sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

திண்ணை மேட்டர் கொடுப்பதற்காக, குடையை, கைத்தடி போல் ஊன்றி மெதுவாக நடந்து அலுவலகத்தினுள் வந்தார், நாராயணன்.

எப்போது வந்தாலும், அவர் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில், யாரிடமும் எதுவும் பேசாமல் சென்று அமர்ந்தார்.

'என்னாச்சு இவருக்கு?' என்று ஆச்சரியமானேன்.

இதை கவனித்த லென்ஸ் மாமாவும், நாராயணன் அருகில் சென்று, 'ஓய் நானா... என்ன ஒரு மாதிரியா இருக்கிறீர்?' என்றார்.

'நான் எது சொன்னாலும் தான் உனக்கு பிடிக்கலையே...' என்றார், நாராயணன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்ல, நானா... ஏதோ ஒரு, 'மூடில்' அப்படி சொல்லியிருப்பேன். எனக்கும், மணிக்கும் எவ்வளவு, 'யூஸ்புல்'லான தகவலை எல்லாம் தந்திருக்கிறீர்... உம்மை போய் குறை சொல்வேனா...' என்றபடி, நாராயணனின் ஜோல்னாபையை ஆராய்ந்தார்.

நாராயணனன் தன் ஜோல்னா பையில், பிஸ்கட், முறுக்கு, கடலை மிட்டாய் என்று ஏதாவது ஒரு நொறுக்குத் தீனி வைத்திருப்பார். அவ்வப்போது அவரும் கொறித்து, எங்களுக்கும் கொடுப்பார்.

அதுபோல் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தார், மாமா.

முறுக்கு பாக்கெட் ஒன்றை எடுத்தவர், 'இதென்ன நானா... இன்னொரு சின்ன குடை உள்ளே இருக்கு. எதுக்கு கையில் ஒண்ணும், பையில் ஒரு குடையுமாக திரிகிறீர்...' என்றார், மாமா.

'இது என் மாப்பிள்ளை வாங்கி வந்து கொடுத்தார். ஜப்பானுக்கு சென்றிருந்த ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றி கேள்விப்பட்டேன். அவரை போல் நாமும் இருக்கலாமே என்ற நினைப்பில், இந்த சின்ன குடையை பையில் போட்டு வைத்துள்ளேன்...' என்றார், நாராயணன்.

'இந்த மாப்பிள்ளை புராணம் எப்ப ஒழியுமோ... அது சரி... அதென்ன ஜப்பானுக்கு சென்று வந்தவர் பற்றி ஏதோ கூறினீரே...' என்று மாமா கேட்க, கூற ஆரம்பித்தார், நாராயணன்:

நம் ஊர்க்காரர் ஒருவர், ஜப்பானில், சாலை மேம்பாலத்தில் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று மழைத் துாறல் விழ ஆரம்பித்தது. மழை பலமாக பெய்ய துவங்க, அந்த சமயத்தில், பாலத்தின் நடுவே இருந்த காரணத்தால், நம்ம ஆளுக்கு ஒதுங்க இடமில்லை. ஆகவே, ஓட ஆரம்பித்தார்.

தொடர்ந்து அடுத்த முனைக்கு ஓடுவதா, திரும்பிப் புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவதா என்ற குழப்பம்.

புறப்பட்ட இடமே, அருகில் இருப்பதாக தோன்றியது அவருக்கு. ஓட்டமும், நடையுமாக திரும்பி வர, அச்சமயம், அந்த வழியாக பாலத்தில் வேகமாக போய்க் கொண்டிருந்த கார் ஒன்று, இவரை தாண்டிச் சென்று, திடீரென பிரேக் அடித்து, 'ரிவர்சில்' வந்தது.

காரின் கதவை திறந்து, 40 வயதுள்ள ஒரு ஜப்பான்காரர் இறங்கினார்.

நம் ஊர்க்காரரை புன்னகையோடு நெருங்கி, 'ப்ளீஸ் டேக்...' என்று, எதையோ நீட்டினார்.

மழை பலமாக இருந்ததால், அந்த நேரத்தில் அவர் எதைக் கொடுத்தார் என்பது புரியவில்லை. அதை அவர் அவசரமாக கொடுத்து விட்டு, எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.

அதன் பிறகு தான், இவர் தன் கையில் திணிக்கப்பட்ட அந்தப் பொருளை கவனித்தார்; ஒரு அழகான குடை இருந்தது.

'என் கையில் அவர் திணித்த குடையைப் பார்த்ததும், அப்போது, நான் அனுபவித்த உணர்ச்சியை வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் சிரமம். அந்த மனிதர் தந்த ஆனந்த அதிர்ச்சியில், அந்தக் குடையை விரிக்காமல், துாரத்தில் செல்லும் அந்தக் காரையே நான் நெடுநேரம் பார்த்தபடி நின்றிருந்தேன்.

'அந்த மனிதர், தன் நாட்டையே மதிப்பு உயரச் செய்து விட்டார். அவர் குடை கொடுத்து உதவியது, எனக்கல்ல; அவரின் தேசத்துக்கு!

'இன்றும் அந்தக் குடையை பத்திரப்படுத்தி என்னுடன் வைத்திருக்கிறேன்...' என்று, இந்தியா திரும்பியதும், நண்பர்களிடம் கூறி சந்தோஷப்பட்டுள்ளார், அந்த நபர்.

- இப்படி நானா கூறி முடிக்கவும், 'உம்மிடமிருந்து குடை வாங்குவதற்காகவாவது மழை வரட்டும்...' என்றார், அருகிலிருந்த செய்தியாளர் ஒருவர்.

'மழை வந்தால் தான் கொடுக்கணுமா... வெயில் தான் மண்டை பிளக்கிறதே... யாருக்காவது கொடுக்கலாமே...' என்று மடக்கினார், லென்ஸ் மாமா.



விஞ்ஞானி மற்றும் எழுத்தாளராக விளங்கிய பெஞ்சமின் பிராங்கிளின் எனும் அமெரிக்க நாட்டு அறிஞர், தனக்குத்தானே, 13 கட்டுப்பாடுகளை விதித்து, அதன்படி நடந்து, பல்வேறு சாதனைகளை செய்து, உலகப் புகழ்பெற்றார்.

அவை:

1.மிதமாக இருத்தல் - உண்பதிலிருந்து எதிலும் அளவுடன் இருத்தல்.

2.மவுனம் - மற்றவருக்கும், உனக்கும் பயனளிக்காத எதையும் பேசாதிருத்தல்.

3.ஒழுங்குமுறை - எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்தல்.

4.உறுதி எடுத்தல் - எதைச் செய்ய வேண்டுமோ, அதை உறுதியுடன் செய்து முடித்தல்.

5.சிக்கனம் - உனக்கும், மற்றவருக்கும் பயனற்றது என்றால், அதற்காக செலவழிக்காதே; எதையும் வீணாக்காதே.

6.உழைப்பு - நேரத்தை வீணாக்காமல், பயனுள்ள ஏதாவது ஒன்றில் ஈடுபடு.

7.நேர்மை - எதிலும் நேர்மையாக இரு; எவரையும் ஏமாற்றாதே.

8.நீதி - மற்றவருக்கு உரியதைத் தருவதை உன் கடமையாகக் கொள்; எவரையும் காயப்படுத்தாதே.

9.எல்லை மீறாதே - எதிலும் எல்லைத் தாண்டிப் போகாதே, எதிலும் அளவோடு இரு. உனக்கு ஏற்படும் காயங்களைப் பொறுத்துக் கொள்; தேவைக்கு மேல் வருந்தாதே.

10.சுத்தம் - எதிலும் சுத்தமாய் இரு. உடல், உடை இருப்பிடம் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்.

11.சாந்தம் - சிறு பிரச்னைகளால் மனம் தளராதே; அமைதியாக இரு.

12.துாய்மை - பாலியல் உறவை சந்ததியை உருவாக்கவும், உடல் நலத்தைப் பேணும் வகையிலும் வைத்துக் கொள். உனக்கோ, மற்றவருக்கோ, ஊறுவிளைவிக்கும் வகையிலோ அல்லது உன் மதிப்பையோ, மற்றவர் மதிப்பையோ கெடுக்கும் விதத்தில் அதைக் கொள்ளாதே.

13.எளிமை - ஆடம்பரமாக இராதே.

இது போன்று தான், உலகில் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் அத்தனை சாதனையாளர்களும், தங்களுக்குள் சில திட்டங்களைத் தீட்டியும், கட்டுப்பாடுகளை விதித்தும், சாதனை செய்கின்றனர்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us