PUBLISHED ON : செப் 16, 2018

சென்னை நுங்கம்பாக்கம் பிரதான சாலை.
அந்த நான்கு மாடி கட்டடம் பிரமாண்டமாய் நிமிர்ந்திருந்தது. தரைதள பிரதான வாயிலின் முகப்பில், தனியார், 'டிவி' சானல் ஒன்றின் பெயர் பலகை காணப்பட்டது.
'டிவி' அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. குளிர்பதன அறையில், தலைமை செய்தி ஆசிரியர் சிங்கராஜ் பச்சன் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே, 20க்கும் மேற்பட்ட, 'டிவி'களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.
இந்திய செய்தி நிறுவனங்களும், அயல்நாட்டு செய்தி நிறுவனங்களும் அனுப்பிய செய்தி வீடியோ கிளிப்பிங்குகள் மேஜையில் இருந்தன.
மடிக்கணினியை நோண்டிக் கொண்டிருந்தான் சிங்கராஜ் பச்சன்.
கதவை தட்டி, உதவி ஆசிரியர் அறைக்குள் பிரவேசித்தான். ''வணக்கம் சார்!''
''வணக்கம்... இன்றைய நிலா காயும் நேரத்துக்கு தலைப்பு தேர்ந்தெடுத்து விட்டீர்களா கிரிதரன்?''
''ஓ... புது ஆளுனரின் வருகை; தமிழக ஆளும் கட்சிக்கு நல்லதா, கெட்டதா?''
''பரவாயில்லை... வேற எதாவது தலைப்புகள் தயார் செய்திருக்கிறீர்களா?''
''மணிமண்டபங்களும், தமிழக அரசியலும்!''
''குட்... வேற வேற...''
''பிக் பிரதர்; தமிழக மக்களின், 'டிவி' பார்க்கும் ரசனையை மாற்றி விட்டதா?''
யோசித்து நிமிர்ந்தான் சிங்கராஜ் பச்சன், ''முதல் தலைப்பே இருக்கட்டும்!''
''எனக்கும் அதுதான் தோணிச்சு சார்!''
''நிலா காயும் நேரத்தில் கலந்துகொள்ளப்போகும் பிரமுகர்களின் பட்டியல் தயாரித்து விட்டீர்களா?''
''ஐம்பது பேர் கொண்ட பட்டியல் தருகிறேன்... அதிலிருந்து, நால்வரை தேர்ந்தெடுங்கள் சார்!'' பட்டியலை நீட்டினான்.
தேவபுத்திரன், கி.மு.க., - ஆர்.டி.கேசவன், மா.ஜ.க., - அய்யாவு, கி.மு.க., ஆவடி சுகுமார், அ.கி.மு.க., - அரசன்னா, கி.மு.க., - ஆப்ரிக்கா பாராயணன், காங்கிரஸ், கிவஹர் அலி, பஸ்லிம் லீக் கட்சி, கவிக்குமார், ஒ.சி.க., வழக்கறிஞர் பாலு, சா.ப.க., பவந்த் சி.காமன், அரசியல் விமர்சகர், சுகேந்திரன், திம்யூனிஸ்ட், பவ.பயராஜ், கி.மு.க., -கோவை வில்வராஜ், அ.கி.மு.க., - நாஞ்சில் கிம்பத், அ.கி.மு.க., - பணக்ரன் அணி... பட்டியல் தொடர்ந்தது.
''சார்... இந்த பட்டியலில் உள்ள எட்டு பேர், நம் விவாத மேடைக்கு வர மாட்டார்களாம். சில வார நிகழ்ச்சிகளில் அவர்களது கட்சிகளை வறுத்தெடுத்தோமாம்... நான்கைந்து பேரை போட்டால், நம், டி.ஆர்.பி., ரேட் படுத்து விடும்.
சிலர், கால் டாக்சி, ஐந்தாயிரம் பணம், புல் பாட்டில், பிரியாணி கேட்கின்றனர். தேவபுத்திரன் அலும்பு தாங்க முடியவில்லை. விவாத மேடையின் முழு ஸ்கிரிப்ட்டையும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தந்து விட வேண்டுமாம்.
கி.மு.க., அரசன்னா, விவாத மேடையின்போது அடிக்கடி அர்த்தமில்லாமல் இளிப்பது மக்களுக்கு பிடிக்கவில்லை. எப்படியோ வடிகட்டி மூன்று பிரபலங்களை தேர்ந்தெடுத்து விட்டேன். நாலாவது ஆள் தான் தேவை!''
''அந்த நாலாவது ஆள் யார் கிரிதரன்?''
''நம்மிடம் பல புதிய அரசியல் பிரமுகர்களின் விசிட்டிங் கார்டுகள் உள்ளன. தொடர்பு கொண்டு அதில் ஒருவரை தேர்ந்தெடுக்கவா?''
''செய்யுங்க... அடுத்த இரண்டு மணி நேரத்தில், நான்காவது பிரமுகரை நீங்க தேர்ந்தெடுக்க வேண்டும்... போங்க... சீக்கிரம் தேடுங்க!''
ஒரு கைபேசி எண்ணை தொடர்பு கொண்டான், கிரிதரன்.
''அடடா... அவசர வேலையாய் துாத்துக்குடி வந்திருக்கிறேன்... இரவு, 7:30க்குள் உங்க ஸ்டுடியோவுக்கு நான் வருவது கஷ்டம். இந்த முறை வேற ஆளை பாருங்க... அடுத்த தடவை ஜமாய்ச்சிடுறேன்,'' உதடு பிதுக்கினான், கிரிதரன்.
''என்னையா கூப்பிடுறீங்க... மொட்டை போட, குடும்பத்தோடு திருப்பதி போயிட்டு இருக்கேன்... வர முடியாது ராசா!''
''எங்க கட்சி மாநாட்டுக்கு, கூட்டம் சேர்க்க அலைஞ்சுகிட்டு இருக்கேன்... எனக்கு பதிலா சின்ன வீட்டை அனுப்பவா... தலையில கூடை பூ வச்சுகிட்டு, ஆளு சும்மா சிலுக்கு மாதிரி அளப்பறை குடுக்கும்!''
''உங்க விவாத மேடை நிகழ்ச்சிக்கு வர்றதை பத்தி எனக்கு ஆட்சேபனை இல்லை. மாசத்துக்கு, 10 ஷூட்டுக்கு கூப்பிடுவதாய் ஒப்பந்தம் போடுங்க... வரேன்!''
தலை சுற்றியது கிரிதரனுக்கு.
மெலமைன் கோப்பையில் காபியை நிறைத்து உறிஞ்சினான்.
அலுவலக உதவியாளர் மாரி, உதவிக்கரம் நீட்டினான்.
''என்ன பிரச்னை உங்களுக்கு... சொல்லுங்க, நான் தீர்த்து வைக்கிறேன்!''
''விவாத நிகழ்ச்சிக்கு, இன்றிரவு ஒரு பிரபலம் தேவை. ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால்?''
''வாடகைக்கு வீடு புடிச்சு தர்றது, நகை கடை திறக்க, துணை நடிகை ஏற்பாடு செய்வது, பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பது, தத்கல் டிக்கெட் எடுத்து தருவது, கல்யாணத்துக்கு சமையல் மாஸ்டர் ஏற்பாடு செய்வது, இப்படி நுாற்றுக்கணக்கான வேலைகளை செய்து கொண்டிருக்கும் அஷ்டாவதானி நான்... இன்றைய விவாத நிகழ்ச்சிக்கு, ஒரு பார்ட்டியை கப்புன்னு பிடிச்சு தரேன்!''
அலுவலக காரில் இருவரும் ஏறினர். சீறிப் பாய்ந்து, சென்னையின் அனைத்து சேரி பகுதிக்குள்ளும் கார் புகுந்து வெளியேறியது.
கடைசியில், மாரி சுட்டிக்காட்டிய நடைமேடையில் நின்றது. பீடியை வலித்தபடி, 45 வயது, நடுத்தர வயதினன் அமர்ந்திருந்தான்.
ஓடிப்போய் அவனை கட்டிக்கொண்டான் மாரி. ''காட்டுக் கருப்பா... சவுக்கியமா?''
''ஏதோ இருக்கேன்பா!''
''நான் ஒரு வேலை சொன்னா செய்வியா?''
''செஞ்சா என்ன தருவ?''
''ஆயிரம் ரூபா பணம், ஒரு ஹாப், 'எம்சி' பிராண்டி, முழு பிளேட் பிரியாணி!''
''என்ன செய்யணும்?''
''டாஸ்மாக் கடை முன், சரக்கு வாங்க முட்டிமோதி இருக்கியா... குழாயடி சண்டை போட்டிருக்கியா... அன்னதானம் போடும் பந்தியில், தள்ளுமுள்ளு பண்ணி சாப்பிட்டிருக்கியா.. சென்னை தியேட்டர்கள்ல, 10 ரூபாய் டிக்கெட் கவுன்டர்கள்ல அல்லாடி டிக்கெட் வாங்கியிருக்கியா... பொங்கல் நேரத்துல, ரேஷன்ல வழங்கும் இலவச வேட்டி சேலை வாங்க, கசங்கி இருக்கியா?''
''ஓ...''
''டிவில, நடப்பு அரசியலை பத்தி அஞ்சு பேர் கூடி பேசுவாங்க... அஞ்சு பேர்ல ஒருத்தர் நெறியாளர்... நிகழ்ச்சி, 60 நிமிஷம் நடக்கும், சில நேரம், 90 நிமிஷம் நடக்கும்.
''நாலு அரசியல் பிரமுகர்கள்ல ஒருத்தரா நீ கலந்துகிட்டு ரவுண்டு கட்டி அடிக்கணும்... யாரையும் கை நீட்டி அடிச்சிடக் கூடாது...
''சமுதாயத்துல தடை செய்யப்பட்ட கெட்ட வார்த்தைகளை பேசக் கூடாது... அடுக்கு மொழியில பேசி, துாள் பண்ணிடணும்!''
''அரசியல் பிரமுகர் இல்லையே நான்.''
''உன்னை, நாங்கள் அரசியல் விமர்சகர் என்று அறிமுகப்படுத்துவோம். நீ பேசும்போது, பொது, நீட், திராவிடம், ஆரியம், இந்துத்வா, இறையாண்மை, ஜாதியம், தேசியம், தலித் அரசியல், கருத்தாயுதம், இடஒதுக்கீட்டு கொள்கை, மார்க்சியம் மற்றும் அம்பேத்கர் போன்ற அறிவுஜீவி வார்த்தைகளை அள்ளித் தெளிக்கணும். மீதி மூணு பேர் என்ன பேசுறாங்களோ, அதுக்கு ராங்கா ஜல்லி அடிக்கணும். உனக்கு தெரிந்த அறிவாளிகள், மூஞ்சியை எப்படி வச்சிருப்பாங்களோ, அப்படி வச்சுக்க... எதிராளியை முழுசும் பேச விடாதே... நெறியாளர் உன்னை கண்டிக்கிற மாதிரி கண்டிப்பார்... கண்டுக்காதே. அது, சும்மா உலவாக்காட்டி!''
''சரி!''
''உன்னை குளிக்க வைத்து, கதர் வேட்டி, சட்டை உடுத்தி, 'ஹேர் ஜெல்' போட்டு, தலை கேசத்தை துாக்கி வாரி, நெற்றியில் விபூதி பூசி, தோளில் துண்டு போட்டு தயார் பண்ணிடறோம்...
''நீ எங்கெங்க குறுக்கிடணும், தோராயமா என்னென்ன பேசணும் இப்படி சகலத்துக்கும் பயிற்சி குடுப்போம்...
''இந்த தடவை, நீ விவாத நிகழ்ச்சியில கலந்து, 'சக்ஸஸ்' பண்ணிட்டா, உன்னை தொடர்ந்து கூப்பிடுவோம்!''
நிலா காயும் நேரத்தை, ஒரு கலக்கு கலக்கி விட்டார் காட்டுக்கருப்பன். அன்றைய, டி.ஆர்.பி., ரேட், 248 சதவீதம் கூடியது.
தொடர்ந்து, எல்லா தமிழ் செய்தி அலைவரிசைகளும், காட்டுக்கருப்பனை அழைத்து, தங்கள் விவாத நிகழ்ச்சியில் பேச வைத்தன. பிளாட்டினத்தை விட, விலை உயர்ந்த பொருளாகி போனான் காட்டுக்கருப்பன்.
மாதத்தில், 25 நாள், காட்டுக்கருப்பன் பிசி!
ஒரு மாதத்திற்கு பின், ''மிஸ்டர் காட்டுக்கருப்பன்... இன்றைய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வர்றீங்களா... கார் அனுப்பட்டுமா?'' -கிரிதரன்.
''சாரி... அடுத்த ஒரு வருஷத்துக்கு நான், 'புக்' ஆயிட்டேன்... 2019 கடைசியில பார்ப்போம்!''
தலையில் கை வைத்து அமர்ந்த கிரிதரனிடம் வந்தான், மாரி.
''என்ன... காட்டுக்கருப்பனுக்கு கொம்பு முளைச்சிருச்சா... 'டோன்ட் ஒர்ரி' இன்னொரு பாரைப்பட்டியானை ரெடி பண்ணி தரேன்... யாமிருக்க பயமேன்!'' அருள் பாவிப்பது போல் கைகுவித்து உயர்த்தினான், மாரி.
''தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளில், இதெல்லாம் சகஜமப்பா!'' என்றான் கிரிதரன், கவுண்டமணி ஸ்டைலில்.
ஆர்னிகாநாசர்
