
ஏப்.24 - அட்சய திரிதியை!
சந்திரனின் வளர்ச்சியை, 15 பாகங்களாகப் பிரித்தனர். அந்தப் பாகமே, 'திதி' எனப்படுகிறது. இதில், மூன்றாவது திதி, திரிதியை. ஆங்கிலத்தில் மூன்றை, 'த்ரீ' என்கிறோம். அதுவும், சமஸ்கிருதப் பெயரான திரிதியையும் ஒத்துப்போகிறது. 'அக்ஷய' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு, 'வளர்தல்' என்று பெயர். உலகத்தில், தர்மம் வளர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி அட்சய திரிதியை. இந்த நாளில், அவரவர் இஷ்ட தெய்வத்துக்கு, நீர்மோர் நைவேத்யம் செய்து, தயிர் சாதம் தானம் செய்தனர். எனினும், 'வளர்ச்சி' என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது, இது செல்வத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
மகாபாரதத்தில், 'அக்ஷய' என்ற வார்த்தை கையாளப்படுகிறது. திரவுபதியின் புடவையை, துச்சாதனன் பிடித்து இழுத்த நேரத்தில், அவள், கிருஷ்ணரை சரணடைந்து ஓலமிட்டாள். அப்போது, 'அக்ஷய' என்றார் கிருஷ்ணர். அந்தப் புடவை வளர்ந்து கொண்டே இருந்தது. திரவுபதியின் மானம் காக்கப்பட்டது.
திரவுபதியை போல, சிலர் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொள்வதுண்டு. அவர்கள், திரவுபதி சொன்ன, 'சங்கு சக்ர கதாபாணி; ஸ்ரீமத் துவாரகா நிலையச்சுதா!
ஹே கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதே...' என்ற ஸ்லோகத்தை (அபய மந்திரம்) சொல்லலாம்.
'சங்கு சக்கரம், கதாயுதம் ஏந்திய திருமாலே! துவாரகையில் குடிகொண்டவரே! கோவிந்தனே! தாமரை முகம் கொண்டவரே! உன்னை சரணடைகிறேன்...' என்பது இதன் பொருள்.
சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலை. மாதவி கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள் என்றாலும், கோவலனை தவிர, பிறரை அவள் நாடவில்லை. சேற்றில் முளைத்த செந்தாமரையான மணிமேகலை, திருமண வாழ்வை வெறுத்தாள். மணிபல்லவத்தீவில் இருந்த மணிமேகலா தெய்வம், அவளுக்கு, 'அமுதசுரபி' என்ற பாத்திரத்தைக் கொடுத்தது. அதில், அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் வரும். இதைக் கொண்டு, மக்களின் பசி தீர்த்தாள்.
கண்ணனின் நண்பர் குசேலர். இவர்கள், குருகுலத்தில் இணைந்து படித்தவர்கள். திருமணத்திற்கு பின், குசேலருக்கு பல பிள்ளைகள் பிறந்தனர். வறுமை காரணமாக, நண்பரிடம் உதவி கேட்டு வருமாறு குசேலரின் மனைவி கூறினாள். குசேலருக்கு, அதில் இஷ்டமில்லாவிட்டாலும், கண்ணனின் தரிசனம் கிடைக்குமே என கிளம்பினார். கிழிந்த துணியில் கண்ணனுக்கு பிடித்த அவல் கொண்டு சென்றார். அதை சாப்பிட்டார் கண்ணன். அவர் ஒவ்வொரு பிடியாக அள்ளிப் போடப் போட, குசேலர் வசித்த நகரமே செல்வச் செழிப்பாகி விட்டது. இறைவனை எளிமையாக வணங்கினாலும் போதும், செல்வம் பெருகும் என்பதை, அட்சய திரிதியை நன்னாளில் தெரிந்து கொள்ள வேண்டும். திருமால், பரசுராம அவதாரம் செய்தது, அட்சய திரிதியை நாளில் என்பர்.
இந்த நாளில், லட்சுமி நாராயணரை வணங்குவது மரபு. லட்சுமி நாராயணர் படத்துக்கு, துளசி மாலை அணிவித்து, 'யவை' (சம்பா கோதுமை போல நீளமாக இருக்கும், பூஜைப் பொருள் கடைகளில் கிடைக்கும்) படைக்க வேண்டும். கோதுமையில் செய்த இனிப்பு பண்டங்களும் படைக்கலாம். கோவில்களில், லட்சுமி தாயாருக்கு பூஜை செய்ய வேண்டும்.
இந்நாளில், துர்கா பூஜை, லட்சுமி பூஜை செய்தல், புத்தகம் வெளியிடுதல், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் வாங்குதல், புண்ணியத் தலங்களுக்கு செல்லுதல், வீடு, மனை, கிணறு, விளைநிலம் சீர்திருத்துதல், பதவி பொறுப்பேற்றல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், நகை வாங்குதல், வங்கிக் கணக்கு துவங்குதல் ஆகியவற்றைச் செய்யலாம். செல்வந்தர்கள், அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்தால், பெரும் புண்ணியம் கிடைக்கும்.
அட்சய திரிதியை நன்னாளின் குறிக்கோள், நம் செல்வத்தை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல; கஷ்டப்படுபவர்களுக்கும் உதவுவதாகும்! வசதியுள்ளவர்கள், ஒரு ஏழைப் பெண்ணுக்கு, மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். ஏழை மாணவர்கள் படிக்க உதவுங்கள். நீங்களும் வளர்ந்து, மற்றவர்களையும் வாழ வையுங்கள். அதுதான் உண்மையான அட்சய திரிதியை.
***
தி. செல்லப்பா

