PUBLISHED ON : பிப் 28, 2016

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
சிவாஜியை வைத்து தேவர் எப்போது படம் எடுப்பார் என்ற கேள்வி வரும்போதெல்லாம், 'முதலில், எம்.ஜி.ஆரை வைத்து, 25 படங்களை எடுப்போம்; பின், கணேசனிடம் செல்வோம்...' என்று தன் கதை ஆசிரியர்களிடம் கூறுவார், தேவர்.
அந்த ஆண்டு, மீண்டும் தேவரின் இல்லத்துக்கு வந்தார் சிவாஜி கணேசன். இப்போது வந்ததும், சுபகாரியமாகவே! தேவருக்கு, 60 வயது பூர்த்தியாகி இருந்தது. அதனால், அவருக்கு விழா எடுக்க விரும்பினர்; ஆனால், அவரோ மறுத்து விட்டார். அவரது குல அன்பர்கள், கணேசனை தூது அனுப்பினர்.
'தேவரே... நம்ம ஆளுகள்ள, உங்கள தவிர, வேறே யாருக்கு இந்த மாதிரி விழா நடத்த முடியும்... ஜூன், 29ம் தேதி குடும்பத்தோடு வந்து கலந்துக்குறீங்க...' என்றார் சிவாஜி.
எதிர்பாராமல் கணேசன் வந்ததும், 60வது வயது நிறைவை, தானே முன் நின்று நடத்துவதாக கூறியதும், அதிசயமாகவே இருந்தது தேவருக்கு!
'பசும்பொன் பைன் ஆர்ட்ஸ்' சார்பில் ஜூன், 29, 1975ல் தேவரின் மணி விழா கோலாகலமாக நடைபெற்றது.
மாலையில், சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு, மதுரை சோமசுந்தரம் கச்சேரி, வாரியார் சொற்பொழிவு மற்றும் குன்னக்குடி வயலின் இசையும், காலையில், யோகி சுத்தானந்த பாரதியார் தலைமையில், கவியரங்கமும் நடந்தது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, பூவை செங்குட்டுவன் மற்றும் முத்துலிங்கம் போன்றோர் தேவருக்கு மரியாதை செய்தனர். ஏவி.எம்., ஏ.எல்.சீனிவாசன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன் மற்றும் அசோகன் ஆகியோர் தேவரை வாழ்த்தி பேசினர்.
தேவர் பிலிம்சில், 'சிவாஜி நடிப்பது எப்போது?' என்கிற கேள்வியை, தன் வாழ்நாள் முழுவதும் காதில் வாங்கினார் தேவர். அவரது கடைசி நேர்காணலிலும், இதே கேள்வியைக் கேட்ட போது, 'சிவாஜி கணேசனை வைத்து, படமெடுக்க மாட்டேன் என்று ஒரு போதும் நான் கூறியதில்லை; அதே மாதிரி அவரும், என் படங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்ததில்லை. அவர், பெரிய நடிகர்; பல ஆண்டுகளுக்கு பின், அவர் என்னுடைய படத்தில் நடித்தால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுவது இயற்கை. அவருக்கேற்ற, 'சப்ஜெக்டை' தேர்ந்தெடுத்தவுடன், சிவாஜி கணேசனை நடிக்க வைத்து, ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, படத்தை நிச்சயம் தயாரிப்பேன்...' என்றார்.
சின்ன அண்ணாமலை தயாரித்த, தர்மராஜா படத்தை இயக்கியவர், தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். அப்படத்தில், கணேசனுக்கு, காரத்தே வீரர் வேடம். அவர் இயக்கிய, ஒரே சிவாஜி சினிமாவாக, அது இருந்தது. அதிசய பிறவிகள் மற்றும் தேவர் பிலிம்சின் கடைசி தயாரிப்பான, தர்மத்தின் தலைவன் போன்ற இரு படங்களில் நடித்தார் பிரபு.
தேவருக்கும், கணேசனுக்கும் கிடைக்காத வாய்ப்பு, அவர்களது வாரிசுகளுக்கு கிடைத்தது.
கடிகாரம் நேரமாவதை உணர்த்த, மடியை தடவிப் பார்த்தார் தேவர். எம்.ஜி.ஆரை பார்க்க போக வேண்டும்; அண்மைக்காலமாக அவரை வெறுங்கையோடு பார்த்ததில்லை. எம்.ஜி.ஆருக்கும் நிறையவே செலவானது. எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிடும் சமுத்திரம், அரசியல்! இதில், எதிர்ப்பு அணி என்றால் கேட்கவே வேண்டாம். அ.தி.மு.க., ஆரம்பமான காலம் அது! தனிப்பட்ட முறையில், தேவருக்கு மிகப் பெரிய நஷ்டம். முன் மாதிரி எம்.ஜி.ஆரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. மேடை பாதி, மேக் - அப் மீதி என்று வாழ்ந்து வந்தார் எம்.ஜிஆர்.,
இதயக்கனி படம், அவருக்கு புதிய புகழை அணிவித்தது. திரும்பிய பக்கமெல்லாம், 'நீங்க நல்லா இருக்கணும், நாடு முன்னேற...' என்ற பாடல் ஒலித்தது. ஆனாலும், நிதி பற்றாக்குறை! தேவரிடம் கேட்காமல் யாரிடம் போய் கேட்பார்...
ஆளும் கட்சியால் அச்சுறுத்தப்பட்டார் தேவர்.
எம்.ஜி.ஆர்., தேவர் பிலிம்சில், அடுத்து நடிக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். அன்று, எம்.ஜி.ஆரை வைத்து படமெடுத்தவர்கள், அவருக்கு மிக வேண்டியவர்களோ அல்லது ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன் போன்றவர்கள் தாம்!
மு.க.முத்துவை, எம்.ஜி.ஆருக்கு பதிலாக நடிக்க வைக்க சிபாரிசு செய்தது மேலிடம்; தேவர் சம்மதிக்கவில்லை என்று கூட தகவல் உண்டு.
வழக்கம் போல் மனைவி மாரி முத்தம்மாளை அழைத்தார் தேவர். அவர் வந்து நின்றதும், வழக்கமான கேள்வியான, 'என்ன வேணும்... ஏதாவது சொல்லணுமா...' என்று கேட்டார்.
மனைவி தயங்கவும், ஆச்சரியமாக பார்த்தார் தேவர். எப்போதுமே இந்த கேள்விக்கு, 'ஒண்ணுமில்லங்க... போயிட்டு வாங்க...' என்ற பதிலே வரும். இன்று என்ன வந்தது... மனைவி மவுனமாக நிற்பதைப் பார்த்து, 'வாயை திறந்து சொல்லும்மா...' என்றார் தேவர்.
'ஒண்ணு கேக்குறேங்கோ... தப்பா நினைக் காதீங்கோ... எப்பவுமே பணத்தை மடியில கட்டிக்கிட்டு வெளியில போறிங்கோ; முருகன் பேரை சொல்லி யார் வந்தாலும், கோவிலுக்குன்னு வாரி வழங்கறீங்கோ... சினிமா நடிகர்களோட கல்யாணம், வீடு கட்டன்னு தாராளமா கொடுக்கறீங்கோ. ஆனா, நம்ம குடும்பத்துக்குன்னு என்ன சேர்த்து வெச்சுருக்கிங்கோ...' என்றார் மாரிமுத்தம்மாள்.
நிலைகுலைந்து போனார் தேவர். ஏறக்குறைய, 40 ஆண்டு கால தாம்பத்ய வாழ்க்கையில், தான் வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கையை, ஒரு நிமிடத்தில் கணவர் முன் போட்டு உடைத்து விட்டார், மாரி முத்தம்மாள்.
அதிர்ந்து பேசாத மனைவி, இன்று கேட்ட கேள்விக்கு அவரிடம் விடை இல்லை. அவர்களுக்கு, அப்போது, திருமண வயதில் மகள் இருந்தாள். கண்ணதாசன் வீட்டு கல்யாணங்களுக்கு, தேவர் கொடுத்து சிவந்தது, கலை உலகம் அறிந்த செய்தி.
மனைவியின் கேள்வியால் நொந்து நூலாகி கதைக் காரர்கள் முன் வந்து உட்கார்ந்தார் தேவர். அவர்கள், 'என்ன ஆனது இவருக்கு...' என ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
'இவனே பாலு... குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வா...' என்றவர் முகத்தில் அதிர்ச்சி விலகவில்லை.
'அண்ணே... என்னண்ணே?' மெதுவாக கேட்டார் மூத்தவர் மாரா; வீட்டில் நடந்ததை கூறிய தேவர், 'உண்மையிலேயே பேங்க்ல பொண்டாட்டி, புள்ளைங்க பேருல பணம் இல்லடா....' என்றவருக்கு நா தழுதழுத்தது!
யாருக்குமே அடுத்துப் பேச வார்த்தைகள் வரவில்லை. 'இது, கணவன்-மனைவி அந்தரங்கம்; இதில் எப்படி தலையிட முடியும்... நாமும் எத்தனையோ காலமாக சீன்களை யோசிக்கிறோம்; இப்படியொரு ஆன்ட்டி க்ளைமாக்ஸை சிந்தித்ததே கிடையாதே...' என தங்களுக்குள், கிசுகிசுத்துக் கொண்டனர்.
'எல்லா வினியோகஸ்தர்களையும் வர சொல்லுங்கடா... நான் ஒரு படம் எடுக்க போறேன்; அதுல கிடைக்குற லாபத்துல என் புள்ளகுட்டிக்கு,'ட்ரஸ்ட்' ஆரம்பிக்கணும்...' என்றார் தேவர்.
அத்தனை டிஸ்டிரிபியூட்டர்களும், தேவரின் முன் ஆஜர். தன் எதிர்பார்ப்பை கூறிய தேவர், 'வழக்கமா கொடுக்கிறதைவிட, நீங்களே கொஞ்சம் அதிகம் போட்டுத் தாங்க...' என்றார்.
ஒரே நாளில், 10 லட்சம் ரூபாய் குவிந்தது.
அதை அப்படியே மனைவியிடம் கொடுத்தார். ஆனால், வழக்கத்தை விட கூடுதலாக பணம் கேட்டதில் மனதில் குற்ற உணர்வு உறுத்த, 'ஏரியா மேலே கூடப் பணம் கேட்டேனே... அது தப்பு இல்லையா இவனே...' என வேதனைப்பட்டார்.
'அவங்கள நான் என்னிக்கும் ஏமாத்த கூடாதுடா. வெள்ளிக்கிழமை விரதம் இந்தியில எடுத்தோம்; ஓடல. வட நாட்டுக்காரனை கூப்பிட்டு, பணத்தை செட்டில் செஞ்சோமா இல்லயா... நம்ம ஆளுங்க என்னால நஷ்டப்படக்கூடாது...' என்றார் தேவர்.
'அதற்கு நாங்க என்ன செய்யணும்...' என்பது போல் பார்த்தனர் கதை இலாகாவினர்.
'நீங்க நல்லா கதை பண்ணுங்கடா. ஒரே ஒரு சம்பவம் பிரமாதமா இருந்தாலும், 5,000 ரூபா தரேன். உங்களுக்குள்ள போட்டி போட்டு சீன் எழுதுங்க. படம் ஓடணும்; லாபம் கிடைக்கணும்...' என்றார் தேவர்.
ஆர்வக்கோளாறால், ஆளுக்கு ஆள் முந்தி கதை தயார் செய்தனர்; திரைக்கதை அமைத்தனர். முருகன் அடிமை என்ற தலைப்பு, தேவரை கவர்ந்து விட்டது.
'போதும்டா... நான் இப்பவே கே.ஆர்.விஜயா வீட்டுக்கு போய் கதை சொல்றேன். கதாநாயகன் முத்துராமன்; ஓ.கே.,வா?' என்றார் தேவர்.
அத்தனை சுலபத்தில் சம்மதிக்கவில்லை
கே.ஆர்.விஜயா. 'எனக்கு நீங்க சம்பளம் மட்டும் தந்தா போதாது...' என்றார்.
'வேறே என்ன வேணும்... நீ புதுசா வாங்க இன்னும் எது பாக்கி இருக்கும்மா... சார்ட்டர் ப்ளைட், ரேஸ் குதிரை, ஸ்விம்மிங் பூல், அருமையான புருஷன், ஆசைக்கு ஒரே பொண்ணுன்ணு உன்னை மாதிரி வாழறது யாரு...' என்றார் தேவர்.
'உங்க வீட்டு காம்பவுண்டுல செண்பக மரம் பூத்துக் குலுங்குச்சு; எனக்கு தினமும், செண்பகப் பூ பறிச்சிக் கொண்டு வந்தா, நான் நடிப்பேன்...' என்றார் கே.ஆர்.விஜயா.
நாள்தோறும் விஜயாவுக்காக செண்பகப் பூ எடுத்துச் சென்றார் தேவர்.
படம் வெளியானது; ரசிகர்கள் வரவில்லை. பக்தி படமாகவும் இல்லாமல், சமூக படமாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டானாக இருந்தது. போன வேகத்திலேயே, பெட்டி திரும்பியது.
முருகன் அடிமை பட தோல்வியை, தேவரால், தாங்கவே முடியவில்லை. வினியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டனர். வடபழனி ஆண்டவர், அவர் வாயில் சிக்கி கொண்டார்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்

