PUBLISHED ON : மே 06, 2012

எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், வெளிப்படையான மனதும் இருந்தால், எந்த சூழ்நிலையிலும் வசிக்கலாம் என்பதற்கு, சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறார், சீனாவைச் சேர்ந்த ஜெங் லிங்சுன் என்ற இளைஞர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.
சீனாவின் முக்கியமான நகரமான சென்யாங்கிற்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி வந்தார். சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் தங்கி வந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஓட்டல் ஒன்றில், பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த ஒரு கழிப்பறையை விலைக்கு வாங்கினார்.
மிகச்சிறிய பரப்பளவு உள்ள அந்த கழிப்பறையை, அழகுபடுத்தி, அட்டகாசமான வீடாக மாற்றினார். அந்த சிறிய அறைக்குள்ளேயே, படுக்கை, சமையல் செய்வதற்கான இடம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார். கழிவுக் கலம் அமைக்கப்பட்ட இடத்தை மட்டும், துணியால் மூடி, வெற்றிகரமாக அந்த வீட்டில் குடியேறி விட்டார். இதற்கு பின், அவருக்கு திருமணம் நடந்து, குழந்தையும் பிறந்து விட்டது. தற்போது, மூன்று பேருமே அந்த கழிப்பறை வீட்டில் தான் வசிக்கின்றனர். லிங்சுன் கூறுகையில், 'சில நேரங்களில் கழிப்பறையில் இருந்து, மிக மோசமான நாற்றம் அடிக்கும். அப்போது மட்டும், வாசனை திரவியங்களை தெளித்துக் கொள்வோம். மற்றபடி, இந்த வீடு எங்களுக்கு வசதியாகவே உள்ளது...' என்கிறார்.
— ஜோல்னா பையன்.
