தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திருவூறல் திருவிழா!

திருவூறல் திருவிழா!

திருவூறல் திருவிழா!


PUBLISHED ON : ஏப் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவிழாக்கள் அனைத்துமே அறிவியலுடன் சம்பந்தப்பட்டவை தான்.

'கொண்டைக்கடலை உடலுக்கு நல்லது. அதைச் சாப்பிடு...' என்று சொன்னால், யாரும் கேட்பதில்லை. அதையே சரஸ்வதிக்கு படைத்து, பிரசாதமாகக் கொடுத்தால், பயபக்தியுடன் வாங்கி சாப்பிடுவர்.

புரட்டாசியில் தோல் நோய்கள் அதிகரிக்கும். தோல் நோயை, சுண்டல் தானியங்கள் கட்டுப்படுத்தும். இதனால் தான், நவராத்திரியின் ஒன்பது நாளும், அம்பாளை ஒன்பது வடிவில் பூஜித்து, சுண்டல் உண்கிறோம். ஒவ்வொரு பண்டிகையின் போதும், உண்ணும் பண்டத்துக்கும் ஒரு சக்தி உண்டு.

இதே போல் தான், சித்ரா பவுர்ணமியும். இது, அறிவியல் திருவிழா.

பழங்காலத்தில் இதை, திருவூறல் திருவிழா என்றனர். திருவூறல் என்றால், ஊற்றுத் தண்ணீர்.

சித்திரை மாதத்தில் ஆறுகளில் தண்ணீர் வற்றியிருக்கும். கோடையின் தாக்கம் கடுமையாக இருக்கும். இந்நேரத்தில் உடலைக் குளுமைப்படுத்த, ஆறுகளில் ஊற்றுத்தோண்டி குளிப்பர்.

ஆற்று நீரை விட, ஊற்று நீர் சுவையாகவும், உடலுக்கு குளுமை தருவதாகவும் இருக்கும். இதனால், மக்கள், ஆறுகளைத் தேடி வருவர். அதிலும், புழுக்கம் மிகுந்த இரவு நேரத்தில், ஒரு நாளாவது ஊற்றுகளின் அருகில் இருப்பது, மனதுக்கு உற்சாகத்தையும் தரும்.

காலப்போக்கில், இது குடும்ப விழாவாக மாறியது. ஆண்கள், தங்கள் மனைவியுடனும், முறை மாமன்கள், தங்கள் முறைப் பெண்ணைப் பார்க்க வாய்ப்பாகவும், இது அமைந்தது. இதனால், குடும்ப ஒற்றுமை அதிகரித்தது. போதாக்குறைக்கு, இரவில் சாப்பிட, சித்ரான்னம் மற்றும் அவல். பிறகென்ன, கொண்டாட்டமும், கும்மாளமுமாக இந்த நாள் அமைந்தது. விழா என்றால் பக்தி இல்லாமலா!

ஊற்றுகள் முன், விநாயகர் சிலையை வைத்தனர். சிவனை அலங்கரித்து ஊற்றைச் சுற்றி வலம் வந்தனர். இதற்கு, திருவூறல் திருவிழா என, பெயர்.

தமிழகத்தில், திருவூறல் என்ற பெயரில் ஒரு ஊரே இருந்தது. அதன் தற்போதைய பெயர், தக்கோலம். அரக்கோணம் அருகில் உள்ளது. இங்குள்ள சிவனின் பெயரிலேயே தண்ணீர் இருக்கிறது. ஜலநாதீஸ்வரர் என, இவரை அழைப்பர். இவரது திருவடியில், நீர் சுரப்பது விசேஷம்.

ஒருசமயம், இவ்வூரில் வெள்ளம் வந்தபோது, பார்வதியே இறங்கி வந்து, சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டாளாம். இதனால், அர்ச்சகர்கள் லிங்கத்தைத் தொடாமல், அபிஷேகம் செய்வது, இன்றும் தொடர்கிறது.

மதுரையில், அழகர் திருவிழா, சித்ரா பவுர்ணமியன்று நடப்பதும், குளிர்ச்சியைப் பெறவே. அழகர் வேடமிட்ட பக்தர்கள், தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, உடல் குளிர்வதற்காகத்தான். இதையே அழகர், நமக்கெல்லாம் தீர்த்தம் அளிப்பதாக ஆன்மிக ரீதியாக முன்னோர் சொல்லியுள்ளனர்.

ஆன்மிகமும், அறிவியலும் பிரிக்க முடியாதவை. அதற்கென்று உருவானவை திருவிழாக்கள். சித்ரா பவுர்ணமியன்று, இந்த உண்மையை உணர்ந்து, நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், தண்ணீரை சேமித்து வைக்கவும் உறுதியெடுப்போம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us