
மனதை தொட்ட இளைஞர் மன்றம்!
உறவினர் ஒருவரின் தாய் இறந்த துக்கத்திற்காக, சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். வறுமையில் வாடும் என் உறவினர், தன் தாயின் இறந்த செலவை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்! இந்நிலையில், அந்த கிராமத்தின் இளைஞர் மன்ற தலைவராக உள்ள இளைஞர் ஒருவர், தம் மன்ற ஆட்களுடன் வந்து, என் உறவினரிடம் ஒரு பெரிய தொகையை தந்து, 'கவலைப்படாமல், ஆக வேண்டிய வேலையை பாருங்கள்...' என்று சொன்னது மட்டுமின்றி, தங்கள் இளைஞர் மன்றம் சார்பாக, தங்களால் முடிந்த உடல் உழைப்பையும் தருவதாகச் சொல்லி, களத்தில் இறங்கினர்.
இதை பார்த்த எங்கள் எல்லாருக்கும் வியப்பாக இருந்தது. அந்த இளைஞர் மன்றத் தலைவரை அணுகி, 'எப்படி இவ்வளவு பணம்?' என்று கேட்டேன் நான். அதற்கு அவர், 'எங்கள் கிராமத்தில், எந்த வீட்டில் துக்கம் நடந்தாலும், கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டாரும், ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும். இதை வசூலித்து, சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து, அவரது சுமையை குறைப்பதே எங்கள் குறிக்கோள். துக்கம் தவிர, எதிர்பாராமல் நடக்கும் அசம்பாவித சம்பவங்களுக்கும், இதே விதிமுறைதான்...' என்றார்.
தக்க சமயத்தில் உதவிய அவரை, மனமார பாராட்டினேன். ஊருக்கு ஊர் மன்றங்கள் இருப்பது முக்கியமல்ல; கூடவே இப்படி மனிதாபிமானமும் இருக்க வேண்டும்!
— வே. விநாயகமூர்த்தி, சென்னை.
இதற்காகவா நடக்கிறது சமூக கூட்டங்கள்!
கணவரின் வற்புறுத்தலின் பேரில், எங்கள் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, ஒரு மாதாந்திர கூட்டத்திற்கு, அவருடன் சென்றிருந்தேன். கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், ஜாதகம் போன்றவற்றில், சிற்சில உதவி பரிமாற்றங்கள் செய்து கொள்வதற்கான கூட்டம் அது.
அதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களோடு, தற்போது, அரசு துறையில் வேலை பார்ப்பவர்களும் பேசினர். அதில் பேசிய பல்கலைக் கழக பொறுப்பில் உள்ள ஒருவர், 'நம் சமூக மாணவர்கள், கூடுதல் மதிப்பெண்களுக்காகவோ அல்லது தேர்ச்சிக்காகவோ என்னை அணுகினால், குறைந்த செலவில் எல்லாம் முடித்து கொடுக்கிறேன்...' என்று சலுகை வாக்குறுதி கொடுத்தார்.
அடுத்ததாக பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், 'நம் சமூகத்தினர், ஏதாவது பிரச்னைக்காக போலீசில் சிக்கிக்கொண்டால், ஒரு போன்கால் மட்டும் போடுங்கள்... நான் மீட்டு கொண்டு வந்து விடுகிறேன்...' என்று வாக்குறுதி கொடுத்தார்.
உச்சகட்டமாக விழா கமிட்டியினர், ஒரு ஜிம் மாஸ்டரை அறிமுகப்படுத்தி, 'இவரிடம் உடற்பயிற்சி செய்ய வரும் நம் சமூக இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு குழு வைத்திருக்கிறார்... வீடு காலி பண்ணுவது, ரியல் எஸ்டேட் விவகாரங்கள் மாதிரியான கட்டப்பஞ்சாயத்துகளை, இவரிடம் கொண்டு சென்றால், நம் சமூகத்திற்காகவே இலவசமாகவே எல்லாம் முடித்து கொடுப்பார்...' என்றாரே பார்க்கலாம், எனக்கு தூக்கி வாரி போட்டது.
'தவறு செய்வதற்கும், செய்த தவறிலிருந்து தப்பிக்கவும் தான், இந்த மாதிரி கூட்டம் பயன்படும்...' என்று, திட்டிக் கொண்டே, வீடு வந்து சேர்ந்தேன்.
— கிருத்திகா, பூனாம்பாளையம்.
எதிர்காலம் எதைப் பொறுத்து உள்ளது?
சமீபத்தில், கல்லூரி மாணவியர் சிலர், ரயில் பயணத்தின் போது உரையாடிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது. அதில் ஒருத்தி, தான் கருப்பு நிறமாக இருப்பதைக் குறித்து, மிகவும் வருந்தியபடி பேசிக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும், மீன் போன்ற கண்கள்; வில் போன்ற புருவம். முகம், உடல் கட்டமைப்பு, உயரம் என, அம்சமாக இருந்தாள் அந்த கருப்பழகி.
கருப்பு மீதான இந்த வெறுப்பிற்கு, முக்கிய காரணம் விளம்பரம் மற்றும் சினிமா. விளம்பரம் ஒன்றில், கல்லூரிப் பெண் ஒருத்தி, கருப்பாக இருப்பதால், அவளிடம் யாரும் நட்பு பாராட்டாமல் இருப்பது போலவும், பின், அவள், '7 நாள் சிகப்பழகு!' கிரீமை பயன்படுத்தியதும், அவள் பின்னால் ஆண்கள் கூட்டம், சுற்றித் திரிவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இப்படி, நண்பர்கள் கிடைக்க, திருமணமாக, வேலை கிடைக்க என, எல்லாவற்றிற்கும், பெண் சிகப்பாக இருக்க வேண்டும் என்று காட்டி, 'நீ கருப்பாக இருக்கிறாய், அது, எவ்வளவு அசிங்கம் தெரியுமா? எங்கள் கிரீமைப் பயன்படுத்தி, வெள்ளையாக மாறிவிடு...' என, தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன இந்த விளம்பரங்கள்.
குள்ளமோ, உயரமோ, கருப்போ, சிவப்போ அவரவர் குணம், திறமைகளுக்குத் தான் மதிப்பே தவிர, நிறத்திற்கல்ல!
நம் தோலின் நிறத்துக்கு காரணம்,'மெலனின்' என்ற நிறமி. மெலனின் அதிகளவில் இருப்பதால், ஒருவரின் தோல் நிறம் கருமை பெறுகிறது. இதேபோல் தான் நரையும். வயது ஏற ஏற, மெலனின் உற்பத்தி குறைந்து, கலர், 'சப்ளை' நின்று விடுவதால், தலைமுடி நரைக்கிறது. இப்படி, இன்னும், நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
பெண்கள், குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள், தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, 'என் எதிர்காலம் எதைப் பொறுத்தது? மன உறுதி, கல்வி, திறமை, குணநலன் போன்றவற்றையா அல்லது சிகப்பழகு கிரீமையா?'
சிந்தித்து செயல்படுங்கள் பெண்களே!
— ஆஞ்சலா ராஜம், சென்னை.

