PUBLISHED ON : நவ 04, 2018

டாப்சியின் சூளுரை!
'மீ டூ' என்ற, 'ஹேஷ்டேக்' வாயிலாக, திரையுலகில் தங்களுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் பிரச்னைகளை நடிகையர் சிலர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அதேபோல், பாலிவுட்டிலும் ஒரு குழு அமைத்துள்ளனர். அதில், ஆடுகளம் நடிகை டாப்சி, மூன்று பேரில்
ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, 'பாலிவுட்டில் நடக்கும் பாலியல் பிரச்னைகளுக்கு முடிவு கட்டி, அதை சுத்தப்படுத்தி, துாய்மைப்படுத்துவதே என் முதல் வேலை...' என்று சூளுரைத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
மடோனா கொடுக்கும் உத்தரவாதம்!
விஜயசேதுபதியுடன், காதலும் கடந்து போகும் மற்றும் கவண் படங்களில் நடித்த போதும், மடோனா செபஸ்டியனின் மார்க்கெட் எகிறவில்லை. அதனால், 'இனிமேல் மேல்தட்டு ஹீரோ என்பதில் இருந்து மாறுபட்டு, நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்...' என்று கோலிவுட்டில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், சம்பளத்தை கணிசமான அளவு குறைத்திருப்பதோடு, கவர்ச்சிகரமான நடிகையாக உருவெடுக்கவும் உத்தரவாதம் கொடுத்து வருகிறார். அதனால், கவர்ச்சிகரமான கதைகளுடன், சில இளவட்ட இயக்குனர்கள், மடோனாவை முற்றுகையிட்டு வருகின்றனர்.சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு!
— எலீசா
வரலட்சுமியின் உஷார் நடவடிக்கை!
கதாநாயகியாக மட்டுமின்றி, வில்லி மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார், வரலட்சுமி. இதுகுறித்து கேட்டால், 'சினிமாவில், கதாநாயகியாக நீண்டகாலம் பயணிக்க முடியாது. ஆனால், குணசித்திர வேடங்கள் என்கிற போது நெடுந்துாரம் பயணிக்கலாம். அதனால் தான், கதாநாயகியாக நடித்தபடியே குணசித்திர வேடங்களிலும் இப்போதே பயணிக்கத் துவங்கி விட்டேன்...' என்கிறார். எடுத்த கால் வைத்தாலும், கொடுத்து வைக்க வேண்டும்!
— எலீசா
யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டம்!
தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருப்பவர், நடிகர் யோகிபாபு. கூர்கா படத்தில், கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், எலிசா என்ற கனடா நாட்டு மாடல் அழகி, கதாநாயகியாக நடிக்கிறார். ஆக, கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே, யோகிபாபுவுடன், கனடா நாட்டு மாடலிங் நடிகை இணைந்திருப்பது, கோலிவுட்டில் பலருக்கு, அவர் மீது பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* மார்க்கெட் இருக்கும்போது, ஏகப்பட்ட பந்தா செய்த சின்ன குஷ்பு நடிகையின் மார்க்கெட், தற்போது குடை சாய்ந்து கிடக்கிறது. அதனால், மார்க்கெட் இல்லாத நடிகர்களுடன் நடித்து, மீண்டும் மார்க்கெட்டை பிடிக்கும் கோதாவில் குதித்திருக்கிறார் நடிகை. அதோடு, முன்பெல்லாம் துக்கடா கிளாமருக்கே தடை போட்டவர், தற்போது, குட்டை பாவாடை நடிகையாக உருவெடுத்து, படப்பிடிப்பு தளங்களுக்கும் படு கவர்ச்சியாக, 'என்ட்ரி' கொடுத்து, காண்போரை திக்குமுக்காட வைக்கிறார்.
'ஏண்டி... கபடி விளையாட தானே கூப்புட்டேன். அதுக்கு எதுக்குடி ஹன்சிகா மாதிரி குட்டை பாவாடை போட்டுட்டு வர்றே... போய், 'டிராக் பேன்ட்' போட்டுட்டு வா...' என்றாள், தோழி.
* வம்பு நடிகரும், சுள்ளான் நடிகரும், நண்பர்களாக வெளியில் காட்டிக் கொண்டாலும், அவர்களை ஒரே படத்தில் இணைத்து நடிக்க வைக்க, இயக்குனர் ஒருவர் முயற்சித்தார். ஆனால், வம்பு நடிகர் ஒத்து வந்தபோதும், சுள்ளான் நடிகரோ மறுத்து விட்டார். அதோடு, 'நட்பு வேறு, தொழில் வேறு. தொழிலில் அவர் என்னுடன் இணைந்து பணியாற்ற, 'செட்'டாக மாட்டார். என்னை ஓரங்கட்டவே முயற்சி செய்வார்...' என்று நழுவி விட்டார், சுள்ளான்.
'ஒரே வகுப்புல படிச்சுட்டு, எதுக்குடா எப்பப் பாரு... 'அவன் அடிக்கிறான், கிள்றான், குத்தறான்'னு, சிம்பு - தனுஷ் மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க...' என்று கண்டித்தார், ஆசிரியர்.
சினி துளிகள்!
* வடசென்னை படத்தை தொடர்ந்து, வெட்கை என்ற நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார், தனுஷ்.
* விக்ரம் பிரபுவுடன், துப்பாக்கி முனை படத்தில் நடித்துள்ள ஹன்சிகா, அதர்வாவுக்கு ஜோடியாக, 100 என்ற படத்தில் நடிக்கிறார்.
* சிரஞ்சீவியுடன் சைர நரசிம்ம ரெட்டி என்ற படத்தில், நடித்து வரும், விஜயசேதுபதி, அவருக்கு உதவி செய்யும் கேரக்டரில் நடிக்கிறார்.
அவ்ளோதான்!
