PUBLISHED ON : ஏப் 25, 2021

திங்கட் கிழமை விரதம்!
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் முக்கியமாக கருதியவர், பானுமதி ராமகிருஷ்ணா.
நடிப்பு, பாட்டு, இசை, பட வேலை, குடும்பக் கடமை போன்ற பல பரபரப்புகளிடையே, வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை தோறும், சோம வார விரதம், காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை அனுஷ்டிப்பார்.
அது, உண்ணாவிரதம் மட்டுமல்ல, மவுன விரதமும் தான். இந்நாளில், அவர் வாய் பேசாது, பேனா பேசும்.
ஒரு கத்தை காகிதமும், பேனாவும் கையில் வைத்து, அன்றைக்கு யார் பார்க்க வந்தாலும், என்ன கேட்டாலும் அதற்கான பதிலை, பேப்பரில் எழுதி காட்டுவார்.
கேட்பவர் எந்த மொழிக்காரரோ அவரது மொழியில், (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி) எழுதிக் காட்டுவார்.
பேசா விரதம் இருக்கும் அந்த நாளில், மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் முதல், மாங்காடு காமாட்சி கோவில் வரை சென்று வணங்கி, இறைவனுக்கு நன்றி செலுத்தி, வீடு திரும்புவார். அந்த நாளில், டாக்டர், வக்கீல், இயக்குனர் யாரை பார்த்தாலும், பேப்பரில் எழுதிக் காட்டிதான் பேசுவார்.
சாந்தமாய் பேசுபவரிடம், அமைதிப்புறா; தவறாக நடந்து கொள்ள நினைப்பவர்களுக்கு, சண்டி ராணி. எந்த தவறையும் கடந்து போய் விட மாட்டார்.
யாராக இருந்தாலும் நேருக்கு நேராக பேசுவார். கறாராக, கண்டிப்பாக, துணிச்சலோடு பதில் கொடுப்பார். பல் இளித்து நகர்ந்து விடும் பழக்கம், அவருக்கு கிடையாது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும் கொண்ட பாரதியின் புதுமைப்பெண்.
அன்றைய பம்பாயில் நடந்த படப்பிடிப்பின்போது, தான் மிக மோசமாக நடத்தப்பட்டதால், கோபத்தில் ஸ்டுடியோ முதலாளிகளின் சட்டையை பிடித்து விளாசித் தள்ளினார்.
'என்னடா, உன்னை மாதிரி நினைச்சியா... என் ஸ்டுடியோவில், 300 பேர் வேலை பார்க்கிறாங்க தெரியுமா... மரியாதை கெட்ட ஜென்மங்கள்... எல்லா நடிகையரிடம் பல்ல காட்டுற மாதிரி வாலாட்டினே, பல்லை பேத்துடுவேன்...' என்று துணிந்து, தட்டிக் கேட்டவர்.
விதவிதமான படங்களில், மாறுபட்டு நடித்தபோதும், அவர் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு மேலே, தனக்கே உரிய தனி பாணியில் ஓங்கி நின்றார்.
மதுரை வீரன் படத்தில், பொம்மி; ஸ்வர்க்கசீமா, சுஜாதா; அபூர்வ சகோதரர்கள், காஞ்சனா; சண்டிராணி, சண்டிராணி - சம்பாராணி; கள்வனின் காதலி, கல்யாணி; ரங்கோன் ராதா, ரங்கம்; மக்களைப் பெற்ற மகராசி, ரங்கம்மா...
நாடோடி மன்னன், மதனா; அறிவாளி, மனோரமா; லைலா மஜ்னு, லைலா; அம்பிகாபதி படத்தில், அமராவதி போன்ற கதாபாத்திரங்களின் உயிரோவியமாக இருந்தவர், பானுமதி.
'சிலருக்கு முகம் அப்படியே இருக்கும், அவர்களுடைய உடல் நடித்துக் கொண்டிருக்கும். சிலருக்கு, கைகள் மட்டும் ஆடிக் கொண்டிருக்கும், வாய் வசனம் பேசிக் கொண்டிருக்கும். சிலருக்கு, உதடுகளின் அசைவில், 'எக்ஸ்பிரேஷன்' இருக்கும், உணர்ச்சியோடு நடிக்க வேண்டிய விழிகள் உயிரற்று இருக்கும்.
'ஒரு சிலருக்கு மட்டும் தான், விழிகள் நடிக்கும். அந்த ஒரு சிலரில் உயிருள்ள விழிகளை உருள விட்டு, உதடுகளை அசைய விட்டு, கேமரா கோணத்திற்கும், தன் கற்பனைக்கும் தகுந்தபடி முகத்தை இங்கும் அங்கும் திருப்பி, மிக அலட்சியமாக நடிப்பவர், பானுமதி. அவர் கண்கள் முதல் கால் வரை நடிக்கும்.
'நடிப்பை, அவர் வரவழைப்பது கிடையாது. அது தானாக வந்து அவரிடம் ஒட்டிக்கொள்கிறது. நடிப்பு அவருக்கு கை வந்த கலை அல்ல, கண் வந்த கலை...' என்கிறார், பானுமதியின் அருகில் நின்று வசனங்களை சொல்லிய, அவருடைய நடிப்பை மிக அருகிலிருந்து பார்த்த, பானுமதியின் வசனகர்த்தா, ஆரூர்தாஸ்.
அதனால் தான், 'நடிப்பின் இலக்கணம்' என்று அந்த கலையரசியை பாராட்டினார், அண்ணாதுரை.
பானுமதியை தேர்தலில் நிற்கச் சொல்லி, ஜனாதிபதியே கடிதம் எழுதினார். யார் அவர்...
* அமெரிக்காவில் இருந்த மகனை பார்க்க சென்றிருந்தபோது, உடல் நலமின்றி தேறிய அவரது காதல் கணவர், அங்கேயே, 1986ல், 67வது வயதில் காலமாகி விட்டார்.
— தொடரும்
சபீதா ஜோசப்
