
மார்ச், 4 காரியார் குருபூஜை
'திரை கடலோடி திரவியம் தேடு' என்ற பழமொழிக்கு ஏற்ப, நிறைய படித்து, வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதித்து, பெரிய வீடு, ஆள், அம்பு, சேனை என வசதியாக வாழ்கிறோம். நாம், நம் குடும்பம் என்ற சுயநலத்திலேயே வாழ்வு, சுருங்கி விடுகிறது. 'நம் வாழ்வுக்கு பின், பெயர் சொல்ல என்ன செய்திருக்கிறோம்...' என நினைத்துப் பார்த்து, நாம் நம், பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்தாலே போதும்; உலகம் நம்மை பாராட்டும்.
அபிராமி பட்டரிடம், 'இன்று என்ன திதி?' என்று கேட்டார், சரபோஜி மன்னர். அம்பாளின் நினைவில் இருந்த பட்டர், தவறுதலாக, 'பவுர்ணமி' என்று பதிலளித்தார். ஆனால், அன்று அமாவாசை!
இதைக் கேட்டதும், கோபமுற்ற மன்னர், 'இது கூட தெரியாமல் அம்பாளுக்கு பூஜை செய்ய உமக்கு என்ன தகுதியிருக்கிறது...' என்று கண்டித்து, 'இன்று இரவு, நிலவு வராவிட்டால், உமக்கு தண்டனை உண்டு...' என சொல்லி விட்டார்.
மனம் கலங்கிய பட்டர், 'தாயே அபிராமி... நீயே கதி...' என சரணடைந்தார்.
தன்மீது நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்த தன் பக்தனுக்காக, அன்று இரவு, தன் காதில் அணிந்திருந்த தாடங்கம் எனும் காதணியை வானில் எறிந்து, நிலவொளியை உண்டாக்கினாள் அம்பிகை.
இதே போன்ற ஓர் அற்புதத்தை இத்தலத்தில் நிகழ்த்திக் காட்டினார் சிவபெருமான். மார்க்கண்டேயர் என்ற பக்தருக்கு, 16 வயது வரை தான் ஆயுள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், அச்சிறுவன், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரரை சரணடைந்தான். அவனது உயிரை பறிக்க வந்த எமனை, எட்டி உதைத்து, மார்க்கண்டேயரைக் காப்பாற்றி, என்றும், 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருக்க அருள்பாலித்தார் அமிர்தகடேஸ்வரர்.
இப்படி அம்பாளும், சிவனும் அருள் புரிந்த இவ்வூரில் பிறந்தவர் தான், காரி நாயனார்; பாடல்கள் புனைவதில் வல்லவரான இவர், தன் பெயரால், 'காரிக்கோவை' எனும் நூலை எழுதி, சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் வாசித்துக் காட்டினார். அதிலுள்ள கருத்துகளை கண்டு மகிழ்ந்து, அவருக்கு பொன்னும், பொருளும் பரிசளித்தனர்.
அதை, தன் ஊருக்கு கொண்டு வந்த காரியார், அவற்றை சிவன் கோவில்களின் திருப்பணிக்கும், சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யவும் பயன்படுத்தினார். மேலும், புதிய சிவாலயங்கள் கட்டி, கும்பாபிஷேகம் செய்தார்.
அத்துடன், பல நூல்களை எழுதி, மன்னர்களுக்கு அதை எளிய முறையில் புரியவைத்து சன்மானம் பெற்றார். அதன் மூலம் கிடைத்த பொன்னையும், பொருளையும் திருப்பணிக்கே பயன்படுத்தினார்.
தான் கற்ற கல்வியின் பலனை தன் ஊருக்கே அர்ப்பணித்த காரியாருக்கு சிவனும், பார்வதியும் காட்சியளித்து வாழ்த்தினர். சேவை மனம் கொண்டோருக்கு இறைவன் நேரில் காட்சி தருவான் என்பதற்கு, காரியாரின் வாழ்க்கை சரித்திரம் உதாரணம். இவரது குருபூஜை, மாசி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் நடைபெறும்.
காரியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொண்ட நாம், நம் ஊரில் நற்பெயர் பெற, என்ன செய்யப் போகிறோம்!
தி.செல்லப்பா

