
மற்ற பள்ளிகளும், பின்பற்றலாமே!
சமீபத்தில், என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவளின் மகள், சேமிப்பு பாஸ்புக் ஒன்றை கொண்டு வந்து காட்டினாள்.
'என்னம்மா, இப்பவே வங்கியில் பணம் சேமிக்கிறாயா?' என்று கேட்டதற்கு, 'இல்லை ஆன்ட்டி... எங்க பள்ளியில் கொடுத்த பாஸ்புக் இது...' என்றாள். நான் ஆச்சரியத்துடன் என் தோழியை பார்க்க, அவள் விளக்கி கூறினாள்...
'இவளது பள்ளியில் வகுப்பு வாரியாக பிரித்து, ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ரொக்கப் பரிசு கொடுப்பர்.
'மேலும், அறிவு சார்ந்த மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும், ரொக்கப் பரிசு வழங்கப்படும். அப்பரிசுத் தொகையை அவரவருடைய சேமிப்பு கணக்கில் சேர்த்து, ஆண்டு இறுதியில், அந்த மாணவர்களுடைய பெற்றோரிடம் வழங்குவர்.
'இதனால், அடுத்தடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற ஊக்கமும், இந்த வயதிலேயே, சேமித்து வைக்கும் பழக்கமும், அதை உபயோகமாக செலவு செய்யும் பழக்கமும் ஏற்படுகிறது...' என்று கூறினாள்.
அறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம், சேமிப்பு பழக்கத்தையும் ஏற்படுத்து வதை கண்டு, அப்பள்ளிக்கு ஒரு சபாஷ் போட்டேன். மற்ற பள்ளிகளும், இதை பின்பற்றலாமே!
— பி.சுமித்ரா பிரேம்குமார், சென்னை.
பாடல் இம்சை!
இரவு பஸ் ஒன்றில், சென்னையிலிருந்து நெல்லைக்கு, நானும், என் தோழியும் பயணித்துக் கொண்டிருந்தோம். பின்புற இருக்கையில் இருந்த ஆசாமி, எங்களிடம் பேச முயற்சிப்பதும், மொக்கை ஜோக்குகளை எங்கள் காது பட சொல்வதுமாக, இம்சித்துக் கொண்டிருந்தான்.
'இதெல்லாம் வேண்டாம்...' என்று, அவனிடம் சொல்லி விடலாம் என நான் கூறியும், 'போகிறான் விடு...' என்று, என்னை தடுத்து விட்டாள் தோழி.
நள்ளிரவில் ஒரு ஓட்டலில் பஸ் நிற்க, இறங்கி கழிவறை சென்றுவிட்டு வந்த என் தோழி, பஸ் ஏறி வரும் போது, அவன், தன் மொபைலில், 'வாடி, வாடி... வாடி என் க்யூட் பொண்டாட்டி...' என்ற பாடலை ஒலிக்க விட, வந்ததே கோபம் எனக்கு.
'வயது கோளாறால் எதோ ஜொள்ளு விடுறன்னு பார்த்தா, பாட்டெல்லாம் போட்டு நக்கலடிக்கிறியா... வா, அடுத்த ஸ்டேஷன்ல உன் மீது, 'ஈவ் - டீசிங்' புகார் கொடுக்கிறேன்...' என்று நான் எகிற, ஆசாமி பயத்தில் வியர்த்துப் போனான்.
'சாரி மேடம்... சாரி மேடம்...' என பலமுறை கெஞ்சி மன்னிப்பு கேட்ட அவன், அதன் பின், யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் தூங்குவதுபோல நடித்து பயணித்தான்.
'ஜொள்ளன்களை ஆரம்பத்திலேயே தட்டி வைக்காவிட்டால் இப்படித்தான்' என, நான் கூறியதை, தோழியும் ஆமோதித்தாள்.
பெண்களே, ஜொள்ளு ஆசாமிகள் பேசி வழிந்து இம்சை கொடுத்தால், ஆரம்பத்திலேயே, சி.யூ.டி.,-(கட்) போட்டு விடுங்கள். இல்லையேல், நீங்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதாக கருதி, தொல்லை தர துணிந்து விடுவர் ; கவனம்!
— மாலதி மற்றும் கிருத்திகா, வண்ணாரப்பேட்டை.
மனிதாபிமானம் மகத்தானது!
சமீபத்தில், என் உறவினர், காதணி விழா வைத்து, நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தார். விசேஷ நேரத்தில், அவர் வாசலில் நின்று, வருவோர் அனைவரையும் கைகூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது, முன்பின் அறிமுகமில்லாத ஒரு நபர், மண்டபத்திற்குள் நுழைந்தார். இருந்த போதிலும், அவரையும் அன்போடு வரவேற்று உள்ளே அனுப்பினார் என் உறவினர்.
பிறகு, என்னை அழைத்து, 'அதோ அந்த ஆள், நம்ம சொந்தக்காரர் மாதிரி தெரியலை. அதனால, அந்த ஆளை தூரத்தில் இருந்து, 'வாட்ச்' பண்ணிக்கோ. பசிக்காக, பந்தியில உட்கார்ந்து சாப்பிட்டா, விட்டுவிடு; சாப்பிட்டு போகட்டும். வேறு ஏதாவது செய்கிறாரா என்பதை மட்டும் நோட்டமிடு...' என்று கூறி, என்னை அனுப்பினார்.
நானும், அவரை பின் தொடர்ந்தேன். அவர் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டார். பிறகு, நேரே வெளியே சென்று விட்டார். இதை, என் உறவினரிடம் தெரிவித்தேன். அதற்கு அவரும், 'இது போன்ற சிலர் வந்து வயிற்று பசிக்கு சாப்பிட்டால், நாம் ஒண்ணும் குறைந்துவிட போவதில்லை. ஆனால், வேறு ஏதாவது திருட்டு, சில்மிஷங்களில் ஈடுபடாமல், நாம் கண்காணிக்க வேண்டுமல்லவா...' என்றார்.
அவரது முன்னெச்சரிக்கை உணர்வும், அதே நேரத்தில் அவரது மனிதாபிமான பண்பும் என்னை வியக்க வைத்தது.
— ஆசைப்பாண்டி, ஆரப்பாளையம்.

