
முன்னணி கதாநாயகர்களுக்கு கல்லெறியும் மஞ்சிமா மோகன்!
மலையாளத்தில் இருந்து, தமிழுக்கு வந்துள்ள மஞ்சிமா மோகன், கவுதம்மேனன் இயக்கத்தில், அச்சம் என்பது மடமையடா படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில், அவரது நடிப்பு பேசப்பட்டு வருவதை அடுத்து, புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய, சிலர் படையெடுத்தனர். அதையடுத்து, பல கதைகளை கேட்ட மஞ்சிமா, இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் கதையை ஓ.கே., செய்துள்ளார். தொடர்ந்து, தமிழில் நிரந்தர இடத்தை பிடிக்க, முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கவும், கல்லெறிந்து வருகிறார். எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும்!
— எலீசா
விஜய்யை முந்தும், நான் ஈ சுதீப்!
நான் ஈ படத்தில், வில்லனாக நடித்தவர், கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப். இவர், தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள, முடிஞ்சா இவனைப் புடி என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகியுள்ள அப்படத்தின் இறுதிகட்ட பணிகள், தற்போது நடந்து வருகின்றன. மேலும், தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்., ௧௪ அன்று, விஜய் நடித்த, தெறி படம், திரைக்கு வரும் நிலையில், அதற்கு ஒருவாரம் முன்பாக, ஏப்., ௮ம் தேதி, சுதீப்பின், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்,
கே.எஸ்.ரவிக்குமார்.
—சினிமா பொன்னையா
புதிய படங்களில் அனிருத்!
சிம்பு எழுதி, பாடிய ஆபாச, 'பீப்' பாடலுக்கு இசையமைத்ததாக சர்ச்சையில் சிக்கியவர் அனிருத். அதன் காரணமாக சில, முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்து நீக்கப்பட்டதால், பலத்த அதிர்ச்சியடைந்தார். அதனால், 'தமிழில் பிடித்த இடத்தை விட்டு விடக்கூடாது...' என்று திரைக்குப் பின் தீவிரம் காட்டி, அஜித் நடிக்கும் புதிய பட வாய்ப்பை கைப்பற்றியிருப்பதோடு, எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கயிருக்கும், குஷி - 2 படத்திலும், தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
— சி.பொ.,
ஹாலிவுட் படங்களில் தனுஷ் மற்றும் நாசர்!
தமிழ் மட்டுமின்றி, இந்தி சினிமாவிலும், காலூன்றி புகழடைந்த தனுஷ், தற்போது, ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க, தயாராகிறார். அவரைத் தொடர்ந்து, ஏற்கனவே, பேர் கேம் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள நாசரும், தற்போது, அல்ஜீரியா இயக்குனர் பங்கஜ் சேகல் இயக்கும், சோலார் எக்ளிப்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பாய்ஸ் பட நடிகரின் மார்க்கெட் தள்ளாட்டத்தில் இருப்பதால், தனக்கு பின் வந்த நடிகர் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பதையும், தன் நிலையையும் நினைத்து வேதனை அடைந்துள்ளார். அத்துடன், சில நடிகர்களின் பட அறிவிப்புகள் வெளியாகும் போது, டுவிட்டரில் அதை மறைமுகமாக தாக்கி, கமென்ட்ஸ் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மலையாள ரீ - மேக் படத்தில் நடிக்கும் ஹாசன் நடிகையை, இணையதளங்களில் கலாய்ப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், முதலில் பொறுமையாக இருந்த நடிகை, தற்போது, ஒரு, 'டுவிட்' போட்டு, 'படம் வெளியான பின், என் நடிப்பைப் பார்த்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்; இப்போது கலாய்ப்பதை நிறுத்துங்கள்...' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தளபதி நடிகரின் மூன்றெமுத்து படத்தின் கதையை, ஏற்கனவே ஒருவர் தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு துவங்கியிருந்தார். இந்நிலையில், தற்போது, அக்கதையில், தெலுங்கு முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகர், நடிக்கிறார். ஆனால், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரும், அக்கதை தன்னுடையது என்று, இப்போது வழக்கு போட்டுள்ளார். தன், 150 படத்துக்கு, ஏதாவது ஒரு வகையில், தடை வந்து கொண்டிருப்பதால், செம கடுப்பில் இருக்கிறார் நடிகர்.
சினி துளிகள்!
* அரசியல் பணியில் இருந்து சற்று விலகியுள்ள சிரஞ்சீவி, மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளில் தலைகாட்டுகிறார்.
* மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவரான நடிகர் சித்தார்த், இயக்குனராவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
* வடசென்னை படத்தை அடுத்து, தன் அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.
* விஜயசேதுபதியுடன் நயன்தாரா நடித்ததை தொடர்ந்து, சிவகார்த்திகேயேன் போன்ற இளவட்ட கதாநாயகர்களுடன் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் த்ரிஷா.
* கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த ரெஜினா, கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
* தர்மதுரை படத்தில், தான் நடித்து வரும் வேடத்துக்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், தனக்கு தானே தமிழில், 'டப்பிங்' பேசுகிறார் தமன்னா.
* மாதவன் நடித்த, இறுதிச் சுற்று படத்தின் தெலுங்கு ரீ - மேக்கில், வெங்கடேஷ் நடிக்கிறார்.
* எஸ் - 3 படத்தில், ஸ்ருதிஹாசன் ரகசிய போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
* 'டிரம்ஸ் சிவமணி ஒரு இசைச்சுரங்கம்...' என்று கருத்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அவ்ளோதான்!

