sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நானா போனதும்; தானா வந்ததும்! (25)

/

நானா போனதும்; தானா வந்ததும்! (25)

நானா போனதும்; தானா வந்ததும்! (25)

நானா போனதும்; தானா வந்ததும்! (25)


PUBLISHED ON : ஏப் 29, 2012

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரித்திரத்தில், கி.மு., - கி.பி., என்ற பாகுபாடு இருப்பதுபோல, இளைஞர் வாழ்க்கையில், க.மு.,- க.பி., என்ற பிரிவுகள் இருப்பது, எல்லாரும் அறிந்ததே. (க.மு., கல்யாணத்துக்கு முன்; க.பி., கல்யாணத்துக்குப் பின்!)

என், 23வது வயதில், பத்திரிகை காரியாலயத்தில், நான் வேலையில் சேர்ந்த போது, பிரம்மச்சாரியாகத் தான் இருந்தேன்.

'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்...' போல, வீட்டுக்கு ஒருத்தர் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில், அப்போது எனக்கு ஒரு பிடிப்பு இருந்தது.

அதாவது, ஒரு வீட்டில் மூன்று, நாலு சகோதரர்கள், இரண்டு, மூன்று சகோதரிகள் என்று கூட்டுக் குடும்பமாக, அந்தக் காலத்தில் இருப்பர்.

அந்தக் கும்பலில், யாராவது ஒருத்தராவது, திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

ஏனெனில், அந்த ஒருத்தனாவது, சுயநலமில்லாமல், குடும்பத்தின் மொத்த நன்மையைக் கருதி, மற்றவர்களுக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவு, பிணக்குகளைத் தீர்க்கும், பொது மனிதனாகத் திகழ்வான் என்பது என் அனுமானம்.

ஆகவே, நானும் வாய்க்கு வாய், 'எனக்குக் கல்யாணம் வேண்டாம். குடும்ப மொத்தத்தின் சேவைக்காக என்னை அர்ப்பணம் செய்து கொள்கிறேன்...' என்று சொல்லி, சுதந்திர பிரம்மச்சாரியாக, ஓட்டல் சாப்பாடு, ரூம் வாழ்க்கை என்று இருந்தேன்.

நான் வேலை பார்த்த காரியாலயத்தில், ஆசிரிய இலாகாவில் மூன்று பேர் இருந்தோம். ரா.கி.ர., புனிதன், நான், மூவரும் சேர்ந்து செய்கிற காரியத்தை, ஆசிரியர் எஸ்.ஏ.பி., ஒருத்தரே செய்வார். ஆகவே, ஆசிரிய இலாகாவில் நாலு பேர் இருந்தோம் என்பதே சரி.

நான் ஓட்டலில் சாப்பிடும் பிரம்மச்சாரியாதலால், 'ஐயோ பாவம்... நாக்கு செத்திருக்குமே...' என்று நண்பர்கள், அவ்வப்போது தங்கள் வீட்டு விசேஷங்களின் போதெல்லாம் சாப்பிட அழைப்பர். கிராக்கி செய்யாமல், அழைப்புகளைப் பெருந்தன்மையாக (அல்லது சிறுந்தன்மையாக) ஏற்றுக் கொள்வேன்.

எங்கள் மூவரில், ரா.கி.ர., மூத்தவர். பதவியிலும், வயதிலும் அனுபவத்திலும் சீனியர்.

ரா.கி.ர.,வும் புனிதனும், 'நீ... வா... போ...' போட்டுப் பேசிக்கொள்வர். நானும், புனிதனும், 'வாடா... போடா...' என்று பேசிக் கொள்வோம். (இரண்டு பேரும் சேலம், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாதலால் இணக்கம் அதிகம்) எங்க மாவட்டத்து வட்டார வழக்கு வார்த்தைகளை பயன்படுத்திப் பேசிக் கொள்வதில், மகா சந்தோஷம்.

'சாமி... மெரமணை பிரமாதம்...' என்று பேசிக் கொண்டால், ரா.கி.ர., முழிப்பார். 'என்னடா மெரமணை...' என்பார்.

'சாமி ஊர்வலம் போவதைத்தான், எங்க வட்டாரத்தில், 'மெரமணை' என்போம்...' என்று, அவருக்கு விளக்குவோம்.

தர்பீஸ் பழத்தை, எங்கள் வட்டாரத்தில், 'கோச்சாப் பழம்' என்போம்.

அந்த வார்த்தையைக் கேட்டாலே, ரா.கி.ர., காதைப் பொத்திக் கொண்டு, 'சகிக்கலையே...' என்று ஓடுவார்.

'தர்ப்பீஸ் மட்டும் வாழுதோ...' என்போம்.

ரா.கி.ர., தஞ்சை மாவட்டக்காரராதலால், சங்கீதம், வெற்றிலை போடுதல் ஆகிய பழக்கம் உண்டு. வெற்றிலையை, அவருடைய பெட்டியிலிருந்து எடுத்து, இரண்டு சீவலுடன், ஒரு கசக்குக் கசக்கி, நான் வாயில் திணித்துக் கொண்டால், 'ஐய்யோ... ஐய்யோ... ஏய்யா இப்படிக் கொலை பண்ணுறீர்?' என்று பதைத்து, 'இரும்... நான் மடிச்சுத் தர்றேன்...' என்று ஒரு வெற்றிலையை எடுத்து, அழகாக நீவித் துடைத்து, சுண்ணாம்புத் தடவி, நரம்பு கிள்ளி, இரண்டாகக் கிழித்து, இரண்டு சீவலை வைத்து அழகாகச் சுருட்டி மடித்து, 'இப்ப போட்டுக்கோய்யா...' என்று எனக்குத் தருவார்.

அவரை எரிச்சல் மூட்டுவதற்காகவே, குறும்பாக நான் வெற்றிலையை வெறுமே சுருட்டி வாயில் அடைத்துக்கொண்டு, இரண்டு சீவலையும் போட்டுக் கொள்வேன்.

'இப்படிப் போட்டுக் கொள்வதும் ஒரு ருசிதான்...' என்று சொல்வேன்.

எனக்குக் கல்யாணமானதும், ரா.கி.ர., என்னை, 'வாங்க... போங்க...' என்று, மரியாதை போட்டுக் கூப்பிடத் துவங்கினார்.

ஒரு தரம், ஆசிரியர் தன்னிடம், 'நீங்களெல்லாம் வா... போ... என்றுதான் கூப்பிட்டுக் கொள்வீர்களா... தனியாக இருக்கும்போது, அப்படி அழைத்துக் கொள்ளலாம்... ஆனால், வெளியார் யாராவது ஆபீசுக்கு வந்திருக்கும் போது, அப்படி அழைத்துக் கொள்வது, பார்க்க நன்றாக இருக்காது... ஆபீசுக்கான மரியாதையாகவும் இருக்காது...' என்பது போல கூறியதாகத் தெரிந்தது.

ஆசிரியர் எல்லாரையும், ஆசிரிய இலாகா உதவியாளர் கண்ணபிரான் உட்பட, 'வாங்க... போங்க...' போட்டுத்தான் அழைப்பார். ஆகவே, ஆசிரியரை அனுசரித்து, ரா.கி.ர., என்னை, மரியாதையாக கூப்பிடத் துவங்கினார்.

ஆரம்பத்தில் எனக்குக் கூச்சமாயிருந்தது. 'என்ன சார்... என்னைப் போய், வாங்க, போங்கன்னு கூப்பிட்டுக் கொண்டு?' என்றேன்.

அப்புறம், 'இதுவும் நன்றாகத்தான் இருக்கு... நமக்கு கல்யாணமாகி, ஒரு மெச்சூரிட்டி வந்திருப்பதால் தான், ரா.கி.ர., அப்படிக் கூப்பிடுகிறார்...' என்று நினைத்து, 'ங்க' அழைப்பில் மகிழ்ச்சியோடு இருந்தேன்.

ஆனால், புனிதனுக்கும், எனக்கும் இடையில் மட்டும், அந்த 'ங்க' போட்டுப் பேசிக்கொள்ளும் வழக்கம் அமலாகவில்லை.

ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்களாதலால், 'அடா... புடா...' தான் சுவையாக இருந்தது.

மூவருமே, புரசைவாக்கம், வெள்ளாளத் தெருவாசிகளாக இருந்ததால், ஏதாவது மீட்டிங், ஈட்டிங் (ஓட்டல்) போவதாக இருந்தால், ஒருத்தர் வீட்டுக்குச் சென்று இன்னொருத்தர் குரல் கொடுப்போம்.

ஒருநாள், என் வீட்டு வாசலிலிருந்து, 'அவன் இருக்கானா?' என்று, கேட்டார் புனிதன்.

என் மனைவி, ஏதோ காரியத்தில் இருந்தவள், 'இல்லையே... போயிட்டானே...' என்று, அதே, 'ன்' போட்டு அவசரமாகப் பதிலளித்து விட்டாள்.

இதை பெரிய ஜோக்காக எடுத்துக்கொண்டு, சிரித்து மகிழ்ந்தோம்.

அப்புறம் நான் யோசித்தேன். புனிதனிடம் மெதுவாக ஒருநாள் கூறினேன். 'டேய் பி.எஸ்.எஸ்... ரா.கி.ர., 'ங்க' போட்டு மரியாதையாகக் கூப்பிடுகிறார். நீயும், நானும் கூட இனிமேல், 'ங்க' போட்டு மரியாதையாக பேசிக்கொள்ளலாமாடா... அது ரொம்ப டிகினிபைடாக இருக்குமே...' என்றேன்.

புனிதன் சிரித்துவிட்டு, 'நீ வேணுமானால், மரியாதையாகக் கூப்பிட்டுப்போ... ஆனால், நான் உன்னை வாடா, போடான்னுதான் கூப்பிடுவேன்...' என்று ஒப்பந்தத்துக்கு வர மறுத்து விட்டார்.

அவர், 'வாடா... போடா...' என்றுதான் கடைசி வரை கூப்பிட்டு வந்தார். எனக்கும், அவர் கடைசி வரை, 'அவன்' தான்.

முற்றும்

பாக்கியம் ராமசாமி






      Dinamalar
      Follow us