PUBLISHED ON : ஜூன் 10, 2018

காதல் வியாதி, எந்த வயதில் வேண்டுமானாலும் வந்து தொலைக்கும் போலிருக்கிறது. அமெரிக்காவின், டென்னிசி என்ற பகுதியில் வசிக்கும், அல்மெதா என்ற, 72 வயது பாட்டிக்கு வந்த காதல் தான், இப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த பாட்டியின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். இவருக்கு, பேரன், பேத்திகள் பலர் உள்ளனர். ஓர் ஆண்டுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில், கேரி காட்விக் என்ற, 18 வயது இளைஞரை சந்தித்தார், அல்மெதா.
படக்கென, பாட்டிக்குள், காதல் தீ பற்றி விட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின், அந்த இளைஞர் எங்கு சென்றாலும், விரட்டி விரட்டி, ரொமான்ஸ் செய்தார், பாட்டி.
வேறு வழியில்லாமல், ஒரு கட்டத்தில், இளைஞரும், பாட்டியை காதலிக்க துவங்கி விட்டார். இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. ஆனாலும், அதை சமாளித்து, சமீபத்தில் திருமணம் முடித்தனர். தற்போது, அந்த இளைஞருக்கு, 19 வயதாகிறது.
'இந்த வயதில், எப்படி உங்களுக்கு காதல் வந்தது...' என, பாட்டியிடம் கேட்டால், 'காதலுக்கு கண் மட்டுமல்ல; வயதும் இல்லைடா பேராண்டி...' என, கலாய்க்கிறார்.
— ஜோல்னாபையன்.
