தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (6)

நான் வந்த பாதை! (6)

நான் வந்த பாதை! (6)


PUBLISHED ON : ஜூன் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ். ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

'சிவலீலா' நாடகம், கரூரில் நடந்த போது, ஒரே கை தட்டல், விசில் சத்தம்.

நாடக அரங்கிற்குள் வந்து, ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லி, மேடை முன் நாற்காலியில் அமர்ந்து நாடகம் பார்த்தார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அதிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நாடகம் முழுவதையும் பார்த்தார், என்.எஸ்.கே., நாடக முடிவில் மேடைக்கு வந்து, நாடகத்தை பற்றியும், அதில் பங்கு கொண்டோர் பற்றியும் பாராட்டி பேசி விட்டு, உள்ளே வந்து நடிகர்களிடம் பேசினார். பிறகு, என்னைப் பார்த்து, 'உன் பெயர் என்ன?' என்றார்.

சொன்னேன்.

பிறகு, டி.கே.எஸ்.,சிடம், 'பையன் ராஜேந்திரனுக்கு நல்ல தோற்றம், நடிப்பு இருக்கு. நல்லா வருவான்...' என்றார்.

அதையே பெரிய வாழ்த்தாக எடுத்து, என் உள்ளத்தில் பத்திரப்படுத்திக் கொண்டேன். அப்போது, அவர் என்னிடம், 'உனக்கு என்ன வேண்டும் கேள். ஏதாவது கொடுக்கணும் போல் இருக்கிறது...' என்று, தங்கச் சங்கிலியால் இணைக்கப்பட்ட, அவரது கை கடிகாரத்தை காட்டியபடி கேட்டார்.

அவர் சட்டை பையில் சொருகப்பட்டிருந்த பேனாவை காட்டி, 'எனக்கு அந்த பேனா வேண்டும்...' என்றேன்.

வியந்து போனவர், பேனாவை என் கையில் கொடுத்து, டி.கே.எஸ்.,சிடம், 'ஆகா... ஷண்முகம், ராஜேந்திரன் கலைத்துறையில் மட்டுமல்ல... வேறு துறையிலும் ஈடுபடுவான் போல் தெரிகிறது. வளர்க... வாழ்க...' என்று வாழ்த்தி விடைபெற்றார்.

கடந்த, 1945ல், 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடகத்தை, அண்ணாதுரை எழுதி, என் தங்கை கணவரான, டி.வி.நாராயணசாமியிடம், 'தம்பி, உனக்காக ஒரு நாடகம் எழுதியுள்ளேன்...' என்றார்.

அதை படித்து, பரவசமடைந்த டி.வி.என்., 'இந்த நாடகம் திராவிட கொள்கை முரசாக விளங்குகிறது. விரைவில் இந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்...' என, அண்ணாதுரையை கேட்டுக் கொண்டார்.

அந்த நாடகத்தை தயாரித்து வழங்கும் பொறுப்பையும், டி.வி.நாராயணசாமியிடமே வழங்கினார், அண்ணாதுரை.

மராட்டிய வீரன், சிவாஜியாக நடிப்பதற்கு ஏற்ற நடிகரை தேர்வு செய்யும் வேளையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார், டி.வி.என்.,

தன்னுடன் பாசத்தோடு பழகி வந்த, எம்.ஜி.ராமச்சந்திரனை நாடி, விபரத்தை சொல்லி, 'சிவாஜியாக நாடகத்தில் நடிக்கிறீர்களா...' என கேட்டார்.

'இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. நான் நடிக்கிறேன்...' என, ஆர்வத்தோடு முதலில் ஒப்புக் கொண்டார், எம்.ஜி.ஆர்., பிறகு ஏதோ காரணத்துக்காக, அவரால் நடிக்க முடியவில்லை.

சிவாஜி வேடத்துக்கு மீண்டும் ஆள் தேடலானார், டி.வி.என்.,

என் பரிந்துரையின்படி, அப்போது, நாடகங்களில் பெண் வேடம் ஏற்று நடித்து வந்த, வி.சி.கணேசனிடம், சிவாஜி வசனங்களை கொடுத்து, 'சிவாஜியாக நடிக்கிறாயா...' என்று, டி.வி.என்., கேட்டார். அவர் துள்ளி எழுந்து, 'நான் நடிக்கிறேன்...' என்றார், ஆர்வத்துடன்.

பிறகு, அண்ணாதுரையிடம் சென்று, 'சிவாஜி வேடத்துக்கு, நம் கணேசனை போடலாமே...' என்று யோசனை தெரிவித்தார், டி.வி.என்.,

அதன்பின், சிவாஜி வேடத்துக்கு, வி.சி.கணேசன் தான் என, முடிவெடுக்கப்பட்டு அவரையே தயார்படுத்தினார், டி.வி.நாராயணசாமி.

எங்கள் நாடக குழுவில், நிறைய பத்திரிகைகள் படிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதன் விளைவு: 'நடிகன்' என்ற பெயரில் வாரப் பத்திரிகை ஒன்று துவங்கி நடத்துவது என, முடிவு செய்தேன். அச்சுப் பத்திரிகை அல்ல, கையெழுத்து பிரதி தான். அதுவும் நாடகக் குழுவுக்குள்ளே தான் சுழன்று வரும். வெளியில் யாரும் பார்க்க முடியாது.

அந்த கட்டுப்பாட்டுடன் துவங்கி, அதை நடத்தினேன். அந்த பத்திரிகையின் ஆசிரியர், நான்.

கருணாநிதியின், புதையல் படத்தில், 'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே. கண்ணோடு கொஞ்சும் கலையழகே...' என்ற பாடலை எழுதிய, ஆத்மநாதன் தான், 'நடிகன்' பத்திரிகையின் துணை ஆசிரியர்.

அப்பத்திரிகையில், நாடகக் குழுவுக்குள்ளே நடைபெறும் நல்லது, கெட்டது, அங்கிருப்பவர்களைப் பற்றிய சில விமர்சனங்கள், சில குறைபாடுகள், அங்கு முறையில் இருக்கும் நல்ல செயல்பாடுகள் போன்றவை விமர்சித்து எழுதப்படும்.

இதை நாடகக் குழு அதிபர்கள் உட்பட அனைவரும் படிப்பர். அதில், கேள்வி - பதில்கள் இடம்பெறும். நான் எழுதும் பதில்களால், சிலரின் கோபத்துக்கும் ஆளானதும் உண்டு. அதைப் பற்றி நான் கவலைப் பட்டதில்லை.

சங்கடத்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து அனுபவிப்பதில் தான், மனிதனின் வாழ்க்கையே அடங்கி உள்ளது என, அப்போதே முடிவு கட்டி செயல்பட்டவன், நான்.

நாடக குழு நிர்வாகிகளில் மூத்தவரான டி.கே.சங்கரனிடம் நான் அறை வாங்கிய சம்பவம்...

—- தொடரும்

கேரள மாநிலம், பாலக்காட்டில் நாடகங்களை முடித்து, ஈரோட்டுக்கு எங்கள் நாடகக் குழு பயணமானது. ஈரோடு, 'சென்ட்ரல் தியேட்டரில்' எங்கள் நாடகம் துவங்கியது. இந்த ஈரோடு பயணம் தான் என்னை திராவிட இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளச் செய்தது.அங்கு வந்ததிலிருந்து, ஈ.வெ.ரா.,வை நேரில் பார்த்து பேசி விட வேண்டும் என்று, ஆவல் கொண்டேன். அங்கே, ஈ.வி.கே.சம்பத்தின் தம்பி செல்வம், அடிக்கடி நாடகம் பார்க்க வருவார். எனக்கு, அவர் நண்பராகி விட்டார். அவரிடம், 'ஐயாவை பார்க்க வேண்டும்...' என்ற, என் ஆசையை சொன்னேன். அடுத்த நாள், ஈ.வெ.ரா.,விடம் என்னை அழைத்துச் சென்று, அறிமுகப்படுத்தினார். அவரது சிக்கனப் போக்கை வியப்போடு பார்த்து ரசித்தேன்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us