sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (9)

நான் வந்த பாதை! (9)

நான் வந்த பாதை! (9)


PUBLISHED ON : ஜூலை 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

படப்பிடிப்புக்காக, குடியாத்தம் செல்லும் வழயில், புச்சிக் கடிக்கு ஆளான, என்.எஸ்.கிருஷ்ணனின் உடல், முகம் வீங்கி, செய்வதறியாது திகைத்து போனோம். அப்போது, அந்த வழியே வேட்டியும், மேல் துண்டும் அணிந்த விவசாய பெரியவர் ஒருவர், அங்கே வந்தார்.

நிலைமையை புரிந்து, 'யாரும் பயப்படாதீங்க. ஏதோ விஷப்பூச்சி கடிச்சிருக்கு. கொஞ்சம் பொறுங்க...' எனக் கூறி, அருகிலிருந்த வேப்ப மரக்கிளையின் இலைகளை உருவி வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக மென்று விழுங்கும்படி, என்.எஸ்.கே.,க்கு கொடுத்தார்.

அவரும் மென்று தின்று விழுங்கிக் கொண்டே இருந்தார்.

'என்ன ஆச்சரியம், வேப்ப இலை எனக்கு கசக்கலை...' என்றார், என்.எஸ்.கே.,

'கசக்குற வரை சாப்பிட்டுக் கொண்டே இருங்கள்...' என, வேப்பிலையை கொடுத்துக் கொண்டே இருந்தார், அந்த பெரியவர். வீக்கம் லேசாக குறைய ஆரம்பித்தது.

'இப்பத்தான் கொஞ்சம் கசக்கிற மாதிரி இருக்கு. வீக்கமும் குறைந்து விட்டது. இப்போ நல்லாவே கசக்குது. மறுபடியும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆக்கிட்டிங்களே என்னை...' என சொல்லி சிரித்து, 1,000 ரூபாயை விவசாயிக்கு கொடுத்தார், அந்த வள்ளல்.

'எனக்கா, 1,000 ரூபாயா... ஒரு வீடே கட்டி விடுவேனே...' என்றார், விவசாயி.

'கட்டுங்கோ கட்டுங்கோ. பணம் போதாட்டா, சென்னையில் வந்து என்னை பாருங்க...' என்றார், என்.எஸ்.கே.,

பிறகு திட்டமிட்டபடி, குடியாத்தத்தில் படப்பிடிப்பை முடித்து, சென்னை திரும்பினோம்.

அண்ணாதுரை எழுதிய, சொர்க்கவாசல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அண்ணன், கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடியாக பத்மினி. இன்னொரு ஜோடி, அஞ்சலிதேவி. அவருக்கு இணையாக நடிக்கப் போகும் கதாநாயகன், முடிவு செய்யப்படவில்லை.

அப்போது, கோவை, எடிசன் தியேட்டரில், கே.ஆர்.ஆர்., நாடக குழுவில், தமிழன் பெருமை, ஏ.கே.வேலன் எழுதிய, 'சிலம்பு' போன்ற நாடகங்களில், நான் கதாநாயகனாக நடித்து வந்தேன். அச்சமயங்களில் அடிக்கடி எங்கள் நாடகங்களை காண வருவார், நடிகை அஞ்சலிதேவி.

ஒருநாள், என் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துக் கொண்டு, சென்னை, நெப்ட்யூன் ஸ்டூடியோவுக்கு போனார், அண்ணாதுரை. அங்கு, பட அதிபர் சோமு அறைக்கு சென்றோம்.

சோமுவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, 'தம்பி, ராஜேந்திரனுக்கு எப்போது படப்பிடிப்பு இருக்கும்...' என கேட்டார், அண்ணாதுரை.

சொன்னார், சோமு. படப்பிடிப்பு நடக்கும் ஸ்டூடியோவுக்குள் சென்றோம்.

அங்கிருந்த அஞ்சலிதேவியை காட்டி, 'நீ போய், அந்த அம்மாவிடம் பேசு...' என்றார், சோமு. அஞ்சலிதேவி அருகில் எனக்கு ஒரு நாற்காலி போடப்பட்டது. நாடகங்களில் என்னைப் பார்த்திருந்த அவர், 'வாங்க, உட்காருங்க...' சிரித்தபடியே சொன்னார்.

'இந்த படத்தில், உங்களுடன் கதாநாயகனாக நடிக்க என்னைத்தான் முடிவு செய்திருக்கின்றனர்...' என்றேன்.

'அப்படியா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்...' என்றவர், சோமுவை அருகில் அழைத்து, 'இவரை தேர்ந்தெடுத்தது, சூப்பர். நல்ல தோற்றம், நன்றாக தமிழ் பேசி, அருமையாக நடிப்பார்...' என்றார்.

பிறகென்ன, நான் தான் அவருக்கு கதாநாயகனாக நடிப்பது என்று முடிவானது. படத்தில், அஞ்சலிதேவியின் பெயர், திலகவதி. என் பெயர், முத்துமாணிக்கம். படப்பிடிப்பு முடிந்து, படம் வெளியானது. அண்ணாதுரையின் வசனங்கள், சினிமா உலகில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.

படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும், 'எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்றம்' என்ற நாடக குழுவைத் துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம், என்னோடு முன்பு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாடக நடிகர் - நடிகையர் மற்றும் காட்சி உடை தொழிலாளர்கள், வேலையின்றி சங்கடப்பட்டனர்.

சிறு வயதிலிருந்தே நடித்துக் கொண்டிருந்த எனக்கும், நாடகங்களில் நடிக்காமல் இருக்க முடியவில்லை.

'எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்ற'த்தின் சார்பாக, அண்ணாதுரை எழுதிய, 'சந்திரமோகன்' கருணாநிதியின், 'அம்மையப்பன்' போன்ற நாடகங்களை, நாடெங்கும் நடத்தி வந்தோம்.

எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்றத்தின் சார்பாக, 'என் தங்கை' நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் நான், கதாநாயகன். எனக்கு தம்பியாக, சிவாஜி நடித்தார். சென்னையில், பல சபாக்களில் அந்த நாடகங்களை நடத்தினோம். பிறகே அக்கதை திரைப்படமானது. என் வேடத்தில், எம்.ஜி.ஆர்., நடித்தார்.

சென்னை கடற்கரைப் பக்கம், ஒரு மாடி பகுதியை வாடகைக்கு இடம் பிடித்திருந்தேன். எனக்கு, ஒரு படுக்கை அறை. முன்னால் ஒரு பெரிய ஹால். அதில், 15 பேராவது படுத்து உறங்க முடியும்.வாடகை, 15   ஆயிரம். அங்கேயே சில நாடக நடிக நண்பர்களும் என்னுடன் தங்கியிருந்தனர்.

அதுமட்டுமல்ல, வெளியூரிலிருந்து சென்னை வந்து போகும் நடிகர்கள் தங்கிச் செல்வதற்கும், அந்த வீடு பயன்பட்டது.

- தொடரும்.

ஒருசமயம், எஸ்.எஸ்.ஆர்., பிக்சர்ஸ் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்துக்கு, வெளிப்புற காட்சிகளை எடுப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க, ஆந்திராவில் உள்ள ஒரு பகுதிக்கு சென்றோம்.காரில், வெகு நேரம் அமர்ந்து பயணித்தது, எனக்கு கொஞ்சம் சோர்வாக இருந்தது. நெல்லுாரில், ஒரு கடை வீதியில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி, 'இது ஆந்திரப் பகுதியாச்சே. என்னை யாருக்கும் தெரியாது...' என எண்ணியவாறு, ஜாலியாக நடக்கலானேன். அவ்வளவுதான்.'விசித்திர வீரடு, விசித்திர வீரடு...' என கத்தியவாறே, என்னை சுற்றி பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து விட்டேன்.விசாரித்ததில், நான் தமிழில் நடித்து வெளிவந்த, சங்கிலித் தேவன் படம், விசித்திர வீரடு என, தெலுங்கில் பெயர் சூட்டப்பட்டு, அங்கே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. இளநீர் வாங்கிக் கொடுத்து, என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின், எனக்கு தெரிந்த அளவில் தெலுங்கில் பேசி, அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us