sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 30, 2015

Google News

PUBLISHED ON : ஆக 30, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —

என் வயது 23 பெண்; திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் அக்காவின் வயது, 24; மிக அழகாகவும், வெகுளியாகவும் இருப்பாள். அவளுக்கு, 17 வயதில், சொந்த அத்தை மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். அவர்கள் இருவருக்கும், 10 வயது வித்தியாசம். அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது; என் அம்மா மற்றும் பெரியவர்கள் வற்புறுத்தலால் தான் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பின், மூன்று மாதங்கள் வாழாமல் இருந்தாள். பெரியவர்கள் பலர் எடுத்துக் கூறிய பின் தான், வாழ்க்கையை ஆரம்பித்தாள்.

ஒரு ஆண்டு கழித்து, ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசத்தால், புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் கல்யாணம் ஆனதில் இருந்தே சிறு சிறு பிரச்னைகள் இருந்து வந்தது. அது, கடந்த, இரு ஆண்டுகளாக அதிகமாகி, தற்போது, கோபித்துக் கொண்டு என் அம்மா வீட்டிற்கு வந்து விட்டாள்.

இரு வீட்டு பெரியவர்களால் தான் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. இருவரும் அவரவர் அப்பா, அம்மா, தங்கை ஆகியோரை முன்னிட்டே சண்டையிடுகின்றனர். இப்போது, அவளது மாமியார் மற்றும் கணவன், குழந்தையை வைத்துக் கொண்டு, இவளை விரட்டி விட்டுள்ளனர்.

பின், போலீஸ் ஸ்டேஷன் சென்று குழந்தையை வாங்கி வந்தாள். அவர்கள் வீட்டினருடன் சமாதானம் பேசலாம் என்றால், எங்கள் அம்மா, அப்பா வர வேண்டாம் எனச் சொல்கின்றனர். ஆனால், இதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறாள் அக்கா.

என் அக்கா மிகவும் பாவம்; அவளுக்கும் மனதில் பல்வேறு ஆசைகள் உண்டு. ஆனால், அக்கா கணவர் அதை புரிந்து கொள்ளாமல், அவளை புண்படுத்துகிறார். அவளது சிறு ஆசைகளைக் கூட நிறைவேற்றுவது இல்லை. அவள் இதையெல்லாம் என்னிடம் சொல்லி அழுகிறாள். என் அக்கா மகனும், தந்தை பாசம் இல்லாமல் வளர்கிறான். இரு வீட்டு பெரியவர்களின் சண்டையால், இவர்களது வாழ்க்கை வீணாகிறது.

நான், என் கணவருடன், என் அம்மா வீட்டிற்கு செல்லும் சமயங்களில், அங்கு, அக்கா தனியாக இருப்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அவள் மனதில் வேதனைகளை வைத்துக் கொண்டு, வெளியில் இயல்பாக இருப்பது போல் நடிக்கிறாள்; விரக்தியாக பேசுகிறாள்.

அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தவள்; கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவள். இப்போது அவள் கண்ணில் எப்போதும் கண்ணீர்; வேதனை.

என் அக்காவின் வாழ்க்கை இப்படி இருப்பதால், என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. அவள் வாழ்க்கையை சீரமைக்க ஏதாவது வழி காட்டுங்கள் அம்மா. அவள் கண்ணில் பழையபடி சந்தோஷத்தை பார்க்க வேண்டும். உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள்.


அன்புள்ள மகளுக்கு —

சுயநலமான உலகில், அக்காவின் திருமண வாழ்க்கை பாழாவதைக் கண்டு, பதை பதைக்கும் உன் கடிதத்தை படிக்கும் போது மனம் நெகிழ்கிறது.

பொதுவாக, திருமணங்களில் இரு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒன்று: நெருங்கிய உறவு முறையில் திருமணம் கூடாது; அதனால், உடல் அங்கஹீனமுள்ள மற்றும் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் பிறப்பதை தவிர்க்கலாம். உறவு வட்டத்திற்குள் சிக்காத ஆண், பெண் திருமணம் செய்து கொண்டால், ஆரோக்கியமான, 'ஐக்யூ' திறன் கொண்ட குழந்தைகள் பிறக்கும். தவிர, உறவுக்குள் செய்யப்படும் திருமணங்களின் வெற்றி, இரு தரப்பு பெரியவர்களின் கோபதாபங்களை பொறுத்தே அமைகிறது. பழைய பகைகளை திருமணங்களில் பொருத்தி, ஆண் - பெண்ணை பலிகடா ஆக்கி விடுகின்றனர் இரு தரப்பு பெரியவர்கள்.

இரண்டு: கணவன் - மனைவி வயது வித்தியாசம்; இருவருக்கும், அதிகபட்சம் மூன்று வயதும், குறைந்தபட்சம் ஒரு வயதும் இருக்கலாம். அதிக வயது வித்தியாசத்தில் செய்யப்படும் திருமணங்களில், ஆண் சீக்கிரம் வயோதிகம் அடைகிறான். பெண்ணோ இளமையாக இருக்கிறாள். இதனால், பெரும்பாலான ஆண்களுக்கு சந்தேகப் பேய் பிடித்துக் கொள்கிறது. சில பெண்களோ, இளமை தீரா வேகத்தில், கள்ளத் தொடர்பில் ஈடுபடுகின்றனர்.

சரி விஷயத்துக்கு வருவோம்... உன் கணவனிடம் சொல்லி, அவள் கணவனிடம் பேசச் சொல். அறிவுரைகளை கசப்பாக சொல்லாமல், ஏற்றுக் கொள்ளும் வண்ணம், பக்குவமாய், பதவிசாய் கூறட்டும்.

இருதரப்பு பெரியவர்களையும் அழைத்துப் பேசி, பிரச்னைக்கு தீர்வு காண வை.

அக்காவிடம் மனம் விட்டு பேசி, அவளிடம் ஏதாவது குற்றம் குறைகள் இருந்தால், அவற்றை தவிர்க்கச் சொல். சிறு சிறு மனஸ்தாபங்களுக்கு எல்லாம் உன் அக்கா, கணவனிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வருவது நல்லதல்ல. சிறு பிரச்னைகளை பெரிதுபடுத்தாமல் வாழ்வதும் ஒரு கலை தான். பல பெண்கள் அக்கலையை கற்று, வாழ்வில் சிறந்திருக்கின்றனர்.

இரு தரப்பு பெரியவர்களை விட்டு விலகி, உன் அக்காவும், அவள் கணவனும் குடும்பம் நடத்துவது சாலச்சிறந்தது.

உன் அக்காவையும், அவள் கணவனையும் கவுன்சிலிங் சென்டருக்கு அனுப்பி, ஆலோசனை பெற சொல்.

உன் அக்கா கணவர் என்ன படித்திருக்கிறார், என்ன வேலை பார்க்கிறார், எவ்வளவு சம்பாதிக்கிறார், அவருக்கு குடிப்பழக்கம் மற்றும் திருமண பந்தம் மீறிய உறவு உண்டா போன்ற தகவல்களை நீ தெரிவிக்கவில்லை. உன் அக்கா கணவனிடம், 50 சதவீத தவறு இருந்தால், உன் அக்கா மீது, 50 சதவீத தவறு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. புகுந்த வீட்டு பிரச்னைகளை சமயோசிதமாய் கையாள உன் அக்காவுக்கு போதிய அறிவுத் திறனும், சமயோசிதமும் இல்லை. உன் அக்காவின் சுயபச்சாதாபம் தேவையில்லாதது. பிரச்னைக்காக புலம்புவது, ஒப்பாரி வைப்பது தீர்வல்ல.

மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்து, இரு தரப்பினரையும் வரவழைத்து, பஞ்சாயத்து செய்து, ஒரு நல்ல முடிவுக்கு வரச் சொல்.

எது எப்படி இருந்தாலும், உன் அக்கா தன் கணவனுடன் சேர்ந்து வாழ்வதே உத்தமம். அதற்கான அத்தனை முயற்சிகளிலும், அயராது ஈடுபடு; முயற்சி திருவினையாக்கும்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us