரு, படித்த வரை போதும். அம்மாவிடம் வீட்டு வேலைகளை கத்துக்கோ. நாளை கல்யாணம் ஆகிறபோது உதவியா இருக்கும்...'

'அப்பா...'

'சும்மா தொண தொணவென பேசாத. நான் சொல்றதை கேள்...'

இதற்கு மட்டுமா தடை. அப்பாவுடன் காவிரியில் குளிக்கவும் தடை.

'அப்பா, எனக்கு உங்களோட ஆத்துக்கு வந்து நீச்சல் அடிக்கணும்ன்னு ஆசை...'

'கழுதை மாதிரி வயசாறது... இன்னும் என்ன நீச்சல்? இன்னும் ரெண்டு வருஷத்துல பெரியவளாயிடுவ. அப்புறம் கல்யாணம் செய்யணும். ஊருல எல்லாரும் கேலி பண்ணுவாங்க...'

'இதென்ன, ஆணுக்கு ஒரு நீதி; பெண்ணுக்கு ஒரு நீதியா?' உள்ளுக்குள் பொருமினாள், கமலி.

'வாடி இங்கே... சமையல் வேலையில் எனக்கு ஒத்தாசையாக இருந்து, எல்லாம் கத்துக்க. இல்லைன்னா போற இடத்துல பொண்ணை சரியா வளர்க்க தெரியலைன்னு என்னைத் தான் குறை சொல்லுவாங்க.

'உன் வயசுல நான், 50 பேருக்கு சமைச்சவளாக்கும். குதிரை மாதிரி ஊரை சுத்தணுமா உனக்கு...' பொரிந்து தள்ளினாள், அம்மா.

திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த போதும், இவள் கருத்து எடுபடவில்லை.

'அப்பா வேற இடம் பார்க்கலாம். அவங்க வீட்ல வசதி குறைச்சல், பெரிய குடும்பம். அவரும் எலிமென்டரி ஸ்கூல் டீச்சர். சம்பளம் அவ்வளவா வராது...'

'ஏன், இவருக்கு என்ன குறைச்சல். ஆளு பார்க்க ராஜா மாதிரி இருக்கார். இன்னும் பெரிய வரன் பார்த்தா நிறைய சீர் செய்யணும். என்னால் முடியாது, இவர் தான் உனக்கு மாப்பிள்ளை...' நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டார், அப்பா.

புகுந்த வீட்டில் அவருடைய அப்பா, அம்மா, தம்பி, தங்கைகள் என்று, ஒரு பெரிய குடும்பம். இவரும், பெரிய மச்சினர் மட்டுமே சம்பாதித்து, குடும்பத்தை நடத்தினர்.

பிறந்த வீட்டில் தான் தரித்திரம் என்றால், புகுந்த வீட்டிலும் அப்படியே.

எல்லாருக்கும் சமைத்து போட்டு, அவர்களின் படிப்பு, மற்ற தேவைகளை கவனித்து, கல்யாணம் செய்து விட்டு நிமிரும் போது, கமலியின் இளமை தொலைந்திருந்தது. ஏதோ விபத்து போல் ஒரு குழந்தை மட்டுமே. நல்ல வேளை, அது பெண் குழந்தையாக பிறக்கவில்லை. இல்லையென்றால் அதுவும் தரித்திர வாழ்க்கை தான் வாழ வேண்டும்.

சம்பிரதாயம் என்ற போர்வையில், பெண்களின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை அழித்த மகாபாவிகள். நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது. பெற்ற கடனுக்காக அப்பா, அம்மாவின் இறப்புக்கு மட்டும் சென்று வந்தாள். மற்றபடி எந்த விஷயத்துக்கும் பிறந்த வீடு செல்லவில்லை.

ஒரு சமயம், 'ஏன்டி, இப்படி யாரோடவும் ஒட்டாம இருக்க...' கேட்டாள், அம்மா.

'நீ ஒரு அம்மாவா... என் ஆசைகள் ஒன்றாவது உனக்கு தெரியுமா? உன் புருஷன் சொல்வது தான் உனக்கு வேத வாக்கு. நீ பெண்ணே இல்லை...' என்று, எரிந்து விழுந்தாள்.

'ஏன்டி இப்படி பேசற?'

'நீ செய்ததுக்கு, இதற்கு மேலும் பேசுவேன். அவமானப்படாமல் போ...' உறுமினாள், கமலி.

'ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த நிலைமை? ஆணாதிக்க சமுதாயம் இது...' என, நினைத்துக் கொள்வாள்.

நல்லவேளை, இக்கால பெண்கள் நன்கு படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, சுயமாக சிந்தித்து, ஆணாதிக்கத்தை நசுக்குகின்றனர். ஆனாலும், அவர்களுக்கும் சில தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.

பெண் என்றால் வீட்டையும் கவனித்து, வேலைக்கும் செல்ல வேண்டும். குறிப்பாக, குழந்தைகளின் வளர்ப்பு, படிப்பு, அவர்களின் வேலை என்று எழுதப்படாத சட்டம் என, வேதனையுடன் நினைத்தாள், கமலி.

கணவரும் இறந்து போக, அவரின் குடும்ப ஓய்வூதியம் கிடைத்ததில் சற்றே நிம்மதி.

அவளுக்கு உலகமாகி போனான், மகன் ராம். கிடைத்த ஓய்வூதியத்தை வைத்து அவனின் படிப்பையும், குடும்பத்தையும் பார்த்துக் கொண்டாள்.

அவ்வப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், அவலங்களையும் அவனிடம் சொல்வாள்.

'நீ, கவலைப்படாதம்மா. உனக்கு நான் இருக்கிறேன். பெரிய படிப்பு படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, உன் ஆசைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்...' என்ற ராமை, பெருமையுடன் பார்த்தாள்.

எல்லாம் அவனுக்கு கல்யாணம் ஆகும் வரை தான். கல்யாணம் ஆகி மருமகளும் வேலைக்கு செல்வதால், வீட்டு வேலைகளை மகிழ்ச்சியாக செய்தாள், கமலி. குழந்தைகள் பிறந்த பின், அவர்களை வளர்க்கும் பொறுப்பும் சேர்ந்து கொண்டது.

அம்மா இருப்பது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எல்லாம் அந்த சம்பவம் நடைபெறும் வரை தான்.

குளிக்கும் போது கை, கால்கள் மற்றும் உடலின் சில இடங்களில், தோலில் நிறம் மாறி, வெண்மை திட்டுகள் இருந்ததை கண்ணுற்று, கவலையுடன் ராமிடம் தெரிவித்தாள்.

'மெலனின் எனும் வேதிப்பொருள் சுரக்கும் அணுக்கள், உடலில் இல்லாமல் போனால், தோல் நிறம் மாறி வெண் புள்ளிகள் தோன்றும். இது, குஷ்டமோ அல்லது வியாதியோ இல்லை.

'இது, மற்றவர்களை தொடும் போதோ அல்லது ரத்தத்தின் மூலமோ பரவாது. அதனால், கவலைப்பட தேவை இல்லை. இதை குணமாக்க முடியாது. மற்றவர்கள் போல் சாதாரண வாழ்க்கை வாழலாம்...' என்று, மருத்துவர் கூறியதும், சற்று நிம்மதி பிறந்தது, கமலிக்கு.

நாளடைவில் கண், உதடு மற்றும் உடல் எங்கும் பரவியதைக் கண்டு அச்சம் கொண்டாலும், அதனால், எந்த பாதிப்பும் இல்லாதது, அவளுக்கு ஒரு நம்பிக்கையை தந்தது.

''என்ன அம்மா, நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீ பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்? இனிமேல், நீ சமைக்க வேண்டாம். எனக்கும், மாலினிக்கும் பிடிக்கவில்லை. சமையலுக்கு ஒரு மாமியை ஏற்பாடு செய்துட்டேன்,'' என, ராம் கூறியதைக் கேட்டு, பழைய நினைவுகளிலிருந்து மீண்டாள், கமலி; நெஞ்சில் இடி இறங்கிய மாதிரி இருந்தது.

'அம்மா, உன் கையால மோருஞ்சாதம் உருட்டி, அது நடுவுல வத்தக் குழம்பு ஊத்தி கொடு. தேவாமிர்தமா இருக்கும்...' என, ராம் அடிக்கடி கூறியதை, நினைத்து பார்த்தாள்.

அதே கை, இப்போது, வேண்டாமாம்; அருவருப்பாக இருக்காம். நினைக்க நினைக்க அழுகை வந்தது, கமலிக்கு.

''ராம்... இது, குஷ்டம் இல்லை; சாதாரண வெண் புள்ளிகள் தான். இது பரவும் தன்மை இல்லை என்று டாக்டர் சொன்னாரே!''

''டாக்டர் எது வேணுமானாலும் சொல்வார்; அது முக்கியம் இல்லை. எனக்கும், மாலினிக்கும் பிடிக்கவில்லை என்றால், அனுசரித்து போக வேண்டியது தானே,'' என, ராம் சொல்ல, நிலை குலைந்து போனாள்.

வேலை எதுவும் இல்லாமலும், மகன் மற்றும் மருமகளின் அலட்சிய போக்கும், சோகத்தை உண்டு பண்ண, தன்னைத் தானே சுருக்கிக் கொண்டாள்.

இன்னொரு நாள்-

''அம்மா, நீ இந்த அறைக்குள்ளேயே இரு. உனக்கு வேளா வேளைக்கு சாப்பாடு வரும். தப்பித் தவறி மற்ற அறைக்கோ, இல்லை ஹாலுக்கோ வராதே. உன்னைப் பார்த்தால், குழந்தைகளும், மாலினியும் பயப்படுகின்றனர்,'' என, ராம் கூறியதும், ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றியது போலிருந்தது, கமலிக்கு.

'இதற்கு என்ன அர்த்தம்? நீ, வீட்டை விட்டு போ என்று சொல்லாமல் சொல்கிறான். இவனும் ஒரு சராசரி ஆண் என்று நிரூபித்து விட்டான். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று, இந்த காலத்திலும் நிரூபித்து விட்டாள், மாலினி. இனி இங்கே இருப்பது முடியாத காரியம். நமக்குத்தான் அவமானம். என்ன செய்யலாம்?' என்று, சிந்திக்கத் துவங்கினாள், கமலி.

இரவு முழுவதும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

'இனி என்னைத் தேட வேண்டாம். உனக்கு, இனி நான் பாரமாக இருக்க மாட்டேன். குழந்தைகளுக்கு என் ஆசிகள்...' என, ஒரு பேப்பரில் எழுதி வைத்தாள்.

தன் துணிமணிகளை எடுத்து, ஆட்டோவைப் பிடித்து, கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறினாள்.

'நல்ல வேளை, கணவரின் குடும்ப ஓய்வூதியம் வருகிறது. போன ஜென்மத்தில் சிறிதளவு புண்ணியம் செய்திருக்கிறேன்...' என்று நினைத்து, அமைதியானாள்.

கும்பகோணம் வந்ததும், கண்ணை கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. தெரிந்த ஊர் தான். ஆனால், இப்போது எங்கு செல்வது? சரி, நடப்பது நடக்கட்டும் என, காவிரி ஆற்றை நோக்கி நடந்தாள்.

சுழித்து ஓடும் ஆற்றைக் கண்டதும், இனம்புரியாத சந்தோஷம் அவளை பற்றிக் கொண்டது. எடுத்து வந்த பையை கரையில் வைத்து, புடவையை கச்சமாக கட்டிக் கொண்டு, ஆற்றில் குதித்தாள்.

நெடுநாள் ஆசை அல்லவா இது!

நன்றாக நீச்சல் அடித்து, கட்டையென மல்லாக்க படுத்து, கண்களை மூடினாள். இத்தனை வயதான பெண்மணி, மீன் போன்று நீச்சல் அடிப்பதும், மல்லாக்க நீரின் மேல் படுத்துக் கொள்வதையும் கண்டு, ஆச்சரியமாக பார்த்தனர், அங்கிருந்தவர்கள்.

ஆனந்தமாக படுத்திருந்த அவளின் மனம், குதியாட்டம் போட்டது. ஆஹா, இதுவல்லவோ வாழ்க்கை. இதைத்தான் எனக்கு கொடுக்காமல் என் மனதை நோகடித்து கிழித்தனர் என்று நினைத்துக் கொண்டாள்.

தனக்கு மறுக்கப்பட்ட ஆசைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நினைப்பே, அவளுக்கு உற்சாகத்தை தந்தது.

அருகே கேட்ட வேத கோஷம், அவளை எழுப்பியது. கரை ஏறி, மாற்று துணி உடுத்தி, வேத கோஷம் கேட்ட, மடம் நோக்கி நடந்தாள். அவளின் மனதை துாய்மையாக்கியது, வேதம்.

அன்று, மடத்துக்கு சுவாமிகள் வந்திருப்பதாகவும், பக்த கோடிகளை அவர் ஆசீர்வதிக்க போவதாக கூறி, நீண்ட வரிசையில் திரண்டிருந்தனர், மக்கள். கமலியும், அந்த வரிசையில் நின்றாள்.

அவள் முறை வந்ததும், ''சுவாமி...'' என்று தன் கதையை சொல்ல முற்பட்டாள்.

''தெரியும் அம்மா... நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த மடத்தில், உங்களுக்கு பிடித்த வேலையை செய்து, விருப்பமான காவிரி ஆற்றில் குளிக்கலாம்,'' என்று சொல்லி, ஒரு பழத்தை கொடுத்தார்.

''ஆனால், சுவாமி நான் என்ன வேலை செய்ய... என் உடல் முழுவதும் வெண் புள்ளிகள் இருக்கே?'' என்றாள்.

''உங்கள் உடலில் மட்டும் இல்லை; உங்கள் மனதும் வெள்ளை தான். நீங்கள் இங்கேயே தங்கி, மடத்தில் உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்யலாம்,'' என்ற சுவாமிகள் முன், நமஸ்காரம் செய்து, அங்கிருந்து அகன்றாள்.

அச்சமயம், 'அம்மா...' என்ற குரல், அவளை உலுக்கியது. கொல்லைப்புறம் கோசாலையிலிருந்து வந்த அந்த குரலை கேட்டு, பேரானந்தம் அடைந்தாள், கமலி. தினமும் மற்ற பணியாளர்களுடன் இணைந்து, பசுக்களை கவனித்துக் கொண்டாள்.

''இ ருடி சவுந்தர்யா... என்ன, அம்மா அம்மான்னு கத்தற, பசிக்குதா...'' என்றபடியே, அதற்கு தீவனம் வைத்தாள். சாப்பிட்ட பிறகு, தன் நாக்கால், கமலியின் உடல் முழுவதையும் நக்கியது, சவுந்தர்யா.

'ஓ... இதுக்கு மனிதர்கள் போல் நடந்து கொள்ள தெரியவில்லை. கருப்பா இருந்தாலும், வெண் புள்ளிகள் இருந்தாலும், கவலை இல்லை. இவைகளுக்கு தெரிந்தது அன்பும், நன்றி மட்டுமே...' என்று நினைத்து, சவுந்தர்யாவின் கழுத்தை கட்டிக் கொண்டு அண்ணாந்து மேலே பார்த்தாள்.

மேலே மேகங்கள், வெண் புள்ளிகளாக அழகாக உலாவிக் கொண்டிருந்தன.

- ஜி.ஸ்ரீதரன்

வயது: 60

படிப்பு: எம்.ஏ.,

பணி: காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

சொந்த ஊர்: ராமாபுரம், சென்னை.

லட்சியம்: சிறந்த பத்திரிகையாளர் ஆவது.

கதைக்கரு பிறந்த விதம்: காவிரி ஆற்றில் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், மல்லாந்து நீந்தியதை பார்த்ததில் உருவான கரு இது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us