தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 29, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வங்கிகளில் ஊழியர்கள் பலருக்கும், வி.ஆர்.எஸ்., கொடுத்த பிறகும், வேலைகள் சுணக்கமில்லாமல் தானே நடக்கின்றன... அப்படியானால், இவ்வளவு ஆண்டுகளாக நம் பணத்தை வெட்டி, வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் என்பது தானே பொருள்...' என்றார் குப்பண்ணா...

'உண்மை தான்... பரமார்த்த குரு கதைகளில் ஒன்று இதை விளக்குகிறது...' என்று ஆரம்பித்துக் கூறினேன்:

குருவுக்கு ஓர் ஊசி தேவைப்பட்டது. நான்கு சீடர்களும் உடனே புறப்பட்டனர்; ஓர் ஊசியை வாங்கினர்! அதை நான்கு பேரும் சேர்ந்து எப்படிக் கொண்டு செல்ல முடியும்? ஆகவே, ஒரு பெரிய வாழை மரத்தை கொண்டு வந்து, ஊசியை அதில் செருகி, இம்மரத்தை நால்வரும் தூக்கிச் சென்றனர்... இது பரமார்த்த குரு கதைகளில் ஒன்று.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர் பார்க்கின்சன்...பிரிட்டிஷ் ராணுவ அலுவலகத்தில் பணிபுரியும்போது, ஒருவர் வேலையை பலர் செய்து, அநாவசியமாக காலத்தை விரயமாக்குகின்றனர் என்பதைக் கண்டு பிடித்தார்.

பொழுதுபோக்குக்காக, அரசாங்க அலுவலகங்களில் எப்படி வேலை நடக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்தார். வேலைகள் எப்படிக் குட்டி போடுகின்றன என்பதை பற்றி இவர் வெளியிட்ட கட்டுரைகளே, 'பார்க்கின்சன் லா' என்று புகழ் பெற்று விளங்குகிறது.

இந்த நியதியின் அடிப்படையான அம்சங்களாக அவர் கூறுகிறார்... 'தனக்கு அவகாசம் இருப்பதாக காட்டிக் கொண்டால், மேலும், புது வேலை சுமத்தப்படும் என்பதாலோ அல்லது வேலையில்லாமல் இருக்கிறான் என்று சொல்லி விடுவரோ என்ற பயத்தாலோ, வேலையை யாரும் ஒழுங்காகச் செய்து, சீக்கிரமாக முடிப்பதில்லை...' என்று.

மேலும் அவர் சொல்கிறார்... 'ஒரு குமாஸ்தாவை நியமித்தால் போதும் என்றால் கூட, அந்த வேலையைப் பங்கிட்டு இருவர் நியமிக்கப்படுவர். மற்றவருக்கு எங்கே உத்தியோக உயர்வு கிடைத்து விடுமோ என்று பயப்பட்டுக் கொண்டே, எல்லாரும் வேலை செய்வர். பலர் தன் கீழ் வேலை செய்தால் தான் பதவி உயர்வு கிடைக்க வழியும், பலர் தன் கீழ் வேலை செய்கின்றனர் என்ற அந்தஸ்தும் ஏற்படும். ஒரு வேலையைச் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேரும், ஒருவர் மற்றவருக்கு வேலை இருக்கும்படி ஏதாவது செய்து கொண்டே இருப்பர். ஆகவே, அவர்களுக்கு ஓய்வே இராது. யாரும் பொழுதை வீணாக்கவில்லை. ஏதோ வேலை செய்கின்றனர்! ஆனால், உருப்படியான வேலையில்லை...' என்கிறார்.

இவ்வளவு விஷயத்தையும் குறிப்பிட்ட இவர் வேலையைச் சுலபமாகச் செய்ய சில வழிகளைக் கூறி, 'இவற்றை யாரும் பின்பற்றுவர் என்கிற நம்பிக்கை எனக்கில்லை...' என்றும் கூறுகிறார்.

ஒரு வேலையை, நாளை செய்யலாம் என்று ஒத்திப் போடாதே!

தான் செய்ய வேண்டிய வேலை அல்ல என்று பிறரிடம் ஒதுக்க முயற்சி செய்யாதே.

ஓய்வு கிடைக்கும்; அதைத் தக்கபடி பயன்படுத்து.

இம்மூன்று வழிகளையும் கடைபிடித்தால், அரசாங்கத்தில் இப்போது வேலை செய்கிறவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இருந்தால் போதும்... என்பது இவர் கருத்து; அது உண்மைதான் என்பதற்கு வங்கிகளின், வி.ஆர்.எஸ்., ஒரு உதாரணம்... என்றேன்.

— சரி தானே!

***

சாமி சிதம்பரனார், என்பவர் 1939ல், எழுதிய நூல் ஒன்றில், கீழ் கண்ட குறிப்பு காணப்படுகிறது:

பொது வாழ்வில் தலையிடுவதற்கு முன், பெரிய, 'மைனராய்' விளங்கினார் ஈ.வெ.ரா., அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி, இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாக கூறுவர்; சில சமயங்களில் அவரும் கூறுவார்.

அந்நாளில், ஈ.வெ.ரா., பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார்; இதற்கேற்ற கூட்டாளிகள் பலர்.

நிலாக் காலங்களில், ராமசாமியும், அவர் கூட்டாளிகளும், விலை மாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்வர். இரவு முழுவதும் ஆற்று மணலில் கூத்தடித்து விட்டு, விடியற்காலத்தில் தான் வீட்டிற்குத் திரும்புவர்.

இக்கூட்டத்துக்கு, ஈ.வெ.ரா., வின் வீட்டிலிருந்து தான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி, தாய், தந்தையருக்குத் தெரியக் கூடாது.

இச்சமயம், தன் மனைவி நாகம்மையின் உதவியையே நாடுவார் ஈ.வெ.ரா., அம்மையாரும் வீட்டார் அறியாமல், கணவன் விரும்பும் உணவுகளை சமைத்து விடுவார். அவ்வுணவுகள், வீட்டுப் புழக்கடை வழியாக வண்டியேறி காவிரிக்கு போய் விடும்.

***

பி.பி.சி., தொலைக்காட்சியில், 'அவுட் லுக்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மிகவும் இன்ட்ரஸ்டிங் நிகழ்ச்சி. அதில், 'ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் சுத்தமானவர்கள் யார்?' என்பதைக் கண்டு பிடிக்க ஒரு சர்வே நடத்தினர்.

அதன்படி, பிரிட்டிஷார் தான் மிகவும் சுத்தமானவர்கள் எனக் கண்டறிந்தனர்.

அதே சமயம் பிரெஞ்சுக்காரர்கள் தான் மிகவும் அசுத்தமானவர்கள் என்று அதே சர்வே கூறியது. அதற்கான காரணங்கள்...

பிரெஞ்சு பெண்மணிகளில் சரி பாதிப்பேர், பற்களை சுத்தம் செய்யும் பழக்கமற்றவர்கள். உணவு உண்டபின், காபி குடித்த பின் வாய் கொப்பளிக்காதவர்கள்!

பிரெஞ்சுக்காரர்களில், 50 சதவீதம் பேர், பற்பசையே உபயோகிப்பது கிடையாது.

பிரெஞ்சு ஜனத்தொகையில், 30 சதவீதம் பேர், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தான் உடைகளை மாற்றுகின்றனர்.

ஒவ்வொரு பிரெஞ்சுக்காரனும், வருடத்திற்கு இரண்டு சோப்புக் கட்டிகள்தான் பயன்படுத்துகிறான்.

கால் நகங்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் வெட்டுகிறான்; மூக்கில் துருத்திக் கொண்டிருக்கும் முடி பற்றி கவலையே கொள்வதில்லை.

ஒரு முறை ஷூ வாங்கி விட்டால், பின்னர் அதற்கு பாலீஷே போடுவதில்லை; கிழிந்த சாக்ஸ் பற்றியும் கவலைப்படுவதில்லை!

இயற்கை உந்துதல்களை முடித்த பின், காகிதத்தால் துடைத்து போட்டு விடுகின்றனர். பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குளிக்கும் போது தான், தண்ணீரால் சுத்தம் செய்கின்றனர்!

உவ்வே! (இவைகளால் தான் நிறைய சென்ட் உபயோகிக்கின்றனரோ?)
***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us