தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வருமானம் அதிகரிக்க மாற்றி யோசியுங்கள்!

சமீபத்தில், என் உறவினர் பெண்மணியை பார்த்து வர, வெளியூர் சென்றிருந்தேன். அவரோடு கடைத்தெரு சென்று, அருகிலிருந்த பூங்காவுக்கு சென்றோம்.

பூங்கா முகப்பில், நடுத்தர வயதான ஒருவர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான, சிறியதும், பெரியதுமான மிதிவண்டிகளை வாடகைக்கு விட்டபடியும், வடை, சமோசா, சுண்டல் மற்றும் தேனீர் என, விற்பனையும் செய்து கொண்டிருந்தார்.

அவரிடமிருந்து வாடகைக்கு மிதிவண்டியை பெற்று, குழந்தைகள் முதல் பெரியவர் வரை, பூங்காவுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி அவரிடம் வினவினேன்.

'துவக்கத்தில், தேனீரும், தின்பண்டங்களும் மட்டுமே விற்று வந்தேன். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை என்பதால், மாற்றி யோசித்து, பூங்காவுக்கு வருபவர்கள், உடற்பயிற்சியாக ஓட்டுவதற்காக, வாடகை மிதிவண்டி கடையை ஆரம்பித்தேன்.

'இதில் கிடைக்கும் கூடுதல் வருமானம், குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவதிலிருந்து காப்பாற்றி, சிறிது சேமிக்கவும் உதவுகிறது...' என்றார்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கேற்ப, மாற்றி யோசித்து வருமானத்தை பெருக்கிய அவரை, பாராட்டி வந்தோம்!

- மு.நாவம்மா, விழுப்புரம்.

மொபைலை கண்டுபிடிக்கும் யுக்தி!

மொபைல் போன் தொலைந்து போனால், பதற்றம் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தபடி கண்டுபிடிக்கலாம். மிக முக்கியமான, அந்தரங்கமான விஷயங்கள், 'பைல்' செய்து வைத்திருக்கும் ஆவணங்கள், இவற்றை யாராவது திருடி, ஏதாவது செய்து விடுவரோ என்ற பயம் இனி வேண்டாம்.

'பைன்ட் மை டிவைஸ்' மூலம் எளிதாக இதை செய்ய முடியும். கம்ப்யூட்டரில், 'கூகுள் சர்ச்'சில், ஆன்ட்ராய்.காம் / பைன்ட் என, 'டைப்' செய்யுங்கள். பிறகு, உங்கள், 'கூகுள் அக்கவுண்'டை, 'லாக் இன்' செய்ய வேண்டும். உங்களின், 'இ - மெயில்' மற்றும் 'பாஸ்வேர்டு' கொடுத்த பிறகு, 'லாக் இன்' ஆகும்.

அப்போது, 'ஸ்கிரீனின்' இடதுபுறம், நாம் தவற விட்ட மொபைல் போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே, 'ப்ளே சவுண்ட், லாக், எரேஸ்' என்ற மூன்று தகவல்கள் இருக்கும். 'ஸ்கிரீனின்' வலதுபுறம், நாம் தவற விட்ட மொபைல் போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது, 'மேப்' மூலம் தெரிய வரும்.

'ப்ளே சவுண்டை க்ளிக்' செய்தால், மொபைல் போன் சில நிமிடங்களில் ஒலிக்கும். 'லாக்' என்பதை, 'க்ளிக்' செய்தால், மொபைல் போன், 'லாக்' ஆகிவிடும். 'எரேஸ்' என்பதை, 'க்ளிக்' செய்வதால், மொபைல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் அழிந்து விடும்.

இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அத்துடன், நம் மொபைலை சுலபமாக கைப்பற்றவும் முடியும்.

எ. ஹரிபிரசாத், சென்னை.

குழந்தைகள் ஜாக்கிரதை!

சமீபத்தில், முகநுாலில் ஒரு வீடியோ பார்த்தேன். எட்டு மாத குழந்தையை, குரங்கு ஒன்று கொஞ்சிக் கொண்டிருக்கிறது. குழந்தையின் அம்மா துாக்கச் செல்லும்போது, அவரை அருகே விட மறுத்து, குழந்தையை இறுக கட்டி அணைத்துக் கொள்கிறது, குரங்கு.

இப்போது, சமூக வலைதளங்களில், குழந்தைகளை, தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளான நாய், பூனை, குரங்கு மற்றும் மாடு போன்ற விலங்குகளுடன் இவ்வாறு விளையாட விட்டு, அதை வீடியோ எடுத்து, 'லைக்' வாங்குவது, 'பேஷன்' ஆகிவிட்டது.

இவர்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. மிருகங்களை பொறுத்தவரையில், அவற்றுக்கு குழந்தைகள் ஒரு பொம்மையாக தான் தெரியும். அதிலும் குரங்குகள், குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவை. அதனிடம், நம் குழந்தைகளை விட்டால், பிறகு அவற்றிடமிருந்து குழந்தையை நாம் வாங்கவே முடியாது.

இப்படிப்பட்ட குரங்குகள், ஆள் இல்லாத சில சமயங்களில் வீட்டுக்குள் நுழைந்து, தொட்டிலில் துாங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை துாக்கிச் செல்லவும் வாய்ப்பு உண்டு.

ஆயிரக்கணக்கான, 'லைக், கமென்ட்'டுகளுக்கு ஆசைப்பட்டு, தங்கள் குழந்தைகளின் உயிரோடு இவர்கள் விளையாடுகின்றனர். நீங்கள் என்னதான் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும், கடைசியில் அது மிருகம் என்பதை காட்டி விடும்.

அதனால், குழந்தைகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே அன்பிருந்தால், விலங்குகளிடமிருந்து அவர்களை பிரித்து வையுங்கள். குழந்தைகளின் உயிரோடு விளையாடாதீர்கள்!

- ஆ. மோகன், காரைக்குடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us