sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

போராட்டங்கள் ஏதுமில்லை!

/

போராட்டங்கள் ஏதுமில்லை!

போராட்டங்கள் ஏதுமில்லை!

போராட்டங்கள் ஏதுமில்லை!


PUBLISHED ON : அக் 23, 2022

Google News

PUBLISHED ON : அக் 23, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அம்மா, உங்களுக்கு, 'ரிடையர்மென்ட்' எப்போ?'' கேட்டான், கணேஷ்.

''இரண்டு வருஷம் இருக்குதுடா,'' -என்றாள், மேகலை.

''நீங்க, 'ரிடையர்' ஆனதும், என்னுடன் நியூஜெர்சிக்கு வந்துடணும். உங்களுக்கு அங்கேயே, 'கிரீன் கார்டு'க்கு ஏற்பாடு பண்ணிடுறேன்.''

''ஆமாம் அத்தை...- கொஞ்ச நாள் அங்கே பழகிட்டா உங்களுக்கு ரொம்ப பிடிச்சு போகும்,'' என்று, மருமகளும் சேர்ந்து கொண்டாள்.

''அண்ணா... அம்மாவை என் கூட டில்லிக்கு கூட்டிப் போகலாம்ன்னு இருக்கேன்,'' என்றாள், மகள் தேவி.

மகனும், மகளும் குடும்பத்தோடு தன்னைச் சுற்றி உட்கார்ந்திருப்பதை நிறைவாகப் பார்த்து, ''ஊர் சுற்றி பார்க்கணும்ன்னா வருவேன். ஆனா, நிரந்தரமா என்னால் எங்கேயும் தங்க முடியாது,'' என, மேகலை சொல்லிக் கொண்டிருந்தபோது, 'மேடம், கூரியர்...' என, வாசலில் சத்தம் கேட்டது.

தனக்கு யார் கடிதம், அதுவும் கூரியரில் அனுப்பியிருப்பர் என்ற வியப்புடன், கடிதத்தை கையெழுத்திட்டு வாங்கினாள், மேகலை. அதற்குள் வாரிசுகள் அவளை சூழ்ந்து கொள்ள, கவரைப் பிரித்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தாள்.

மொட்டையாக ஆரம்பித்திருந்தது கடிதம்.

என் பெயர் கல்பனா. தங்கள் கணவரின் தாலி கட்டாத மனைவி. தங்கள் கணவருடன், 15 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவரை இழந்து நிற்கிறேன். எங்கள் மகனுக்கு வயது, 13.

எனக்கு சரியான வேலை இல்லை. வேறு எந்த வருமானமும் இல்லாமல் பையனை படிக்க வைத்து, வாழ்க்கையை நடத்த மிக சிரமமாக உள்ளது. ஆகவே, தாங்கள் இப்போது வாடகைக்கு விட்டிருக்கும், என் கணவருக்கு சொந்தமான வீட்டில், எனக்கான பங்கை பிரித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு, இதில் ஏதும் ஆட்சேபணை இருப்பின், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

ஒரு நிமிஷம் நிலவிய மவுனத்தை கணேஷின் ஆங்கார குரல் உடைத்தது.

''யாரும்மா இந்த கல்பனா, அந்த கேடு கெட்டவள் தானே. என்ன தைரியம் இருந்தா, நம் சொத்துல பங்கு கேட்பா?''

மகள் தேவியின் குரலும் அவனுடன் சேர்ந்தது.

''அம்மா... அந்த இடம், தாத்தா உங்களுக்கு கொடுத்த பங்கு. அதில், கடன் வாங்கி நமக்காக அந்த வீட்டை கட்டினார், அப்பா. அந்த வீட்ல ஒவ்வொரு அடியும் நாம் பார்த்து, பார்த்து கட்டினது. நியாயமா பார்த்தா, அது, உங்க வீடு. தெருவில் போற, வர்றவங்களுக்கு எல்லாம் அதில் பங்கு கொடுக்க முடியாது.''

ஒவ்வொரு ஆண்டும் அம்மா வேலை பார்க்கும் பள்ளியில் விடுமுறை விடும்போதெல்லாம் அண்ணனும், தங்கையும் சொல்லி வைத்தாற்போல் விடுமுறை எடுத்து, தங்கள் குடும்பத்துடன் அம்மாவைப் பார்க்க வந்து விடுவர். மேகலைக்கு அவர்களுடன் இருக்கும், 10 - 20 நாட்கள் தான், ஆண்டின் மிச்ச நாட்களையும் தனியாக கழிப்பதற்கான தெம்பை கொடுக்கும்.

இப்போது அவர்கள் நிம்மதியையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கிறது, இந்த கடிதம். அவர்கள் வரும் சமயமாக பார்த்து தான் பங்கு கேட்கிறாள், கல்பனா. தன் கணவரை பங்கு போட்டவள், இப்போது வீட்டிலும் பங்கு கேட்கிறாள்.

கல்பனாவை முதன்முதலாக பார்த்தது, தன் மூன்று வயது மகனுடன், அவள் வந்து தன் வீட்டு வாசலில் நின்ற போது தான். மேகலையின் கணவர் சிவகுமார் முதலில் திகைத்தாலும், 'உள்ளே வா...' என்று அழைக்கவும், உள்ளே வந்தாள்.

கணவரைப் பற்றி சிறிதும் சந்தேகம் இல்லாததால், தெரிந்தவர் யாராவது இருக்கும் என்ற அவளது நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது, சிவகுமாரின் அடுத்த வார்த்தை...

'மேகலை, இவள் பெயர் கல்பனா. கொஞ்ச நாள் நம் வீட்டில் தான் இருப்பாள்...' சங்கடத்துடன் சொன்னார், சிவகுமார்.

'கொஞ்ச நாள் என்னங்க... இனி, இது தான் எனக்கும் வீடு. நீங்க வந்து வந்து போயிட்டு இருந்ததால, இவ்வளவு நாள் இருந்த வீட்டையும் காலி பண்ண சொல்லிட்டாங்க. நானும், பிள்ளையும் வேறு எங்கே போறது?' திமிராக பேசினாள், கல்பனா.

அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாத சிவகுமாரின் மவுனம், மேகலைக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தது. திடீரென்று தாக்கிய அதிர்ச்சியால் நிலைகுலைந்த மேகலை, தன் இரு பிள்ளைகளுடன், வீட்டை விட்டு வெளியேறப் போனாள்.

'மேகலை, எங்க வங்கிக்கு ஒரு தடவை வந்தபோது, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவளுக்கு உதவப் போய், எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டிருச்சு... உங்கிட்ட சொல்றதுக்கு துணிச்சல் இல்லாமல் இதுநாள் வரை மறைச்சிருந்தேன்...' கணவரின் சமாதானம் அவளிடம் எடுபடவில்லை.

கணேஷுக்கு அப்போது, 20 வயது இருக்கும்.

முதுகில் குத்தப்பட்ட உணர்வில், 'நாம எதுக்கும்மா வீட்டை விட்டு போகணும்; இது, தாத்தா உங்களுக்குன்னு கொடுத்தது. அந்த ஆளை வெளியே போகச் சொல்லுங்க...' அந்த நிமிடத்தில், அப்பா மீது அவன் வைத்திருந்த அன்பு, மரியாதை எல்லாம், பொடிப் பொடியானது.

மகன் பேசிய அதிர்ச்சியில், எதுவும் பேசாமல் அந்தப் பெண்ணுடன் வெளியேறிய சிவகுமார், தனியாக வீடு பார்த்து, அவளுடன் வாழ்வதாக கேள்விப்பட்டது தான்.

மேகலைக்கு தாங்கவில்லை. இவளிடம் எதைக் கண்டு தன் கணவர் விழுந்தார் என பலமுறை யோசித்திருக்கிறாள். தன்னிடம் காலாவதியான பருவம், வயது இதை அவளிடம் கண்டு மயங்கினாரா அல்லது அவர் சொல்வது போல தவிர்க்க முடியாத சூழ்நிலையா?

வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள், சவால்கள் என்றே காலம் ஓடி விட்டது. பொம்பளை பிள்ளைங்க வேலைக்கெல்லாம் போகக் கூடாது என்ற, தந்தையின் எதிர்ப்பை மீறி, ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன், கிடைத்த அரசு பள்ளியில் வேலைக்கு சேர்ந்தாள். திருமணமான பிறகும் மாமியார் விதித்த தடைகளை மீறி, வீட்டு வேலைகள், பிள்ளைகளையும் கவனித்தபடி, வேலையில் தொடர்ந்தாள்.

பிள்ளைகள் சிறிது வளர்ந்ததும், வீடு கட்டும் ஆசை வந்தது. அப்போதும் சிவகுமார், தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே கடன் சுலபமாக கிடைக்கும் என்று, மேகலையின் அப்பா கொடுத்த நிலத்தில், தன் பெயரில் கடன் வாங்கி, வீடு கட்டினார்.

பிள்ளைகள் உற்சாகமாக பங்கு கொள்ள வீடு கட்டி, வாழ்க்கை நிம்மதியாக போகும் போது தான், கணவரின் துரோகம் தெரிந்தது. உறவுகள் கூடி மிரட்டியும், கெஞ்சியும் பொருட்படுத்தாமல் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்தாள், மேகலை.

கணவர் கட்டிய வீட்டில் வாழ மனமில்லாமல், அதை வாடகைக்கு விட்டாள். தன் பள்ளியில் கடன் வாங்கி, தனி வீடு வாங்கி, குடியேறினாள்.

பிள்ளைகளின் கல்யாணமும் பிரச்னையாகத்தான் இருந்தது. உறவுகளின் மத்தியில் சிவகுமாரின் தகாத உறவால், அவர்களின் திருமணத்தை கேள்விக்குறியாக்கியது. போராடித்தான் அவர்களுக்கு நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்து தர முடிந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிவகுமார் இறந்த போதும் உறவுகளின் வற்புறுத்தலால் மகனை அழைத்துச் சென்று, இறுதிக் காரியங்களை செய்ய வைத்தாள். மகன் அமெரிக்காவுக்கும், மகள் டில்லிக்கும் போக, தனிமை வாழ்க்கை பழகிப் போனது. இப்போது, கல்பனா ஏற்படுத்தும் பிரச்னை.

துவண்டு போன மேகலையை கணேஷும், தேவியும் சமாதானப்படுத்தினர்.

''அம்மா, வாழ்க்கையில நீங்க எவ்வளவோ பிரச்னையை சந்திச்சு, போராடி ஜெயிச்சிருக்கீங்க; இதுலேயும் ஜெயிப்பீங்க. நாம ஒரு வக்கீலை பார்த்து, அந்த கல்பனா திரும்ப இந்த பிரச்னையை கிளப்பாம, சட்டத்தாலேயே அவளை அடிப்போம்.''

அம்மாவை ஒரு வக்கீலிடம் அழைத்துச் சென்று, விபரம் சொன்னதும், ''உங்களுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சா?'' என்றார், வக்கீல்.

''லீகலா ஆகலை சார்... ஆனா, கணவரை பிரிஞ்சு, 10 வருஷமாச்சு. அவரும், அந்தப் பெண்ணோட தாலி கட்டாம தான் குடும்பம் நடத்தியிருக்கார்.''

''அவர் இறந்த பிறகு அவருக்கு கிடைத்த பணம்?''

''என் பையன் தான், அவருக்கு இறுதிக் காரியங்கள் பண்ணினான். ஆனா, நான் எதுவும், 'க்ளைம்' பண்ணல; அவளுக்கும் சட்டப்படி எதுவும் கிடைக்கல; இன்னும், 'பெண்டிங்'கில் தான் இருக்கு.''

''பிரச்னையே இல்லைம்மா... அவங்களுக்கு சொத்துல பங்கு கேட்க எந்த உரிமையும் இல்லை. அவங்களை வரச் சொல்லி, விளக்கமா சொல்லிடுவோம். நீங்களா இஷ்டப்பட்டா ஏதோ அஞ்சு, பத்து கொடுங்க.''

''வேணாம், சார்... நீங்களே சொல்லி முடிச்சி வச்சிடுங்க.''

''வரட்டும்மா... நானும் நேரில் பார்த்து நாக்கை பிடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்தை பேசுறேன். அப்பத்தான் மனசு ஆறும்,'' குறுக்கிட்டான், கணேஷ்.

''சரி, இப்பவே வரச் சொல்றேன்,'' என்ற வக்கீல், அவள் அனுப்பிய கடிதத்தில் இருந்த மொபைல் நம்பருக்கு போன்செய்தார்.

''இப்போவே வர்றேன்னு சொல்லிட்டாங்க,'' என்றார்.

அரை மணி நேரத்திற்கு பின், தன் மகனோடு வந்தாள், கல்பனா.

கறுத்து, தளர்ந்த, மெலிந்த உடலில் நைந்த சேலை, இடுங்கிய கண்கள், துாக்கி கட்டிய முடி, முகத்தில் வரி வரியாக ஓடிய சுருக்கங்கள், தன்னை விட அதிக மூப்புள்ளவள் போன்ற தோற்றம். முதலில் அவள் பின்னால் நின்ற பையனை பார்க்கவில்லை.

மகனை முன்னிறுத்தி, ''இவன், என் மகன் சண்முகம்... மூத்த பையனுக்கு கணேசன்னு பேர். இவனுக்கு சண்முகம்ன்னு, அவர் இஷ்டப்பட்டு வச்ச பேரு. அநாதையா, சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்த என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு ஆதரவு கொடுத்தார். பின்னால் அது நெருக்கமாயிடுச்சு.''

அவள் சொல்வது எதுவும் காதில் விழாமல், அந்தப் பையனையே பார்த்து, திகைத்து நின்றான், கணேஷ்.

நீல நிறக் கண்கள், கூர்மையான சற்றே வளைந்த மூக்கு, அகன்ற வாய், முன்னுச்சியில் கட்டுக் கடங்காமல் புரளும் முடி. அச்சு அசலாக அப்படியே, 13 வயது கணேஷாக, தானே தன் முன்னால் நிற்பது போல இருந்தது.

மேகலையும் அப்படித் தான் திகைத்து நின்றாள். சின்ன வயது கணேஷாக, தன் முன் நின்றவனைத் தவிர, வேறு எதுவும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை.

சட்டென்று அந்த வித்தியாசமும் அவளுக்கு புலப்பட்டது. அந்த வயதுக்கே உரிய கலகலப்புடனும், குறும்புடனும் சேட்டை பண்ணிக் கொண்டிருந்த கணேஷ் இல்லை இவன்.

ஒடுங்கிப் போய், எதிராளி என்ன சொல்லித் திட்டு வரோ என்று, கண்களில் தெரிந்த பயத்துடன், தாயின் கையைப் பிடித்து ஒதுங்கி நின்றான், கல்பனாவின் மகன் சண்முகம். திரும்பி தன் மகனையும், மகளையும், அவர்களின் அதிர்ச்சியை பார்த்தாள், மேகலை.

''வக்கீல் சார், அது என் கணவரின் வீடு. அவர் நினைவாக எனக்கு எதுவும் வேண்டாம். அந்த சொத்தில் எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ எந்த பங்கும் வேண்டாம். முழு மனதோடு தான் இதை சொல்கிறேன்.

''அதேபோல், அவருடைய ஆபீசிலிருந்து வர வேண்டிய பணம் எல்லாம் அவளுக்கே போகட்டும். அதற்கு என்னென்ன செய்யணுமோ, எங்கே கையெழுத்து போடணும்ன்னு சொல்லுங்க. பிள்ளைங்க இரண்டு பேரும் ஊருக்கு போறதுக்குள்ள இதை முடிச்சிடுவோம்,'' என்றாள்.

கணேஷும், தேவியும் அம்மா சொல்வதை ஆமோதிப்பதைப் போல அமைதியாக நின்றனர்.

''சரி, நாங்க புறப்படுறோம் சார்...'' என்றாள்,மேகலை.

கண்களில் நீர் பெருக, தன் கால்களில் விழப் போன கல்பனாவைத் தடுத்து, அவள் கைகளை ஆதரவாகப் பற்றினாள்.

அவள் பக்கத்தில் நின்ற சண்முகத்தின் கன்னத்தில் தட்டி, ''நல்லாப் படி... அண்ணாவைப் போல, அக்காவைப் போல நீயும் பெரிய ஆளா வரணும்,'' என்று சொல்லி, வெளியேறினாள், மேகலை.

காரை நிதானமாக ஓட்டினான், கணேஷ்.

சிலுசிலுவென்ற காற்றில் பறந்த முடியை ஒதுக்கியபடி, ''கணேஷ், போராடித் தான் ஜெயிக்கணும்ன்னு இல்லை. நாம் விட்டுக் கொடுத்து ஜெயிச்சிருக்கோம்,'' என்றாள், மேகலை.

என்.விஜயலட்சுமி

படிப்பு: பி.எஸ்சி.,

அரசு பணி ஓய்வு

சொந்த ஊர்: மதுரை

இதுவரை வெளியான படைப்புகள்: பல வார, மாத இதழ்களில் துணுக்கு மற்றும் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 'மங்கையர் மலர்' இதழில், ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டியில், நான்கு முறை பரிசு பெற்றுள்ளார். 'வாரமலர்' இதழில், இதுவே இவரது முதல் சிறுகதை.

கதைக்கரு பிறந்த விதம்: முறை தவறிய உறவில் பிறக்கும் குழந்தைகள் பரிதாபத்துக்கு உரியவர்கள். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் அவர்களின் நிலை குறித்த அனுதாபத்தில் உருவானது.







      Dinamalar
      Follow us